×

காதலையும் வெளிப்படுத்தும் பூர்வபுண்ணிய ஸ்தானம்...

பூர்வம் என்ற சொல்லுக்கு முற்பிறவி என்று பொருள் கொள்ளலாம். புண்ணியம் என்பதை நாம் சென்ற பிறவியில் செய்த நன்மைகள் எனக் கொள்ளலாம். உங்களின் பிறப்பு ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம். நீங்கள் சென்ற பிறவியில் சேர்த்து வைத்த புண்ணியத்தின் கணக்கை உங்களுக்கு சொல்லும். அவ்வாறு பூர்வ புண்ணியாதிபதி எந்த பாவத்தில் உள்ளாரோ அதை பொறுத்து உங்கள் புண்ணியம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, பூர்வ புண்ணியம் என்பது போன பிறவியில் நீங்கள் சேர்த்து வைத்த நற்காரியங்களின் பலனாகும். அந்த பலனே உங்களின் வாழ்விற்கு இப்பிறவியில் வழிகாட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஏன் ஜோதிடத்தில் பூர்வ புண்ணியம் பார்க்கப்படுகிறது?

ஒருவனின் இக்கட்டான சூழ்நிலையில், தனக்கு சாதகமாக மாற்றும் வல்லமையை இந்த பூர்வ புண்ணியம் தருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் நிதானமாக லாவகமாக  மாற்றும் சக்தியை, அவன் செய்த புண்ணியங்கள் அவனை காப்பாற்றுகிறது. பூர்வீகச் சொத்து என சொல்லக்கூடிய தாத்தாவின் வழியே பெறப்படும் சொத்துக்களும், இந்த பூர்வ புண்ணியத்தின் வழியே பெறப்படுகிறது. இந்த பாவத்தில் (Bhavam) அசுப கிரகங்களான கேது, ராகு இருப்பின் நிச்சயம் தடைகளை உண்டாக்கும். இதை சொல்வடையாக ‘தாத்தாவின் சொத்து பேரனுக்கு சொந்தம்’ என்பர். உங்கள் முப்பாட்டனாரை சொல்லும் பாவமும், இந்த ஐந்தாம் பாவமே. முப்பாட்டனாரின் பெயர்தான் சிலருக்கு அமையும் அமைப்பாகும். இந்த பெயர்கூட இந்த பாவத்தில் இருந்துதான் பலருக்கு உண்டாகிறது.

ஒருவரின் நினைவுத்திறன் இந்த பூர்வ புண்ணியம் மூலம் விருத்தி அடைகிறது. அசுபகிரகங்கள் மறதியையும், சுபகிரகங்கள் நினைவுத்திறனை வளப்படுத்தும் தன்மையாக செயல்படும். நினைவுத்திறன் சிறப்பாக இருந்தால், வாழ்வில் சில செயல்களை சிறப்பாகச் செய்யும் திறமை உள்ளவனாக இருப்பான். நீங்கள் பெறப்போகும் புத்திரபாக்கியத்தையும் அறிந்து கொள்ளும் பாவமாக இந்த பாவம் உள்ளது. முக்கியமாக, முதல் குழந்தையை குறிக்கும். ஐந்தாம் பாவாதிபதி மறைவிடமாக இருந்தால் தாமதமாகத்தான் குழந்தை பிறக்கும்.

ஒரு மனிதனின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பாவகமாக இந்த பாவம் உள்ளது. அவன் உள்ளம் தூய்மையானதாக இருப்பதற்கு இந்த பாவத்தில் உள்ள கிரகங்கள் காரணமாக அமைகிறது. மேலும், கோட்சாரத்தில் அந்த கிரகத்தின் மீது பயணிக்கும கிரகம் உங்கள் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். கல்வியில் ஒருவர் முதுநிலை பட்டம் பெறுவதை குறிக்கும் பாவகமும் இதுதான். இந்த பாவம் வலிமையாக இருந்தால், ஆராய்ச்சி படிப்பு என சொல்லக்கூடிய M.Phil., Phd. போன்ற படிப்புகளை படிக்க வைக்கும் பாவகமாக இருக்கும். ஆதலால், இந்த பாவகம் முக்கியமான பாவகமாக உள்ளது.

காதல், திருமணத்தில் முடியுமா?

யாருக்கெல்லாம் ஐந்தாம் பாவத்தில் சுபகிரகம் உள்ளதோ, அவர்களுக்கு காதல் என்கின்ற அன்புணர்வு கண்டிப்பாக வரும். அப்படி வருகின்ற காதலை வெளிப்படுத்தி திருமணம் என்னும் பந்தத்தை அடையுமா என்றால், அது குறைவே. ஐந்தாம் பாவத்திற்குரிய தேவதை மறைவிடத்திலோ அல்லது அஸ்தங்கம் ஏற்பட்டோ அல்லது வேறுகிரகத்துடன் தொடர்பு ஏற்பட்டால், கொஞ்சம் சிரமமமான அமைப்பு. ஐந்தாம் பாவ கிரகமே கேந்திரம் என சொல்லக்கூடிய பாவகத்தில் வலிமை பெற்றால், உதாரணமாக 7-ஆம் பாவத்தில் ஏறி வலிமை அடைந்தால், நிச்சயம் காதல், கல்யாணத்தில் முடியும் என்பது அனுபவ உண்மை.

நீங்கள் விரும்பும் தேவதை அல்லது குலதெய்வ வழிபாடு

ஒருவரின் குலதெய்வத்தையும் ஐந்தாம் பாவம் கொண்டு அறியலாம். ஐந்தாம் பாவத்தின் கிரகம் மறைவிடத்தில் இருந்தால் அவர்கள் குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பார்கள். இல்லாவிட்டால், குலதெய்வம் அறியாமல் மறைந்து போயிருக்கும். இந்த குலதெய்வ வழிபாடு என்பது உங்கள் குலத்தை காப்பது மட்டுமின்றி, உங்களின் இறுதி காலம் வரை உங்களுடன் பயணிக்கும். நீங்கள் அறியாமலேயே உங்களை காக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

சிலருக்குதான் விரும்பும் சில தேவதைகளோ அல்லது கடவுளோ இருப்பர். அந்த தேவதையை உபாசனை தேவதை என்பர். அந்த உபாசனை தேவதையையும், நீங்கள் இங்கு கண்டறியலாம். இந்த உபாசனை தேவதை உங்களை காக்கும் சக்தி பெற்றது என்பதை மறவாதீர்கள்.

உங்கள் உள்ளுணர்வை உணரும் திறன் எங்கு உள்ளது?

உங்களின் உள்ளுணர்வை உணர்வதற்கு (intuition) இந்த பாவம் உதவும். அதாவது, உங்களுக்கு வரும் இன்பம் மற்றும் துன்பங்களை முன்னரே உணரும் தன்மையை சொல்லும் ஐந்தாம் பாவம். மேலும், உங்களை ஒரு நபர் திடீரென சந்திக்க வருகிறார் என வைத்துக் கொண்டால், அவர், இந்த காரணத்திற்காகத்தான் உங்களை நாடுகிறார் என்பதை அறிந்து கொள்ளும் திறன் இருக்கும். உங்களுக்கு வரும் கெடுதல்களை முன்னரே அறிந்து கொண்டு அதில் விடுபட உங்களுக்கான எண்ணமும் இந்த பாவத்தின் மூலம் அறியலாம்.

காவல் துறையில் பணியாற்றும் பலர், தங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் பல குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு இந்த பாவமே காரணம்.
ஐந்தாம் பாவத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் ஏராளம் உள்ளது. நமது சுயஜாதகத்தில் இந்த ஐந்தாம் பாவம் மறைந்தாலோ அல்லது அஸ்தங்கம் அல்லது யுத்தத்தில் இருந்தாலும், அதனை வழிபட்டு அதற்கான பரிகாரம் செய்யுங்கள். நம் வாழ்வில், நம்மை ஏற்றம் அடையச் செய்யும் முதல் ஏணி இந்த ஐந்தாம் பாவம் என்பதை மறக்க வேண்டாம்.

Tags :
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்