×

கோவையில் 9 அட்டை பெட்டிகளில் ரூ 2000 கள்ளநோட்டுகளுடன் இரிடியம் மோசடி கும்பல் சிக்கியது: பூஜை செய்து கோடிக்கணக்கில் சுருட்ட திட்டம் அம்பலம்

கோவை: கோவையில் கள்ள நோட்டு, இரிடியம் மோசடி கும்பல் சிக்கியது. இவர்கள் பூஜை செய்வதுபோல நடித்து பல கோடி ரூபாய் சுருட்ட திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் போலி ரூபாய் நோட்டுக்களை காட்டி பணம் மோசடி செய்வதாக புகார் வந்தது. இதன் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பிரஸ் காலனியில் உள்ள பாலாஜி கார்டன் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் 9 அட்டை பெட்டியில் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை போட்டு மறைத்து வைத்திருந்தனர். இது தவிர 2 இரிடியம் கலசம் இருந்தது. இவற்றை பதுக்கி வைத்திருந்த விருதுநகர் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த காளிமுத்து (28), திருச்செங்கோடு விட்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (38), பெருமாம்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (35) ஆகியோரை கைது செய்தனர். இதை பதுக்கி வைத்திருந்த முக்கிய குற்றவாளியான பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சடகோபாலனை போலீசார் தேடி வருகின்றனர். மோகன்ராஜ், பணம் முதலீடு செய்யும் நபர்களை தேடி பிடிக்கும் ஏஜென்டாக இருந்துள்ளார். இவர்கள் வைத்திருந்த லேப்டாப், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அட்டை பெட்டியில் 2200 கட்டுக்களில் 2 ஆயிரம் போலி ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. ஒவ்வொரு கட்டிலும் 100 தாள்கள் இருந்தன. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த போலி ரூபாய் நோட்டுக்களில் சில்ரன் கரன்சி ஆப் இந்தியா என எழுதப்பட்டிருந்தது. சினிமா ஷூட்டிங்களில் இந்த ரூபாய் நோட்டுக்களைதான் பயன்படுத்துவது வழக்கம். இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பைனான்சியர் ரவிச்சந்திரன் என்பவரிடம் இந்த மோசடி கும்பல் பல தவணைகளில் 2 கோடி ரூபாய் பெற்றதாக தெரிகிறது. இதற்கு பதிலாக இரு மடங்கு தொகை தருவதாக கூறிய இவர்கள் ஏமாற்றி வந்துள்ளனர்.  இது குறித்தும் போலீசார் விசாரித்து 3 பேர் மீதும் மோசடி, ஏமாற்றுதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். கைதான கும்பல் கோவை, நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் கேரள மாநிலத்திலும் கைவரிசை காட்டியிருப்பதாக தெரிகிறது. கைதான 3 பேர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: இந்த போலி ரூபாய் நோட்டுக்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்க முடியும். இதை அருகே வைத்து பார்த்தால்தான் போலி என தெரியும். நாங்கள் மோசடி செய்வதற்காக பிரஸ் காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். இங்கே சடகோபாலனை பூசாரியாக நடிக்க வைத்தோம். 2 பித்தளை பாத்திரம் வாங்கி வந்து அதை இரிடியம் கலசம் என்பதுபோல் செட்டப் செய்தோம். வட்டிக்கு விடும் நபர்கள், தொழிலதிபர்கள், ஆன்மிகம், பூஜைகளில் நம்பிக்கையுள்ள நபர்களை அழைத்து வந்து ‘‘இரிடியம் கலசம் வைத்து பூஜை நடத்தினால் பணம் அதிகமாக கிடைக்கும். 10 லட்ச ரூபாய் தந்தால் ஒரு மாதத்தில் 20 லட்சம் திருப்பி தருவோம்’’ என கூறி நம்ப வைத்தோம். ரவிச்சந்திரன் பல தவணைகளில் எங்களுக்கு 2 கோடி ரூபாய் தந்தார். அவரைபோல் மேலும் சிலரை எங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிட்டோம். இரிடியம் பூஜையின்போது கலசத்தை எடுக்க முடியவில்லை என அவர்களிடம் நடிப்போம். அவர்களிடம் தூரத்தில் பெட்டியில் வைத்திருக்கும் பல கோடி போலி ரூபாய் தாள்களை காட்டுவோம். இதை பார்த்து அவர்கள்  நாங்கள் கேட்கும்  பணத்தை தருகிறோம் என  கூறினார்கள்.  ரவிச்சந்திரன் பணம் கிடைக்காததால் போலீசில் புகார் தந்து சிக்க வைத்து விட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post கோவையில் 9 அட்டை பெட்டிகளில் ரூ 2000 கள்ளநோட்டுகளுடன் இரிடியம் மோசடி கும்பல் சிக்கியது: பூஜை செய்து கோடிக்கணக்கில் சுருட்ட திட்டம் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Gova ,Govai ,Iridium ,Goa ,pooja ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!