×

நல்ல வருவாய் தரும் சப்போட்டா !: ஆண்டுக்கு ரூ.12 லட்சம்

ரசாயன உரம், பூச்சி மருந்துகள் இல்லாமல் இயற்கைமுறை உரங்களைப் பயன்படுத்தி சப்போட்டா விவசாயத்தில் ஒரு ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் லாபம் ஈட்டிவருகிறார் நெல்லையைச் சேர்ந்த விவசாயி நடராஜன். சேரன்மகாதேவி தாலுகா, மேலச்செவல் பேரூராட்சிக்கு உட்பட்ட கரிசல்பட்டி சாலையில் கொலுமடை கிராமத்தில் உள்ளது இவரின் நிலம். சப்போட்டா, நெல்லிக்காய் மற்றும் தென்னை உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் பராமரித்து வருகின்றார். ஒரு நாள் மதியப் பொழுதில் அவருடைய விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தித்துப் பேசினோம். “ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். ஆரம்பத்தில் நான் கல்குவாரிகளில் பணி செய்து வந்தேன். அந்தப் பணியை விட்டுவிட்டு மனதிற்கு நிம்மதி கிடைக்கும் விவசாயத்தில் முழுதாக ஈடுபட முடிவு செய்தேன். என்னுடைய அப்பா சண்முகம் நெல், வாழை விவசாயம் செய்தார். சிறுவயது முதல் என்னுடைய அப்பாவின் விவசாயப் பணிகளைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன். பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விவசாயம் செய்தால் மட்டுமே பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக மகசூல் பெற முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் ரசாயனக் கலப்பின்றி இயற்கை முறையிலான உரங்களை மட்டுமே பயன்படுத்தி சரியான முறையில் அதிக மகசூல் பெற முடியும். இப்படி இயற்கை முறையில் விவசாயம் செய்து கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு தற்போது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதோடு, அப்பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கிறது. எனவே பெரியளவில் நிலம் வாங்கி அதில் இயற்கை முறையில் விவசாயம் செய்தால் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டமுடியும் என்ற நம்பிக்கையில் கடந்த 9 வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். 60 ஏக்கரில் இயற்கைமுறை விவசாயம் கொலுமடை கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். இதில் மாமரம் 26 ஏக்கரிலும், தென்னை 13 ஏக்கரிலும், பெரிய நெல்லிக்காய் 2 ஏக்கரிலும், நெல் 2 ஏக்கரிலும், சப்போட்டா 13 ஏக்கரிலும் பயிர் செய்துள்ளேன். இது தவிர வரப்புகளைச் சுற்றிலும் தேக்கு, குமிழ், செம்மரம், வேம்பு போன்ற மரங்களையும் நட்டு வளர்த்து வருகிறேன். கிணற்று நீர் மூலம் சொட்டுநீர் பாசன முறைகளைப் பயன்படுத்துகிறேன். இதில் சொட்டுநீர்ப் பாசனத்துக்கான குழாய்களை பூமிக்கடியில் புதைத்து பயன்படுத்துகிறேன். மாட்டுச் சாணம், வேப்பம் புண்ணாக்கு, இலுப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பஞ்சகாவ்யா மற்றும் ஈமு கரைசல் எனஇயற்கை முறையில் கிடைக்கும் உரங்களையே பயன்படுத்துகிறேன். இதனால் நான் உற்பத்தி செய்கிற தேங்காய், நெல், நெல்லிக்காய், சப்போட்டா பழம் உள்ளிட்ட பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த விவசாயப் பணிகளில் மிகுந்த மனநிம்மதி கிடைப்பதோடு, லட்சக்கணக்கில் லாபமும் கிடைக்கிறது.ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் லாபம் தற்போது ஒரு ஆண்டுக்கு என்னிடம் உள்ள ஒரு சப்போட்டா மரத்திலிருந்து மட்டுமே குறைந்தது 150 கிலோ வரை பழம் கிடைத்தது. இதன் மூலம் மொத்தம் உள்ள 370 மரங்களில் இருந்து ஒரு ஆண்டுக்கு 55,500 கிலோ பழம் கிடைத்தது. ஒரு கிலோ சப்போட்டா ரூ.35 வீதம் 55,500 கிலோவுக்கு ரூ.19,42,500 வருமானம் கிடைத்தது.இதில் மேற்சொன்னபடி அனைத்து செலவுகளுக்கும் ரூ.6 லட்சம் கழித்து போக லாபம் மட்டும் ரூ.12 லட்சத்துக்கு மேல் கிடைத்தது. இனிவரும் ஆண்டுகளில் முறையாக கவாத்து செய்து பராமரித்து வந்தால் கூடுதல் மகசூல் மூலம் லாபம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் நடராஜன். ரூ.6 லட்சம் வரை செலவு ஆண்டுதோறும் பருவச் சூழல்களை பொறுத்து சப்போட்டா மரங்களை சீரான முறையில் கவாத்து (மரக் கிளைகளை வெட்டிவிடுவது) செய்ய வேண்டும். இப்படி கவாத்து செய்யும் பகுதிகளில் புதிய கிளைகள் முளைத்து பூக்கள் அதிகமாக பூத்து, காய்கள் வருவதால் அதிகளவு பழ மகசூல் பெறலாம். தொடக்கத்தில் மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசன குழாய்கள் பதிப்பது, பராமரிப்பு செலவுகள், இயற்கை உரங்களுக்கான செலவுகள், வேலையாள் கூலி மற்றும் பழங்களை பறித்து பெட்டிகளில் வைத்து மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்துக்கும் அதிகபட்சம் ரூ.6 லட்சம் வரை செலவானது. அதன் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மரங்களின் பராமரிப்பு, வேலையாள்கூலி மற்றும் பழங்களைப் பறித்து மார்க்கெட்டுக்கு அனுப்புவதற்கும் ஏற்றுக்கூலி செலவானது. ஆரம்பத்தில் செலவுகள் கூடுதலாக இருந்ததால் லாபம் சற்று குறைவாகவே கிடைத்தது.வருடத்துக்கு 4 முறை பழங்கள் பறிப்புஇயற்கை முறையில் பயிர் செய்து, சரியான பருவத்தில் அறுவடை செய்து, இயற்கை முறையிலேயே பழுக்கவைத்து கிடைக்கும் சப்போட்டா பழங்களின் ருசி தனித்தன்மையுடன் இருப்பதால் அதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் சப்போட்டா சீசனைப் பொறுத்து மற்றவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 2 முறை பழங்கள் கிடைக்கும். ஆனால் இயற்கை முறையில் பயிர் செய்யும் எனக்கு ஒரு ஆண்டுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை வீதம் மொத்தம் 4 முறை பழங்கள் கிடைக்கும். இதனால் சீசன் தவிர மற்ற காலங்களிலும் மார்க்கெட்டில் சப்போட்டா பழத்தின் தேவையை என்னால் ஓரளவு பூர்த்தி செய்ய முடிகிறது. இதனால் நான் உற்பத்தி செய்யும் பழங்களுக்கு மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைக்கிறது. எனக்கு ஒரு கிலோ சப்போட்டாவுக்கு நெல்லை மற்றும் சென்னை மார்க்கெட்டுகளில் ரூ.35 முதல் ரூ.40 வரை தற்போது கிடைக்கிறது. இப்பழங்கள் ரூ.60க்கு சில்லறை கடைகளில் கிடைக்கும். ரசாயன முறையில் பயிர் செய்யப்படும் சப்போட்டாவைக் காட்டிலும் இயற்கை முறையில் பயிர் செய்யும் எனக்கு கிலோவுக்கு 10 ரூபாய் கூடுதலாகவே கிடைக்கிறது.தொடர்புக்கு: நடராஜன்- 94431 57779.தொகுப்பு: க.கதிரவன்  படங்கள்: பரமகுமார்

The post நல்ல வருவாய் தரும் சப்போட்டா !: ஆண்டுக்கு ரூ.12 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Sapota ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...