×

தமிழகத்தை தவிர்ப்பது ஏன்?

இமாச்சல பிரதேச மாநிலம், பிலாஸ்பூரில் ரூ.1,470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். கடந்த 2017, அக்டோபர் மாதம் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவமனையானது, ஒன்றிய அரசின் நிதியில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூர் எய்ம்ஸ் திறப்பு விழா காணப்பட்ட நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமானப்பணிகளையே துவக்காதது கவலையளிக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு, பட்ஜெட் உரையின்போது, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படுமென அறிவித்தார். பின்னர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை உட்பட 5 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஒருவழியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க, கடந்த 2018, டிசம்பரில் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் ரூ.1,264 கோடி மதிப்பில் சுமார் 222 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின்போது, மதுரை வந்த பிரதமர் மோடி 2019, ஜன.29ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டியதிலிருந்து பணிகள் வேகமெடுக்கவில்லை. முறையாக நில ஒப்படைப்பை  தமிழக அரசு செய்யவில்லையென ஒன்றிய அரசும், நிலம் ஒப்படைக்கப்பட்டு விட்டது; ஒன்றிய அரசு காலம் தாழ்த்துகிறது என மாறி, மாறி அப்போதைய அதிமுக அரசும், ஒன்றிய பாஜ அரசும் குற்றம் சாட்டி வந்தன. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க, போராட்டங்கள் தீவிரமாயின. இதைத்தொடர்ந்தே ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்தின் கடனுதவியுடன் மதுரை எய்ம்ஸ் அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. இதன்படி ஜப்பான் நிறுவனம் 85 சதவீதம் கடனுதவியும், மீதமுள்ள 15 சதவீத நிதியை ஒன்றிய அரசும் தர உள்ளதாக முடிவாகி ஒப்பந்தம் கடந்த 2021, மார்ச் மாதம் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது. ரூ.1,500 கோடி வரை ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அதே ஆண்டு அக்டோபரில் கட்டுமான பணிகள் துவங்கும். 2023ம் ஆண்டுக்குள் முடிவடையுமெனவும் கூறப்பட்டது. ஆனாலும், இதுவரை 1 சதவீதம் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும், கட்டுமான பணிகளை துவக்குவதற்குள் திட்ட மதிப்பீடு சுமார் ரூ.2 ஆயிரம் கோடியை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போதைய நிலவரப்படி மதுரை எய்ம்ஸ்க்கு சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளே 95 சதவீதம் தான் முடிவடைந்துள்ளன. ஆனால், சமீபத்தில் மதுரை வந்த பாஜ தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கூறி அதிர்ச்சியை கிளப்பினார். 2017ல் அடிக்கல் நாட்டிய பிலாஸ்பூர் எய்ம்ஸ் 100 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்து, 5 ஆண்டுக்குள் திறப்பு விழாவும் காணப்பட்டுள்ளது. ஆனால், அதன்பின் 15 மாதம் கழித்து அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ், 3 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆன பின்னும் சுற்றுச்சுவர் பணிகளே நிறைவடையாமல் உள்ளது. மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் ஒன்றிய அரசின் நிதியில் கட்டப்படும்போது, மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் வெளிநாட்டு கடனை எதிர்பார்ப்பது ஏன்? ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மை என்ற தமிழக மக்களின் உரிமைக்குரல் ஒன்றிய அரசின் காதுகளை இதுவரை எட்டவில்லையோ, என்னவோ…?…

The post தமிழகத்தை தவிர்ப்பது ஏன்? appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Modi ,AIIMS ,Bilaspur, Himachal Pradesh.… ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...