×

ஹரி வந்துவிட்டார்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மதுரை ஸ்ரீமந் நடனகோபால சுவாமிகள் ஜெயந்தி - 5.1.2023

ஸ்ரீமந் நடனகோபால சுவாமிகள் மிகப் பெரிய தவராஜ யோகி. மதுரையில் அவதரித்தவர். அவருடைய அதிஷ்டானம் (ஜீவ சமாதி) அழகர்கோயில் போகும் பாதையில் காதக்கிணறு என்ற இடத்தில் இருக்கிறது. அவர் தமிழிலும், சௌராஷ்டிர மொழியிலும் அருமையான கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார். அந்த கீர்த்தனைகள்  மனதை உருக்கும். ஸ்ரீமந் நடனகோபால சுவாமிகள், சோபகிருது ஆண்டு (1843-ஆம் ஆண்டு) மார்கழி மாதம் 22-ஆம் நாள் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தார். பிறந்த கிழமையோ குருவாரம். மதுரையில் பால்மால் தெருவில் வாழ்ந்து கொண்டிருந்த நெசவாளத் தம்பதியினருக்குப் பிறந்தவர்.

அவருடைய தந்தையின் பெயர், ரங்கா ஐயர் மற்றும் தாயாரின் பெயர் லட்சுமிபாய். அவருக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். மஹான்கள் பிறப்பும், பின் படிப்பும், வாழ்வும் வித்தியாசமாகவே இருக்கும். (வித்தியாசமாக இருப்பவர்கள் எல்லோரும் மஹான்களல்ல என்பது வேறு விஷயம்) ராமபத்திரன் பள்ளியில் சேர்ந்தாலும், படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இன்னும் சொல்லப்போனால், பள்ளிக்கே செல்வதில்லை. ராமபத்ரன் மனது முழுவதும் தெய்வீகத்திலேயே மூழ்கி இருந்தது.

படிப்பில் ஆர்வமில்லை. விளையாட்டி லாவது ஈடுபட்டாரா என்றால் அதுவும் இல்லை. தெருவில் இவரை ஒத்த சிறுவர்களும் சிறுமிகளும் உற்சாகமாக விளையாடும்பொழுது, இவர் ஏதோ சிந்தனையில் இருந்தார். இதைக் கண்டு பெற்றோர்கள் பயந்தனர். இவர்கள் தொழில் நெசவு. படிப்பு ஏறவில்லை.தொழிலில் ஈடுபடுத்தலாம் என்று இவருக்கு நெசவுத் தொழிலைக் கற்றுத் தந்தனர். இந்தத் தொழிலிலும் அவருக்கு ஆர்வமில்லை. பிள்ளைக்கு என்னமோ.. ஏதோ..

ஆகிவிட்டது என்று பெற்றோர் பயந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில், ஒருநாள், யாரிடமும் சொல்லாமல் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். தமது 16 வது வயதில் துறவறம் பூண்டார்.
தென்பரங்குன்றத்தில் ஒரு குகையில் 12 ஆண்டுகள் கடும் துறவு வாழ்க்கை மேற்கொண்டார். இதன் பெயர் குகாசிரமம். இவர் அங்கு தவவாழ்க்கை மேற்கொண்டிப்பது அவருடைய பெற்றோருக்கு  தெரியவில்லை.  அவர்கள் பல இடங்களில் இவரைத் தேடினர். அந்தப் பகுதியில் அவருடைய புகழ் பரவியது.

ஒரு நாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்த ஒரு பெண்மணியை அவருடைய தாய் சந்தித்தார். தன் மகன் வீட்டைவிட்டு வெளியேறியது பற்றியும், அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை என்றும் வருத்தத்தோடு கூறியபோது, அந்த பெண்மணி கூறினார். ‘‘திருப்பரங்குன்றத்தில் ஒரு ஞானி இருக்கிறார் அவரைச் சந்தியுங்கள் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றார். அதை நம்பிய இவரும் திருப்பரங்குன்றம் சென்று அந்த ஞானியைச் சந்தித்தார். அப்பொழுது, அந்த ஞானி தனது மகன்தான் என்பதை தெரிந்துகொண்டார். அவர் தாய்ப் பாசத்தால் தன் மகனின் சந்யாஸ கோலத்தைக் கண்டு கண்ணீர் விட்டார்.

‘‘அப்பா உனக்கு ஏன் இந்தக் கோலம்? நீ வா, ஒன்றும் கவலைப்படாதே, உனக்கு ஒரு திருமணம் செய்துவைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறோம்” என்று பலவாறு கூறி வற்புறுத்தினார்கள். ‘‘அம்மா கிடைத்தற்கரிய மனிதப் பிறவி இந்தப்  பிறவி. இதிலே நான் ஒரு சம்சாரியாக கல்யாணம் செய்துகொண்டு, இரண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, உண்டதே உண்டு, கொண்டதே கோலம் என என்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடியாது. நான் சில உண்மைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். என்னை நீங்கள் வற்புறுத்த வேண்டாம். என் சந்யாஸசத்தை  அங்கீகரித்து  ஆசீர்வதித்து உங்கள் கையால் திருவோடு  தாருங்கள்” என்றார்.

தாயார் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. தன்னுடைய மகனின் பிடிவாதத்தைக்  கண்டு மதுரை திரும்பிவிட்டார். ராமபத்திரரும் அங்கிருந்து முருகப்பெருமானை வணங்கி ஆன்மீகத் தெளிவு பெற ஒரு குருவைத் தேடி பரமக்குடிக்குச் சென்றார். அங்கே யோகக்கலையில் வல்லநாகலிங்க அடிகளார் என்னும் ஒருவரிடம் சீடராகச் சேர்ந்து கொண்டார். அவரிடம் யோகக் கலையைப் பயின்றார். இவர் பயிலும் வேகம் கண்டு அவர் அதிசயித்தார். அவர் பல்லாண்டுகள் பயின்ற கலையை 18 நாட்களில் கைவரப் பெற்றார். நாகலிங்க அடிகளார் இவருடைய வேகத்தையும், பக்தியையும் மெச்சி `சதானந்த சித்தர்’ என்று பெயர் சூட்டினார். எட்டடி உயரத்தில் அந்தரங்கத்தில் நிற்கும் அதியசயத்தைக்  கண்டு  ஊரே  வியந்தது.

அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ராமநாதபுரம் அரசரையும், சிவகங்கை மன்னரையும் கண்டார். அவர்கள், இவரைப் பக்தியுடன் உபசரித்தனர். அங்கே தன்னுடைய யோக சித்தியால் பல அதிசயங்களை நடத்தினார். ஆனாலும் கூட, ஆன்மிகத்தில் அவருக்கு ஒரு மனநிறைவும் தெளிவும் ஏற்படவில்லை என்று உணர்ந்தார். பரமக்குடியில் இருந்து, நம்மாழ்வார் அவதாரம் செய்த ஆழ்வார்திருநகரி என்னும் திருத்தலத்திற்குச் சென்றார். அந்த பெருமாளையும், ஆழ்வாரையும் தரிசித்தவுடன் அவருக்கு ஒரு சிறிய ஒளி கிடைத்தது. அந்தத் தலத்தில் வடபத்திர அரையர் என்கின்ற  ஆச்சாரியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர், இவரின் கதைகளைக் கேட்டுவிட்டுச் சொன்னார்.

‘‘உன் சித்திகள் வித்தை காட்ட உதவும். அதை வைத்து  மோட்சத்தை அடைய முடியாது. உன்னுடைய ஆன்மீக வாழ்வுக்கு இந்த சித்திகள் உதவாது. சித்திகளை விடு. சித்தோபாயமான பெருமானைப் பிடி” என்று உபதேசம் செய்ததோடு இவருக்கு பஞ்ச சம்ஸ்காரமும் செய்து வைத்தார்.சதானந்தஅடிகளார், மாதவராஜயோகியானார். வைணவத் தத்துவங்களை எல்லாம் முறையாக அவருக்கு கற்றுக் கொடுத்தார்.

விசிஷ்டாத்வைதம், கீதாபாஷ்யம், பிரம்மசூத்திர பாஷ்யம், பகவத்கீதை, விஷ்ணுபுராணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் ஆகியவற்றை முறையாகக் கற்று முடித்தார். ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்ட அவர், அவ்வப்பொழுது தன்நிலை மறந்து தன்னை நாயகியாகவும், இறைவனை நாயகனாகவும் எண்ணிக்கொண்டு நடனமாடி தன்னுடைய தாய்மொழியான சௌராஷ்டிரத்திலும், தமிழிலும் அருமையான பாடல்களைப் பாட ஆரம்பித்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய பாடல்களுக்கும், நடனத்திற்கும் வரவேற்பு இருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் போன்ற வைணவத்  தலங்களுக்கு யாத்திரையை மேற்கொண்டார். அந்தந்தத் தலங்களில் எம்பெருமானைப்  பாடி ஆடி வழிபட்டார். ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள், இவருடைய ஹரி பக்தியையும், ஆச்சாரிய விஸ்வாசத்தையும் கண்டு, `நடனகோபால நாயகி’ என்ற பெயரைச்  சூட்டினார். அவர் ஒருமுறை திருமலை யாத்திரைக்காகக்  சென்றுகொண்டிருந்தபோது, கும்பகோணத்துக்கு அருகில் திருபுவனம் என்ற ஊருக்குச் சென்றார். அங்கே ஒரு பெண்மணிக்கு வெகு காலம் குழந்தை இல்லாமல் இருந்தது. நடனகோபால சுவாமிகள் அந்த பெண்ணை ஆசீர்வதித்து, ‘‘அம்மா, ஒன்றும் கவலைப்படாதே. நான் திருமலைக்குச் சென்று வருவதற்குள் நீ ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பாய்” என்று ஆசீர்வாதம் செய்துவிட்டு திருமலை யாத்திரை கிளம்பினார்.

திரும்ப அந்த ஊருக்கு வந்தபொழுது அவருடைய ஆசீர்வாதம் பலித்து இருந்தது. கருவுற்றிருந்த அந்தப் பெண் தன்னுடைய பட்டுப்புடவை, நகைகள் இவற்றையெல்லாம் நடனகோபால நாயகி சுவாமிகளின் காலடிகளில் வைத்து, இந்தக்  காணிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள். அப்பொழுதுதான் பளிச்சென்று அவருடைய சிந்தனையில் ஒரு விஷயம் உதயமாயிற்று.

‘‘தாம் நாயகி பாவத்தில் பெருமாளைப் பாடுகின்றோம்; ஆனால் நிஜ நாயகியாகவே இந்தச் சேலையை அணிந்துகொண்டு பாட வேண்டும் என்பது எம்பெருமான் திருவுள்ளம் போலிருக்கிறது” என்று நினைத்துக்கொண்டு அங்கேயே அந்தப் பெண்மணி கொடுத்த சேலையை அணிந்துகொண்டு, வளையல்களையும் போட்டுக்கொண்டார்.

காலில் சதங்கை கட்டிக் கொண்டு ஆட ஆரம்பித்தார். நிஜமாகவே தன்னை ஒரு பெண்ணாகக்  கருதிக்கொண்டு நாயகி பாவத்தில் எம்பெருமான் மீது பல பக்திப் பாடல்களைப் பொழிந்தார். பல திவ்ய தேசங்களுக்கு யாத்திரை சென்றார். அவர்  கவிதைகள் பட்டினத்தடிகள் போல வாழ்வின் விரக்தியை வெளிப்படுத்தி வைராக்யத்தைக் கொடுக்கும். ஆழ்வார்கள் பலரின்  பாடல்களின் தாக்கம் அவர் கீர்த்தனைகளில் உண்டு. வைணவ நெறியும் தத்துவங்களும் அவர் கீர்த்தனையில் எதிரொலிக்கும். அவருடைய அற்புதமான வாக்குகளில் சிலவற்றைப்  பார்க்கலாம்.

1. பகவான் நாமத்தை என்றும் சொல்லுங்கள். அது ஒன்றே உங்களைக்  காக்கும். கண்ணன் காட்டிய வழியே  நாம் செல்ல வேண்டிய வழி என்பதை உணருங்கள்.

2. எந்த வேளை, எந்த இடத்தில், எந்த ஊரில், இந்த உயிர் போய்விடும் என்று நமக்குத் தெரிவதில்லை. அப்படிப் போன உயிர் அடுத்து ஒரு ஜன்மம் எடுத்தால், எப்படிப்  பிறக்குமோ அதுவும் புரியவில்லை. அதனால் தலையைத் தலையை ஆட்டாமல், காது கொடுத்து இப்போதாவது நான் சொல்வதைக் கேளுங்கள். ஹரியை தியானம் செய்வது ஒன்றே நீங்கள் உஜ்ஜீவிக்க ஒரே  வழி.

3. உண்டு என்று சொல்பவர்களுக்குத்  தான் இறைவன். இல்லை என்பாருக்கு  இல்லை. உண்டு என்று சொன்ன பிரகலாதன் வாழ்ந்தான். இல்லை என்று சொன்ன இரணியன்  அழிந்தான். அகம்பாவத்தின்   விளைவையும் நாமறிவோம். அப்படியானால், நமக்கு எது சரியானது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

4. நான் சதா சர்வ காலமும் இறைவன் ஞாபகமாகவே இருப்பதால், என்னை பித்தன் என்று நினைக்காதீர்கள். நீங்கள்தான் பித்தராக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். கேசவா,  மாதவா என்று அழையுங்கள். உங்கள் பித்தம் தணியும்.

5. நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இன்று, நாளை, நாளை மறுநாள் என்று நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நாட்கள் என்னவோ நகர்ந்து போய்விடும். அதற்குள் இறைவனை எண்ணுங்கள். எந்த துயரங்களும் உங்களை அண்டாது. நம்புங்கள்.

6. ஹரி நாமஸ்மரணமும், ஹரிபஜனையும் செய்யாத நாட்கள் நீங்கள் வாழாத நாட்கள்.

7. அவனுக்குப்  படைக்காது உண்ணப்படும் உணவு உணவே அல்ல.

8. வெண்ணெய் திருடி உண்டவன். மண்ணை உண்ட பெருவாயன்.  அந்தப் பெருமானின் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார் பெருமாள். இதோ இருக்கிறான் கண்ணன். நீங்கள் அவரை நம்புங்கள். வாருங்கள் எல்லோரும் வாருங்கள்.  கண்ணனை நாம் தரிசிக்கலாம். ஒரு அருமையான கீர்த்தனைகளை நடனகோபால நாயகி சொல்லுகின்றார். அதில் அவர் தவிப்பு வெளிப்படும்.

‘‘இதோ கண்ணன். இங்கேதானே இருந்தான். எங்கேயோ மறைந்தானே. அலகிலா விளையாட்டுடையான் அல்லவா! அவன் என்னை தவிக்க விட்டுவிட்டு, வேடிக்கை பார்க்கிறான். நான் அவனை காதலித்தேன்.. எங்கே என் கண்ணன் எங்கே?

மகான்கள் முக்காலங்களையும் உணர்ந்தவர்கள். நடனகோபால நாயகி சுவாமிகள், தம்முடைய அந்திமக் காலத்தைக்  குறித்து தீர்மானமாக இருந்தார். ரங்கத்தில் தன்னுடைய அதிஷ்டானத்தை அமைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அது முடியவில்லை. அதனால்தான், மோட்சம் அடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தமது சீடர்களிடம் சொல்லி, அழகர்கோயில் அருகிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் தமக்கான பிருந்தாவனத்தை அமைக்குமாறு கூறினார். இது சொன்னது 1912 ஆம் ஆண்டு. 1914 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி.

மார்கழி மாதம் 23 ஆம் நாள்.  அஷ்டமி திதி அன்று யோகத்தில் சுவாசபந்தனம் செய்தார்.  நவமியும், தசமியும் நகர்ந்தன. சமாதி நிலையில் இருந்தார். வைகுண்ட ஏகாதசி வந்தது.  இவரது முடிவை அறிந்து சென்னையிலிருந்து, ஹரிகிருஷ்ணன் என்பவர் வந்தார்.

“ஹரி வந்துவிட்டார்” எனச் சீடர்கள் கூறினார்கள்.  ஸ்வாமிகள் மௌனம் கலைந்து  கலகல எனச் சிரித்தார். ‘‘ஆமாம் ஆமாம். என்னை அழைக்க ஹரி வந்துவிட்டார்”.  என்றார். வானத்தைப் பார்த்தார்.  வணங்கினார்.  உயிர் பிரிந்தது.  அன்றைய   நட்சத்திரம் அவர் பிறந்த மிருகசீரிடம். அவர் பிறந்த வியாழக்கிழமை.

அவருக்கான ஆலயம் ``நடனகோபால நாயகி மந்திர்’’ என்ற பெயரில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மேல்வீதியில் உள்ளது. நடனகோபால நாயகி ஜெயந்தி விழாவை, அங்கு வருடா வருடம் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அப்போது அவர் பயன்படுத்திய ஆடைகள், தலைப்பாகை, சலங்கை, வளையல்கள் முதலியவற்றை நாம் தரிசிக்க முடியும்.

தொகுப்பு: பாரதிநாதன்

Tags : Harry ,
× RELATED ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கு...