×

அதிமுக தலைவர்கள் இருக்கை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை, தமிழக சட்டப்பேரவை வரும் 17-ல் கூடுகிறது; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 17ம் தேதி காலை 10 மணிக்கு கூடுவதாக சபாநாயகர் அப்பாவு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிமுக எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 17ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. அன்றைய தினம் மறைந்த மாமன்ற உறுப்பினர்கள், பிரபலமானவர்கள் என இறந்தவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். தொடர்ந்து மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா இறப்பு குறித்தும் சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்பு வைக்கப்பட்டு அன்றைய தினம் சட்டமன்றம் அதோடு ஒத்திவைக்கப்படும். அதன்பின் எனது அறையில் எல்லா கட்சி தலைவர்களும் அமர்ந்து பேசி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், எத்தனை நாள் சட்டமன்ற கூட்டம் நடைபெற வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும். அடுத்த நாள் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது குறித்தும் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்.அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தற்போது இருக்கைகள் உள்ளன. எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளதா என்று கேட்கிறீர்கள். அதாவது, எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் இருவரும் கடிதங்கள் தந்திருக்கிறார்கள். அது என்னுடைய பரிசீலனையில் உள்ளது. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்படும். சட்டமன்றமே இன்னும் கூடவில்லை. அதற்கு முன் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றம் கூடும்போது பாருங்கள், எல்லாம் சரியாக இருக்கும். யாருக்கு எந்த இருக்கை என்பது என்னுடைய (சபாநாயகர்) முடிவு. அதனால் எனக்கும், இவருக்கும் சண்டை, அவர் பக்கத்தில் உட்காரக்கூடாது. எனக்கும் அவருக்கும் பிரச்னை இல்லை, அவர்கூட என்னை உட்கார வையுங்கள் என்றெல்லாம் பண்ண முடியாது. சபையின் மரபுபடி எப்படி நடக்குமோ அப்படி அவை மரபுபடி எல்லாருக்கும் இருக்கைகள் வழங்கப்படும். அதனால், இருவருக்கும் என்ன இருக்கை என்று இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. சட்டமன்றம் கூடும்போது எல்லாம் சரியாக இருக்கும். நீங்களே (பத்திரிகையாளர்கள்) இரண்டு பேருக்கும் பிரச்னை இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அதெல்லாம் சட்டமன்ற மாண்புபடி, இரண்டு பேரும் முன்னாள் முதல்வராக இருந்தவர்கள், கண்ணியமாக நடந்து கொள்வார்கள். எல்லாரும் இரட்டை இலையில் தான் ஜெயித்து வந்திருக்கிறார்கள். சட்டசபைக்கு வாருங்கள், எல்லாம் நன்றாக நடக்கும். சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி-பதில் நேரலையாக இதுவரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அது இந்த கூட்டத்தொடரிலும் தொடரும். மேலும் முழுமையாக நேரலையாக கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் எண்ணம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறோம். விரைவிலேயே, முழுமையாக நேரலையாக வரும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி. செழியன், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்….

The post அதிமுக தலைவர்கள் இருக்கை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை, தமிழக சட்டப்பேரவை வரும் 17-ல் கூடுகிறது; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : President ,Leaders ,Tamil Nadu Legislation ,Speaker ,Papadu ,Chennai ,Abbhau ,Tamil Nadu Legislation Meeting ,TN Legislature ,Daddy ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்