சிவகார்த்திகேயன் ஆகப்போறேன்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான படம், ‘கனா’. இதில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலையாய் காதலிக்கும் வேடத்தில் அறிமுகமானவர், குன்னூரைச் சேர்ந்த இளைஞர் தர்ஷன். சினிமா வாடையே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த அவர், ‘கனா’ படத்துக்குப் பிறகு ஒரு படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார். அவரிடம் பேசினோம்.

“ஊட்டி, மேட்டுப்பாளையம், கோயமுத்தூர் பக்கம் ஷூட்டிங் நடத்த வர்றவங்க, கண்டிப்பா குன்னூரிலும் ஒரு காட்சியை படமாக்குவாங்க. அந்தளவு இயற்கை அழகுள்ள பூமிதான் எனக்கு சொந்த ஊர். அப்பா சுப்பிரமணி, டீ பிசினஸ் பண்றார். அம்மா லதா, எஜுகேஷன் டிபார்ட்மென்டில் வேலை பார்க்கிறார். ஒரே தம்பி கவுசிக், காலேஜ் முடிச்சிட்டு வேலை தேடிக்கிட்டிருக்கான். கோயமுத்தூர் காலேஜில் பி.காம் படிச்ச நான், பெங்களூரில் ஒரு கம்பெனியில் மாசம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தேன். படிக்கிறப்பவே சினிமா ஆசை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிச்சது. என் ஃப்ரெண்டுங்க நிறையபேர் விஸ்காம் ஸ்டூடண்ட்ஸ். அவங்க தினமும் ஏதாவது குறும்படம் எடுக்கிறேன்னு ஷூட்டிங் நடத்துவாங்க. ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணுவாங்க. நானும் அதில் ஆர்வத்தோட கலந்துக்குவேன். திடீர்னு ஃப்ரெண்டுங்க என்னை சில குறும்படங்களில் நடிக்க வெச்சாங்க.

என் ஃப்ரெண்டு அய்யப்பன், சிவகார்த்திகேயன் சாருக்கு ரொம்ப குளோஸ் ஃப்ரெண்டு. அய்யப்பன் மூலமாதான் சிவகார்த்திகேயன் சார் கூட பழகினேன். தினமும் அவர் கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போவேன். எப்படி நடிக்கிறார்னு பார்ப்பேன். எனக்கு ‘கனா’ முதல் படமில்லை. ‘ரஜினிமுருகன்’ படத்திலேயே அவரோட
தம்பியா வந்தேன். நடிப்புன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்காகதான் இந்த சின்ன கேரக்டரில் நடிச்சேன். பிறகு நிறைய புதுப்படங்களோட ஆடிஷனுக்கு போனேன். சில படங்களில் என்னை செலக்ட் பண்ணாங்க. ஆனா, ஷூட்டிங் போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி எனக்கு போன் பண்ணி, ‘ஸாரி பிரதர். இந்த கேரக்டரை வேற ஒருத்தர் பண்றாரு’ன்னு சொல்லி என்னை நிராகரிப்பாங்க.

உடனே எனக்கு அழுகை வரும். அவமானம் தாங்க முடியாது. ஆனா, எனக்கும் ஒருநாள் நல்ல காலம் வரும்னு, ஆத்திரப்படாம அமைதியா காத்திருந்தேன். அந்த நேரத்தில்தான் அருண்ராஜா காமராஜ் ‘கனா’ படத்தின் கதையை எழுத ஆரம்பிச்சார். வழக்கம்போல் அவர்கிட்டேயும் வாய்ப்பு கேட்டேன். ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்து படிக்க சொன்னார். முழுசா படிச்சேன். இதில் எந்த கேரக்டர் பண்றேன்னு கேட்டார். இப்ப நான் பண்ண கேரக்டரை பற்றி சொன்னேன். அவருக்கும் அது சரின்னு பட்டது. இப்படித்தான் ‘கனா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலையாய் காதலிக்கிற கேரக்டரில் நடிச்சேன்.

ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி பாலா என்பவர் கிட்ட ஆக்டிங் கத்துக்கிட்டேன். பிறகு சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கம்பெனியில் ரிகர்ஸல் பார்த்தேன். எப்படி டயலாக் பேசி நடிக்கணும்னு டிரெய்னிங் எடுத்தேன். அதுக்கு பிறகுதான் ‘கனா’ ஷூட்டிங்கிற்கு தயார் ஆனேன். இப்போ படம் ரிலீசாகி எனக்கு நல்லபேர் கிடைச்சிருக்கு. அடுத்து, ‘கொடி’ டைரக்டர் துரை.செந்தில்குமாரோட உதவியாளர் ஹரீஷ் ராம் டைரக்‌ஷனில் ஹீரோவா நடிக்கிறேன். சிட்டி பையன் கேரக்டர். அட்வெஞ்சர் கதை என்பதால், நிறைய ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

நடிப்பு விஷயத்தில் எனக்கு இன்ஸ்பிரேஷன் சிவகார்த்திகேயன் சார்தான். பல விஷயங்களில் அவரை நான் ஃபாலோ பண்றேன். கதைக்கு திருப்புமுனையான கேரக்டரை செலக்ட் பண்ணி ஹீரோவா நடிப்பேன். ஆடிஷனுக்கு போய் நிராகரிக்கப்பட்ட அவமானங்களை நினைச்சு வருத்தப்பட்டாலும், கிடைச்சதை வெச்சு சிறப்பா வாழ முடிவு பண்ணியிருக்கேன். ஸோ, இனிமே என்னை நிறைய படங்களில் பார்க்கலாம்” என்ற தர்ஷன், இதுவரை யாரையும் காதலிக்கவில்லையாம்.
“எனக்கு இப்பதான் 27 வயசு. அதுக்குள்ள காதல், கல்யாணம்னு மாட்டிக்க விரும்பலை” என்று கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருக்கிறார்.

Tags : Sivakarthikeyan ,
× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...