×

திருநாம சங்கீர்த்தனம் ஏன் உயர்ந்தது?

தொண்டரடிப்பொடி ஆழ்வார் மிகவும் கம்பீரமாக ஆண்டவனையே கூப்பிட்டுச் சொல்கிறார். என்னுடைய தேஜஸ், என்னுடைய வலிமை, என்னுடைய மனத்தெளிவு… எல்லாவற்றுக்கும் என்ன காரணம் தெரியுமா? உன்னுடைய நாம ஸங்கீர்த்தன பலம்தான் என்கிறார்.

‘‘மூவுலகம் உண்டு உமிழ்ந்த முதல்வா! நின் நாமம் கற்றஆவலிப் புடைமை கண்டாய்’’


அப்படியென்ன திருநாம ஸங்கீர்த்தனத்துக்கு விசேஷம்?


அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை மனிதன் அடைய வேண்டிய பேறுகள். `சதுர்வித புருஷார்த்தம்’ என்று வடமொழியிலே சொல்கிறார்கள். இதிலே எது உயர்ந்த புருஷார்த்தம்? (உயர்ந்த பேறு) கைங்கர்யம்தான்!

இதைப்பெற சாத்திரங்கள் சொல்லும் வழிகள் என்ன?

கீதையிலே பல வழிகளைக் காட்டுகிறான் கண்ணன். கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்று அடுக்கி அடுக்கிப் பேசுகிறான். ஆனால், இந்த யோகங்களைக் கையாண்டு எளிதில் பகவானை அடைந்து விடலாமே என்று நினைக்க முடியுமா? எத்தனையோ ரிஷிகளும், முனிவர்களும், இதே பிழைப்பாகச் செய்து கொண்டிருந்தும், பகவானை உணர முடியவில்லை.

இதைச் செய்ய முடியாதவர்கள் கடைத்தேறுவது எப்படி?

ஒரு ரிஸர்வேஷன் (ஒதுக்கீடு) தருகிறார் பகவான். பகவானை அடைய எளிய வழியாக, யாகங்களைவிட எளிமையாக எல்லோரும் கைக்கொள்ள வேண்டிய மார்க்கம் திருநாம ஸங்கீர்த்தனம்தான். ஆசாரியர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

திருநாம ஸங்கீர்த்தனம் ஸர்வாதிகாரமானது. யார் வேண்டுமானாலும் பகவந்நாமாவைப் பாடலாம், ஆடலாம், ஜாதி, இனம், மொழி எதுவுமே தடை கிடையாது. ஸகஸ்ரநாம அத்யாயத்திலே பீஷ்மாச்சாரியார், திவ்யநாம ஸங்கீர்த்தனம் ஒரு சேதனனை (ஜீவன்) பிறவித் தளையிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்று அடித்துச் சொல்கிறார்.

``கிம் ஜபத் முச்யதே ஜந்துர்
ஜந்ம ஸம்ஸார பந்தநாத்’’
``ஜந்ம ஸம்ஸார பந்தம்’’ என்பது பிறவித்தளை.


திருமங்கையாழ்வார் இந்த நாம வைபவத்தைப் பற்றிச் சொல்லும்போது, பெற்றதாயினும் ஆயின செய்யும் என்கிறார்.

‘‘நீள் விசும்பு அருளும்…அருளொடு
பெருநிலம் அளிக்கும் வலம் தரும்…மற்றும்
தந்திடும்…பெற்ற தாயினும் ஆயின செய்யும்….’’


(பெரியதிருமொழி 11)

2. காரியம் நிறைவேற இந்தப் பாசுரத்தை ஓதுங்கள்

அருமா நிலம் அன்றளப்பான் குறளாய்
அவுணன் பெருவேள்வியில் சென்றிருந்த
பெருமான் திருநாமம் பிதற்றி நுந்தம்
பிறவித்துயர் நீங்குதும் என்ன கிற்பீர்!
கருமா கடலுள் கிடந்தான் உவந்து
கவை நா அரவின் அணைப்பள்ளியின் மேல்
திருமால் திருமங்கையோ டாடு தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே!


(பொருள்: இந்திரன் ராஜ்யத்தை இழந்த அந்த நாளில், அளக்கமுடியாத இப்பெரு நிலத்தை அளந்து பெறுவதற்காக அசுரனான மகாபலியினுடைய பெரிய யாகத்தில், ஒரு யாசகனாகச் சென்று யாசித்த ஸர்வேஸ்வரனான வாமனனே இங்கு பள்ளி கொண்டிருப்பதால், உங்கள் விருப்பத்தையும் செய்து முடிப்பான். பிறவித்துயரையும் நீக்குவான். எனவே அவன் திருநாமங்களை அடைவு கெடச் சொல்லி, உங்களுடைய பிறவித் துன்பங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும்).

- ஸ்ரீராம்

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்