×

பாட்டினில் அன்பு செய்!

‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்று பாடினார் பாரதிதாசன். பாட்டு அன்பை வளர்க்கும். துன்பத்தைப் போக்கும். இதயத்தை இளகச் செய்யும். இன்னுயிரை வளர்க்கும். குழந்தையைத் தூங்கவைக்க தாய் பாடும் பாட்டுதான் தாலாட்டு. ‘பாடிக் கொண்டு வேலை செய்தால் அலுப்பிருக்காது’ என்பதற்கு இறைத்தூதரின் இனிய வாழ்விலும் எடுத்துக்காட்டு உண்டு. ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு திடீரென்று ஒரு நாள் அந்தத் திடுக்கிடும் செய்தி வந்தது. கிட்டத்தட்ட பத்தாயிரம் வீரர்களுடன் மக்காவின் எதிரிகள் மதீனாவைத் தாக்க இருக்கிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. செய்தி கிடைத்தவுடனே நபிகளார் ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்.

இறைத்தூதரின் ஆருயிர்த் தோழர்களில் ஒருவரான சல்மான் பார்சி ஓர் அருமையான ஆலோசனை கூறினார். “இறைவனின் தூதரே, நாங்கள் பாரசீக நாட்டில் இருந்தபோது எங்களை எதிரிகள் தாக்க வந்தால் எங்களைச் சுற்றி அகழி தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்” என்றார். ஆலோசனை ஏற்கப்பட்டது. மதீனா நகரைச் சுற்றிலும் அகழி தோண்டுவது என்று தீர்மானமாயிற்று. பத்துப் பத்துப் பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றினர்.

நபிகளாரும் இதில் பங்குகொண்டார். அந்தச் சமயத்தில் முஸ்லிம்கள் மிகுந்த ஏழ்மையிலும் வறுமையிலும் இருந்தனர். ஆகவே பசித் துன்பத்தையும் வேலைச் சுமையையும் மறப்பதற்காக நபித்தோழர்கள் பலரும் பாடல்கள் பாடினர். ஸஹ்லு இப்னு ஸஆத் எனும் தோழர் கூறுகிறார்: “நாங்கள் நபியவர்களுடன் அகழியில் இருந்தோம். மண்ணைத் தோளில் சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் பின்வரும் வரிகளைக் கூறினார்: “இறைவா.! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை.

முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் நீ மன்னிப்பாயாக.” இந்த வரிகளைக் கேட்டு மக்காவைத் துறந்து வந்த முஸ்லிம்களும் அவர்களுக்கு உதவிய மதீனத்து முஸ்லிம்களும் பெரிதும் மகிழ்ச்சியும் ஊக்கமும் அடைந்தனர். பணிகளில் மேலும் மும்முரமாய் ஈடுபட்டனர். இன்னொரு முறை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா என்பவரின் கவிதை வரிகளைச் சொல்லிக் கொண்டே நபிகளார் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார்.

“இறைவா... நீ இல்லையென்றால் நாங்கள்
நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். தர்மம்
செய்திருக்க மாட்டோம். தொழுதும் இருக்கமாட்டோம்
எங்கள் மீது நீ அருள்புரிவாயாக. எதிரிகளை
நாங்கள் சந்திக்கும்போது எங்கள் பாதங்களை
நிலைபெறச் செய்வாயாக. இந்தக் குறைஷிகள்
எங்கள் மீது அக்கிரமம் புரிந்துள்ளார்கள். இவர்கள்
எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்
அதற்கு நாங்கள் இடம்தர மாட்டோம்”


(புகாரி, ரஹீக்)

நபிகளார் இந்தக் கவிதையின் இறுதி வரியை மட்டும் சப்தத்துடன் மீண்டும் கூறுவார்களாம். சத்தியத்தைச் சொல்கின்ற பாட்டுத் திறத்தால் இறைவனின் அன்பையும் பெறமுடியும்.

- சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“தாவூது (நபிக்கு) மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை அவருடன் சேர்ந்து இறைவனைத் துதித்துப் (பாடல்கள்)
பாடிக்கொண்டிருந்தன.” (குர்ஆன் 21:79)

Tags : Pattin ,
× RELATED சாத்தான்குளம் வழக்கில் பென்னிக்ஸ் வீட்டில் மீண்டும் சிபிஐ விசாரணை