×

ஆறகழூர் அஷ்ட பைரவர்கள்

* முருகப் பெருமான் அவதரிப்பதற்கு முன்னரே தோன்றிய யுகாந்தரப் பழைமை வாய்ந்த திருத்தலம்.

* மன்மதன், ஈசனின் நெற்றிக் கண்ணால் சாம்பலாக்கப்படுவதற்கு முன், ஈசனை பூஜித்ததால் இத்தல ஈசன், காமநாதீஸ்வரர் என வணங்கப்படுகிறார்.

* சேலத்தைச் சுற்றியுள்ள பஞ்சபூதத்தலங்களில் ஆறகழூர், வாயு தலமாகும்.

* ஒரே கோயிலில் அஷ்டபைரவர்கள் அருள்வது, வேறெங்கும் காணவியலாத அபூர்வம்.

* பைரவர் என்றால், பயத்தைப் போக்குபவர், பயத்தைத் தருபவர் என்று இரு பொருள் உண்டு. தன்னை வணங்கும் பக்தர்களின் பயத்தைப் போக்கியும், அவர்களின் எதிரிகளுக்கு பயத்தைத் தருவதும் பைரவரின் அருள்.

* இத்தல அஷ்டபுஜ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று, உலக நன்மைக்காக பைரவ யாகம் நடைபெறுகிறது. இவரே அஷ்ட ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதி என்கிறது வாருணபத்ததி எனும் நூல்.

* ஒன்பது அமாவாசை தினங்களில் 27 மிளகுகள் கட்டிய துணியைத் திரியாக்கி, இவர் சந்நதியில் விளக்கேற்றி, தயிர் சாதம் நிவேதித்து வழிபட, இழந்த சொத்துகள் திரும்பக் கிடைப்பதாக ஐதீகம்.

* அஸிதாங்க பைரவர் தன் ஆறு கரங்களில் கதை, கபாலம், பானபாத்திரம், கட்கம், கமண்டலம், ஜபமாலை ஏந்தி திகம்பரராக காட்சியளிக்கிறார். இவரது சக்தியே, பிராம்மி.

* குரு பைரவர், சூரிய பகவானின் அருகில் எழுந்தருளியுள்ளார். டமருகம், மான், கத்தி, கபாலம் ஆகியவை ஏந்தி அருளும் இவரது சக்தியே மாஹேஸ்வரி.

* சண்டபைரவர், சந்திரனுக்கருகே அருள்கிறார். அமாவாசையன்று சிறப்பு வழிபாடுகள் பெறுகிறார். வில், அம்பு, கத்தி, கபாலம் ஏந்தி காட்சி தரும், இவரது சக்தியே கௌமாரி.

* குரோதனபைரவர், ஈசன் சந்நதி முன் சங்கு, சக்கரம், கபாலம், கதை ஏந்தி அருள்கிறார். இவரின் சக்தி, வைஷ்ணவி.

* பிராகாரத்தில் உன்மத்த பைரவர், ஞானத் திருமுகதுடன் உலக்கை, கபாலம், கேடயம், அபய ஹஸ்தம் காட்டி அருள்கிறார். இவரது சக்தி, வாராகி.

* ராஜகோபுரத்தின் பக்கவாட்டில் கபால பைரவர் வீற்றருள்கிறார். இவரது சக்தி ஐந்த்ரீ.

* பீஷண பைரவர் நான்கு கால் மண்டபத்தில் பலிபீட வடிவில் காட்சியளிக்கிறார். முதலில் இவரை குனிந்து வணங்கிய பின்பே ராஜகோபுர கபால பைரவரை தரிசிக்கிறார்கள். இவரது சக்தி, சாமுண்டா.

* பிராகாரத்தில் வாராஹி, ஜேஷ்டாதேவி, ரௌத்ரி ஆகிய மூவரும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றனர்.

* இரண்டு அடி உயரத்தில் உமையன்னையை அணைத்தவாறு நந்தியின் மேல் திரிபங்க நிலையில் அருள்புரியும் ஈசன், பிரதோஷ நாயகராக வர்ணிக்கப்படுகிறார்.

* அம்பிகை, பெரியநாயகி. பெயருக்கேற்றாற்போல் பெரிய வடிவில் அருள்புரிகிறாள்.

* தேவியின் முன் சிம்மத்துக்கு பதிலாக நந்தி இருக்கிறது. அதேபோல, சந்நதி பிராகாரத்தில் சண்டிகேஸ்வரி அருள்கிறாள்.

* காசியைப் போலவே பைரவர், அன்னபூரணி, விஸ்வநாதர், விசாலாட்சி, வாராஹி ஆகிய ஐவரும் இங்கே அருள்புரிகிறார்கள். எனவே இத்தல தரிசனம் காசி தரிசனத்திற்குச் நிகரானது.

* கள்ளக்குறிச்சி - ஆத்தூர் சாலையில், சேலம் போகும் வழியில் சின்னசேலம் வி.கூட்டு ரோடிலிருந்து 2 கி.மீ தொலைவில் ஆலயம் உள்ளது.

Tags : Arakalur ,Bairavars ,
× RELATED சின்னசேலம் அருகே குடும்பத்தகராறில்...