பார்வைக் குறை போக்கும் சூர்ய கோடீஸ்வரர்

இத்தலம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார்கோயிலிலிருந்து கஞ்சனூர், திருலோக்கி கிராமங்களை அடுத்து உள்ளது கீழசூரியமூலை. சற்று உள்ளடங்கிய கிராமம். சூரியனார் கோவிலிலிருந்தோ அல்லது கஞ்சனூரிலிருந்தோ வழி கேட்டால் சொல்லி விடுவார்கள். தனி வாகனம் அமைத்துச் செல்வது சிறந்தது.

இது சிறிய கோயில்தான் ஆனால், கீர்த்தியில் பெரியது. கோயிலுக்குள் நுழைய முன்னே பலிபீடமும், நந்திபகவானும் திருக்காட்சி தர நேரே ஈசன் சூர்யகோடீஸ்வரர் பளீரென்று ஒளிர்கிறார். மெல்ல அவ்வொளி அகத்தையும், புறத்தையும் பிரகாசிக்க வைக்க இன்னும் அருகே நகர்கிறோம். இன்றும் சூரியன் எத்திசையில் சென்றாலும் அந்தி நெருங்கும்போது கூட அந்தக் கருவறைப் பகுதி மட்டும் வெண்மையான ஓர் ஒளி அச்சந்நதியை அடைத்துக் கிடக்கிறது. சிறிய லிங்க மூர்த்தம்.

அழகாக சூரியனின் ஒளிபட்டு மிளிர்ந்து இருக்கிறது. சூரியரைக் கண்ட மாத்திரத்தில் கரையும் பனி போல நமக்குள் அகலாது தேங்கியிருக்கும் தீ வினைகள் மெல்ல கரையும் அற்புதச் சந்நதி.  ஆதி ஆதவனுக்கே ஒளியூட்டிய நாயகனின் முன்பு நிற்க நம் வாழ்வும் சூரியனாக பிரகாசிக்கும். சூரிய பகவானின் முழுத் திரட்சியும் இங்கிருப்பதால் சூரியனின் ஆளுகைக்கு உட்பட்ட பூமி இது.

அதனாலேயே கண்கள் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் சூர்யகோடிப் பிரகாசரைத் தரிசிக்க பார்வை குறைபாடுகள் நீங்கி நிவர்த்தி அடைகின்றனர். அதனாலேயே நிறைய பார்வை குறைபாடுள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். சூரியகோடீஸ்வரரின் பெருவெள்ளொளியில் நம் மனம் இருக்குமிடம் தெரியாது மறைகிறது. நகர மனமின்றி அம்பாள் சந்நதி நோக்கி

நகர்வோம்.

அம்பாளின் திருநாமம் பவழக்கொடி. பெயரைச் சொல்லும்போதே நெஞ்சில் அமுதூறும். அவளின் கடைக்கண் பார்வை பட வாழ்வில் ஒளி கூடும். அம்பாள் எளிய வளாக வீற்றிருக்கிறார்கள்.

தொகுப்பு - எஸ்.கிருஷ்ணஜா

Related Stories: