×

இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் பார்க்கலாம்

கூட்டுப்பண்ணையில் கலக்கும் விவசாயக்குடும்பம்திருவண்ணாமலை மாவட்டம் படவேட்டில் வசிக்கும் விவசாயி கருணாகரன் ராணி தம்பதியரின் பொறியியல் பட்டதாரியான மகன் வேணுகோபால்  அக்ரி படித்த மகள் பவானி என மொத்த குடும்ப உறுப்பினர்களே  சேர்ந்து அனைத்து விவசாய வேலைகளையும் செய்து, நெல், வாழை, கரும்பு, காய்கறிகள் என 100 சதவீதம் இயற்கை விவசாயம் செய்து வருகின்றார்கள்.   தேவையான இயற்கை உரங்களை தயாரித்துக் கொள்கிறார்கள். ஒருபுறம் பசுக்களை வளர்த்து பண்ணையை பராமரிக்கிறார்கள். மறுபுறம் அரசு உதவியுடன் அரைவை இயந்திரங்களை அமைத்து கம்பு, கேழ்வரகு, கோதுமை, நெல், உளுந்து, மக்காச்சோளம், சாமை, தினை, நிலக்கடலை மற்றும் மாட்டுத் தீவனங்களை அரைத்துக் கொடுக்கிறார்கள். மேலும் மரச்செக்கு மூலம் பாரம்பரிய முறையில் எண்ணெயை தயாரித்துத் தருகிறார்கள்.விவசாயி கருணாகரன் மகன் வேணுகோபால் பொறியியல் படித்துள்ளார். படிப்பு என்பது பட்டத்திற்காக மட்டுமே. மற்றபடி விவசாயம் செய்வதில்தான் எனக்கு மகிழ்ச்சி. இங்கு நானே முதலாளி. நானே தொழிலாளி. விவசாயம் செய்வதை தாழ்வாக நினைக்கும் இளைஞர்கள் மத்தியில், அனைத்து வசதிகள் இருந்தும், விவசாயத்தை தந்தையுடன் இணைந்து செய்யும் இளைஞர், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் விளங்குகிறார்.விவசாயி கருணாகரனின் மகள் பவானிக்கு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு இலவசமாக சீட் கிடைத்துள்ளது. ஆனால் அவற்றை நிராகரித்தவர், ‘பாரம்பரியமாக எங்கள் குடும்பத்தினர் செய்து வரும் விவசாயத்தில் பட்டப்படிப்பு படித்து சாதிக்க வேண்டும் என்பதே என் லட்சியம்’ என்று கூறி டாக்டர் படிப்பை புறக்கணித்துள்ளார். அதன்படி, பிஎஸ்சி அக்ரி படித்து முடித்துள்ளார்.இயற்கை விவசாயத்தின் முன்னோடி என்று பெயர் பெற்ற கருணாகரன் விவசாய சங்கத் தலைவராக உள்ளார். மாதந்தோறும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கான விவசாயக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அரசு விவசாயிகளுக்கு அறிவிக்கும் நலத்திட்ட உதவிகள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள், இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் பெறுவது எப்படி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, திட்டமிட்டு இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்.17 ஏக்கர் நிலத்தில் வாழை, நெல், காய்கறிகள் பயிர் செய்கிறேன். கறுப்புக் கவுனி, கருங்குறுவை, அறுபதாம் குறுவை, சீரக சம்பா, சொர்ணமசூரி, பூங்கார், மாப்பிள்ளைச் சம்பா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நெல்வகைகள் மற்றும் வாழை, காய்கறி வகைகள் சுழற்சி முறையில் பயிரிடுகிறேன். இவற்றிற்கு ரசாயன உரங்கள் பயன்படுத்துவதில்லை. நாட்டு மாட்டுச் சாணம், நாட்டுப் பசுமாட்டு கோமியம், நாட்டுச் சர்க்கரை, கொள்ளு மாவு, வயல்மண் ஒருபிடி, ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், பஞ்ச காவ்யா, கனஜீவாமிர்தம் உள்ளிட்டவை கலந்து இயற்கை உரங்கள் தயாரிக்கிறேன்.இந்த இயற்கை உரங்களை பயன்படுத்து வதன் மூலம் ஏக்கருக்கு சுமார் ₹20 ஆயிரம் வரை ரசாயன உரச்செலவு மிச்சப்படுத்த முடிகிறது. பயிர் வளர்ந்த பின் பூச்சிகளை விரட்ட தெளிக்கப்படும் பூச்சி விரட்டி கலவையையும் இயற்கையாகவே தயாரிக்கிறேன். இவற்றைத் தயாரிக்க வேப்பிலை, நொச்சி, ஆடாதோடா, தும்பை, சீத்தா, எருக்கன், அரளி, பப்பாளி, சோற்றுக் கற்றாழை, ஊமத்தன் உள்ளிட்ட தழைகளை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஏக்கருக்கு ₹5ஆயிரம் வரை ரசாயன பூச்சி கொல்லி மருந்துகள் வாங்கும் செலவு மிச்சமாகிறது.பண்ணையில் வளரும் 15க்கும் மேற்பட்ட பசுக்களில் இருந்து கிடைக்கும் சாணம் மற்றும் கோமியம் இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்தை நேரில் பார்க்கும் மக்கள் ஆர்வமுடன் வந்து அரிசி, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இயற்கை விவசாய முறையில் பயிரிடப்படும் உணவுப் பொருட்களை பயன்படுத்தினாலே போதும். ரசாயன உரங்கள் மண்வளத்தைப் பாதித்து மலட்டுத் தன்மையை உண்டாக்குகிறது. இதற்காக வருங்கால இளைய சமுதாயத்திற்கு நம் முன்னோர்கள் பாரம்பரியமாக செய்து வந்த இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறையில் செயல்படுத்தியும் வருகிறேன். இதற்கு முன்னோடியாக என் பட்டதாரி மகளும், மகனும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். இயற்கை விவசாயத்தில் அதிக மகசூலும், ஆரோக்கியமான உணவுப் பொருட்களும் நாமே பயிரிட முடியும் என்பதை மாதந்தோறும் விவசாயிகளுக்கு நேரடியாக செயல்முறை விளக்கம் அளித்து வருகிறேன் இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: கருணாகரன் – 98430 54146தொகுப்பு: படங்கள்: பழனி

The post இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் பார்க்கலாம் appeared first on Dinakaran.

Tags : Venugopal Agri ,Karunakaran Rani ,Pataved, Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED ‘விபத்தில் சிக்கிய கணவர், கிட்னி...