×

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

மகா சிவராத்திரி 18-2-2023

சிவபெருமான் தென்னாட்டுக்கு உரியவன். “தென்னாடு உடைய சிவனே போற்றி” என்றல்லவா அவனைப் போற்றுகிறோம். ஆனால், எல்லா நாட்டுக்கும் உரியவன் என்று சைவ சமயச் சான்றோர்கள் போற்றுகின்றனர். மங்களங்களைத் தருகின்ற சிவனுடைய எல்லையில்லாப் பெருமைகளைப் போற்றும் பண்டிகை “சிவராத்திரி” பண்டிகை.

மகா சிவராத்திரி

மகாசிவராத்திரி பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படும் பண்டிகை. சிவனுக்குரிய உயர்ந்த நாள். அன்று காலை முதல் விரதமிருந்து, ராத்திரி முழுக்க கண்விழித்து, சிவ நாமம் ஓதி, மறுநாள் காலையில் விரதத்தை முடித்துக் கொள்ளுகின்ற வழக்கம் கோடிக் கணக்கான மக்களுக்கு உண்டு. இவ்விரதம் “மகா சிவராத்திரி திருநாள்” என்று வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் மாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முன்தினம் சதுர்த்தசி திதியில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்க வேண்டிய முறையை சைவ ஆகம நூல்கள் பலவும் கூறுகின்றன. சந்தான குரவர்களில் மூன்றாமவர் மறைஞானசம்பந்தர் அவர் சிவராத்திரியில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தொகுத்து குறட்பா வடிவில் “மகா சிவராத்திரி கற்பம்” என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

எத்தனை சிவராத்திரிகள்?

பொதுவாக மாதா மாதம் சதுர்த்தசி இரவு சிவராத்திரி தினமாகக் கொண்டாடப்படுகிறது. பல சிவனடியார்கள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் சிவராத்திரி விரதம் கடைப் பிடிப்பார்கள். சிவராத்திரிக்கு முதல் நாள், ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, சிவராத்திரி நாள் முழுக்க உபவாசமிருந்து, அன்றைய தினம் இரவில், நான்கு ஜாமத்திலும் வழிபாடு செய்து, அதற்கு அடுத்த நாள் காலையில் நீராடி, சிவபூஜை, சிவதரிசனம் செய்து, அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த சிவராத்திரி ஐந்து வகைப்படும்

1. நித்திய சிவராத்திரி
2.மாத சிவராத்திரி
3.பட்ச சிவராத்திரி
4.யோக சிவராத்திரி
5.மகா சிவராத்திரி

முதல் சிவராத்திரி எப்படித் தோன்றியது?

சிவராத்திரி நாள் தோன்றுவதற்குக் காரணம் பார்வதிதேவியார். முன் னொரு காலத்தில், உலகம் பிரளயத்தில் ஒடுங்கியது. எங்கு பார்த்தாலும் நீர். உலகங்களில் உயிர்கள் இல்லாத நிலை. எல்லா அண்டங்களும் ஒடுங்கின. இயக்கங்கள் நின்றன. மறுபடியும் இயக்கங்கள் நடைபெற வேண்டும் என்பதற்காக பார்வதிதேவி சிவபெருமானை இரவு முழுதும் இடைவிடாது தியானம் செய்ய இறைவன் மறுபடியும் இந்த உலகத்தையும் அண்டங்களையும் படைத்ததாக ஒரு வரலாறு உண்டு. உமையவள் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெற்றது. இருள் என்பது உலகத்தின் ஒடுக்கம். ஒளி என்பது உலகத்தின் இயக்கம். ஒடுக்கம் நீங்கி இயக்கம் பிறக்கக் காரணமாக இருந்த இரவு நேரம் தான் சிவராத்திரி நேரம்.

சிவபதம் கிடைக்க சிவராத்திரி விரதம்

சைவ சமயத்தில் எத்தனையோ விரதங்கள் இருந்தாலும் கூட, மாசி மாதம், தேய்பிறை திரயோதசி திதியில் அனுஷ்டிக்கக் கூடிய உன்னதமான விரதமான சிவராத்திரி விரதத்திற்கு ஈடாக வேறு ஒரு விரதம் சிவ ஆகமங்களில் சொல்லப்படவில்லை. ஒருவன் தன்னுடைய வழிபடு கடவுளாக சிவபெருமானை ஏற்றுக்கொண்டால், இந்த சிவராத்திரி விரதத்தை, கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்பது நியதி. இந்த சிவராத்திரி விரதத்தை தேவர்களும் முனிவர்களும் இடை விடாது கடை பிடித்ததோடு, சிவனின் உருவத்தில் பாகமான பார்வதிதேவியும், சிவனை எப்பொழுதும் துதித்துக் கொண்டிருக்கும் நந்தியம்பெருமானும் இந்த சிவராத்திரி விரதத்தை விடாமல் அனுஷ்டிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சிவ பதம் கிடைக்கச் செய்யும் உன்னத விரதம் சிவராத்திரி விரதம்.

நான்கு கால பூஜை

ஒரு நாளைக்கு 8 யாமங்கள் உண்டு. சாமம் என்றும் சொல்லலாம். ஒரு சாமம் மூன்று மணி நேரம். பகலில் நான்கு சாமங்கள். இரவில் நான்கு சாமங்கள். சூரிய அஸ்தமனத்தை ஒட்டிய பிரதோஷ காலத்தில் ஆரம்பித்து, சூரிய உதயம் வரைக்கும் உள்ள நான்கு யாமங்களிலும், நான்கு விதமாக சிவ மூர்த்தங்களை அபிஷேகம் செய்து, மலர்களால் அர்ச்சனை செய்து, தோத்திரங்கள் பாடி வழிபட வேண்டும்.

மகா சிவராத்திரி பூஜை காலங்கள்

முதல் கால பூஜை -  மாலை 6:30- 9:30;
இரண்டாம் கால பூஜை இரவு 9:30-12:30;
மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:30- 3:30;
நான்காம் கால பூஜை அதிகாலை 3:30-6:00

சோமாஸ்கந்தர்

முதல் சாமத்தில் வழிபட வேண்டிய மூர்த்தம் சோமாஸ்கந்தர். சோமாஸ்கந்தர், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக வணங்கப்படும் வடிவமாகும். சோமன் எனும் சிவபெருமான் ஸ்கந்தர் எனும் முருகனுடனும், உமையுடனும் இருக்கும் உருவ நிலை சோமாஸ்கந்தர் எனப்படுகிறது. சக உமா ஸ்கந்தர் என்பது சோமாஸ்கந்தர் என்று ஆகியது. மகேஸ்வர வடிவங்களில் இந்த திருவுருவம், தமிழகத்தில் மட்டும் காணப்படுகின்ற சிறப்பான வடிவமாகும். பஞ்சகுண சிவமூர்த்திகளில் சோமாஸ்கந்தர் கருணா மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். அவருக்கு பஞ்சகவ்யத்தால் (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால் அன்னம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.

ஆத்ம குரு தட்சிணாமூர்த்தி

இரண்டாம் யாமத்தில் தென்திசைக்கு கடவுளாகிய ஆத்ம குரு தட்சிணா மூர்த்தியை வழிபட வேண்டும். தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாகும்.  

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.


 - என்று திருவிளையாடற் புராணம் இவரைப் போற்றுகிறது.

தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும், அவற்றின் பொருளாகும். சிவபெருமான் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது. தட்சிணா மூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சிவதல கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை பரமகுரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள். பஞ்சகுண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் படைக்க வேண்டும்.

லிங்கோத்பவ காலம்

மூன்றாம் யாமம் முக்கியமான காலம். சிவராத்திரியின் உன்னதமான நேரம் இந்த நேரம். மகா சிவராத்திரி நேரம் என்று இதனைச் சொல்வார்கள். லிங்கோத்பவ காலம் என்று சொல்வார்கள். மும்மூர்த்திகளும் பிரசன்னமாகும் நேரமிது. இப்பொழுது வழிபட வேண்டிய மூர்த்தம் லிங்கோத்பவர். உருவமில்லாத இறைவன் லிங்க வடிவாகிய நேரம் என்று இதனை சொல்வர். அப்போது இறைவனை தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஜாதி மல்லி மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னத்தைப் படைக்கவேண்டும். குறைந்த பட்சம் இந்த நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.

பிறைசூடிய பெருமான்

நான்காம் ஜாமமாகிய பிரம்ம முகூர்த்த நேரத்தில் இறைவன் அழகான உருவத்தோடு காட்சி தருகின்றார். பிறைசூடிய பெருமானாகக் காட்சி தருகின்றான். இடப ரூடனாகக்   காட்சி தருகின்றான். நான்காம் சாமத்தில் வழிபட வேண்டிய மூர்த்தம் சந்திரசேகர மூத்தம். மிக அழகான திருவுருவம் இது. நான்காவது கால பூஜைமுப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவ ராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு - பால் அபிஷேகம் செய்தும், நந்தியா வட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்ய வேண்டும்.

வில்வமும் சிவனும்

சிவனுக்கு மிகவும் ஏற்றது வில்வம். வில்வ இலைகளை சிவ சொரூபமாகக் கருதுவார்கள். வில்வ மரம் மிகப் புனிதமானது. வில்வ பத்திர பூசை முக்கியமானது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திரி சூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்பதைக் குறிக்கின்றது. நேபாளத்தில் கன்னிப் பெண்களின் கருவளத்தைக் காக்கவேண்டி வில்வம் பழத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு பிரபலமானது. அதில் உள்ள முட்களை சக்தி என்றும் கிளைகளை வேதங்கள் என்றும் வேர்களை தேவர்கள் என்றும் போற்றுவார்கள். சிவராத்திரியில் வில்வ இலை களால் பூஜை செய்ய சிவபெருமான் மகிழ்ந்து எல்லா விதமான தோஷங்களையும் நீக்குகிறான்.

வண்ணப் பட்டு

ஒவ்வொரு அலங்காரத்திற்கும் சாத்த வேண்டிய ஆடைகளும் வண்ணங்களும் உண்டு. முதல் யாமத்தில் சோமாஸ்கந்த மூர்த்திக்கு செம்பட்டு சாத்த வேண்டும். இரண்டாம் யாமத்தில் தென்முக கடவுளுக்கு மஞ்சள் பட்டு சாத்த வேண்டும். மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத்பவருக்கு வெண் பட்டு சாத்த வேண்டும். நான்காம் ஜாமத்தில் சந்திரசேகருக்கு நீல வண்ண பட்டு சாத்த வேண்டும். அதைப்போலவே முதல் ஜாமத்தில் ரிக் வேதம் மற்றும் சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும்.  இரண்டாம் யாமத்தில் யஜுர்வேதம், கீர்த்தித் திருவகவல் பாராயணம் செய்ய வேண்டும். மூன்றாம் ஜாமத்தில் சாம வேதத்தை பாராயணம் செய்து திரு வண்டப்பகுதி வாசிக்க வேண்டும். நான்காவது ஜாமத்தில் அதர்வண வேதத்தை பாராயணம் செய்து போற்றித் திருஅகவல் ஓத வேண்டும்.

கிரிவலம்

பொதுவாகவே இந்த விரத காலத்தில் திரு கேதீஸ்வரம் பதிகங்களும் திருவண்ணாமலை பதிகங்களும் ஓத வேண்டும். பௌர்ணமியில் கிரிவலம் வருவார்கள். ஆனால், ஒளிப்பிழம்பாக ஈசன் காட்சி தருகின்ற திருவண்ணாமலையை தொடர்ந்து 12 சிவராத்திரிகள் கிரிவலம் செய்தால், கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும்.

யம பயத்தைப் போக்கும்

மகா சிவராத்திரி விரதம் பிறவி பிணி நீக்குவது. ஆயுளை அதிகரிப்பது. ஜாதகங்களில் ஆயுள் தோஷம் இருந்தால் சிவராத்திரி விரதம் நீக்கிவிடும். யம பயத்தைப் போக்கும். சிவராத்திரி விரதம் இருக்கும் சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று சிவபுராணம் கூறுகிறது.

புண்ணியக் கணக்கில் சேர்ந்துவிடும்

சில நேரங்களில் நாம் தெரியாமல் பாவங்கள் செய்து விடுவோம். அதைப் போலவே, நாம் அறியாமலே சில நல்ல விஷயங்களையும் செய்து இருப்போம். எந்த விழிப்புணர்வும் இல்லாது சிவராத்திரியன்று விரதம் இருந்தாலும் கூட, அது புண்ணியக் கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது ஒரு நண்பரோடு சிவராத்திரி அன்று கோயிலுக்கு எந்தவித நோக்கமும் இன்றிச் சென்றாலும், அல்லது அந்த நாளில் எங்கோ பாடுகின்ற சிவபெருமானுடைய நாமங்களை கேட்டாலும், சிவராத்திரிக்கான பலம் கிடைத்துவிடும். சிவராத்திரி அன்று கண்விழித்த வேடனுக்கும், குரங்குக்கும் நல்ல வண்ணம் அருளிய வரலாறு உண்டு.

என்ன தூபம்? என்ன தீபம்?

ஒளிமயமான கடவுளுக்கு சிவராத்திரி இரவில் முதல் யாமத்தில் பச்சை கற்பூரம், சந்தனம் இவற்றோடு சாம்பிராணி மற்றும் சந்தனக்கட்டை புகை போட்டு தூபத்தைக் காட்டவேண்டும். புஷ்ப தீபத்தைக் காட்ட வேண்டும்.  இரண்டாம் யாமத்தில் தட்சிணாமூர்த்திக்கு அகில், சந்தனம் இவற்றோடு சாம்பிராணி புகையைப் போட்டு, நட்சத்திர தீபத்தைக் காட்ட வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் கருங் குங்கிலியம் புகையைப் போட்டு லிங்கோத் பவருக்கு பஞ்சமுக தீபத்தை சமர்ப்பிக்க வேண்டும். நான்காம் யாமத்தில் சந்திரசேகர மூர்த்திக்கு புனுகு சேர்ந்த சந்தனம் இவற்றோடு கற்பூர லவங் கத்தை போட்டு மூன்று முக தீபத்தைக் காட்ட வேண்டும்.

தானங்களைக் கொடுக்க வேண்டும்

சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நோய்கள் அனைத்தும் நீங்க ம்ருத்யுஞ்சன ஜெபம் அவசியம் செய்ய வேண்டும்.  விரதத்தின் நிறை வாக தானங்களைக் கொடுக்க வேண்டும். ருத்ராட்சம், ரத்தினங்கள், பூமி தானம், பொன் தானம், கோதானம், அன்னதானம் செய்யலாம்.

பாரணை முக்கியம்

ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு துவாதசி பாரணை முக்கியம். அதைப் போலவே சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் பிரதோஷ நாளில் ஆரம்பித்து, மறுநாள், சதுர்த்தசி நாளில் அதிகாலை எழுந்து நீராடி சூரிய உதயத் தின் போது செய்ய வேண்டிய வழிபாடுகளை முடித்துக் கொண்டு சிவாலயத்திற்குச் சென்று முறையான தரிசனம் செய்ய வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து, மாவிலை தோரணங்கள் கட்டி, அலங்காரம் செய்ய வேண்டும். உபவாசம் இருந்து, கண் விழித்து, அதற்கு அடுத்த நாள் சிவபூஜை செய்து பாரணை செய்ய வேண்டும், சிவனுக்கு படைத்த நிவே தனங்களை மட்டும் அடியார்களோடு சேர்ந்து உண்ண வேண்டும்.

பிறப்பு இறப்பு எனும் சங்கிலி அறுபடும் நாள்

இறைவனை அருவம் என்று சொல்ல முடியாது. உருவம் என்றும் சொல்ல முடியாது. இறைவனை உருவம் உள்ளவன் என்று நினைத்தால் உள்ள வனாக இருக்கின்றான். எந்த உருவத்தை நாம் நினைத்து வழிபட்டாலும் அந்த உருவத்தில் அவன் வந்து விடுகின்றான். உருவம் இல்லாத வனாகவும் அவன் இருக்கின்றான். இப்படி இருக்க, சிவனை லிங்க வடிவில் ஏன் படைத்தனர் என்பதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ் ஜோதியை ஒரு உருவமாகப் பார்க்கின்ற பொழுது லிங்க வடிவாகக் காட்சி தருகின்றான். அது மட்டும் இல்லை. அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். முதலும் முடிவும் இல்லாதவன்.

எது முதலோ, அதுவே முடிவு என்று எடுத்துக் கொள்ளலாம். எது முடிவோ, அதுவே முதல் என்று எடுத்துக் கொள்ளலாம். சிவ ராத்திரி என்பது வெளிச்சத்தின் நிறைவு நேரம். உயிர் ஒடுக்கம், அல்லது லயம் ஆகும் நேரம். அதனால் அதை முடிவு என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லது மறைவு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த சிவராத்திரிக்கு அடுத்த நாள் உயிர்களின் விழிப்பு நிகழ்ந்து விடுகிறது. அந்த நேரத்தை நாம் “முதல்” என்று எடுத்துக்கொள்ளலாம். எங்கே முடிகிறதோ அங்கே தான் தொடங்குகின்றது.

இதைக் காட்டுகின்ற தத்துவம் தான் லிங்கதத்துவம். லிங்கம் கோழிமுட்டை போல் இருக்கிறது. எங்கே துவங்கியதோ, அங்கே முடிகிறது. எங்கே முடிந்ததோ, அங்கே துவங்குகிறது. பிறவிக்கும் அப்படித்தான். “உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று சொல்லுவார் வள்ளுவர். இறந்தவன் பிறப்பதும், பிறந்தவன் இறப்பதுமான ஒரு தொடர் சங்கிலியாக நடந்து கொண்டே இருக்கின்றது. கோழி முட்டைக்குள் தான் கோழி குஞ்சு இருக்கிறது. அதைப்போல அந்த லிங்கத் திருமேனியில் தான் நம்முடைய பிறப்பு இறப்பு என்னும் சுழற்சிக்கான ஒரு விடுதலையும் இருக்கிறது. அந்த விடுதலை நாளாகத் தான் மகா சிவராத்திரி நாளை ஞானிகள் கருதினர்.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

Tags : Lord Shiva ,South India ,
× RELATED நிதி வசதி எப்படி இருக்கும்?