×

பஞ்சாங்கத்தில் இதையெல்லாம் பயன்படுத்துங்கள்

பஞ்சாங்கம் என்கின்ற சொல் பலருக்கும் தெரியும். அந்த பஞ்சாங்கத்தில் உள்ள முக்கியமான பகுதிகளில் ஒன்று பஞ்சகம். முகூர்த்த லக்னம் முறையாகக் குறிக்கக்கூடிய பெரும்பாலான, பழமையான, வைதிகமான, விபரம் தெரிந்த ஜோதிடர்கள், பஞ்சகத்தைப் பார்க்காமல் நாள் குறிக்க மாட்டார்கள். குறிப்பாக, திருமண லக்னத்திற்கு பஞ்சகம் பார்த்து நாள் குறிப்பதே சிறந்தது. இதை மிக எளிதாகவே பார்க்கலாம். திதி, வாரம், நட்சத்திரம், லக்னம், துருவம் என்ற ஐந்து பகுதிகள் கொண்டது பஞ்சகம். பஞ்சகம் சரியாக அமையாது போனால் பரிகாரங்கள் சிலவற்றிற்கு கூறப்பட்டுள்ளது. அத்தகைய பரிகாரங்களுக்கு “பஞ்சக ப்ரீதி” என்று பெயர்.

பஞ்சகம் பார்க்க வேண்டிய முறை

1. ஞாயிற்றுக்கிழமை தொட்டு முகூர்த்தம் நடக்கும் கிழமை வரை எண்ணி குறித்துக் கொள்ள வேண்டும்.
2. சுக்கிலபிரதமை தொட்டு அன்றைய திதிவரை எண்ணி வருகின்ற எண்ணை குறித்துக்கொள்ள வேண்டும்.
3. அஸ்வினி நட்சத்திரம் தொட்டு அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி குறித்துக் கொள்ள வேண்டும்.
4. மேஷம் தொட்டு எண்ணி முகூர்த்தம் நடைபெறும் லக்னம் வரை எண்ணி குறித்துக் கொள்ள வேண்டும்.
5. லக்ன துருவத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

ஐந்து எண்களையும் கூட்டி 9-ல் வகுக்க வேண்டும். மீதி 3, 5, 7, 9 வந்தால் `நிஷ்பஞ்சகம்’ என்று கூறவேண்டும். நிஷ்பஞ்சகம் என்றால் தோஷம் இல்லாத பஞ்சகம் என்று பொருள்படும்.

பரிகாரங்கள் எதுவும் செய்யாமல் முகூர்த்தம் நடத்தலாம்.
 
மீதி 1 வந்தால் மிருத்யு பஞ்சம்
மீதி 2 வந்தால் அக்னி பஞ்சகம்
மீதி 4 வந்தால் ராஜ பஞ்சகம்
மீதி 6 வந்தால் சோர பஞ்சகம்
மீதி 8 வந்தால் ரோக பஞ்சகம்


மிருத்யு பஞ்சகம் வந்தால் அந்த முகூர்த்தத்தை தவிர்த்துவிட வேண்டும். அக்னி பஞ்சகம் வந்தால், சந்தன குழம்பு தானம், ராஜ பஞ்சகம் வந்தால் எலுமிச்சம் பழம் தானம், சோர பஞ்சகம் வந்தால் தீப தானம், ரோக பஞ்சகம் வந்தால் தானியம் தானம் செய்து விட்டு, முகூர்த்தத்தை நடத்தலாம். இவ்வாறு தானம் செய்வது பஞ்சக ப்ரீதி என்று கூறப்படும்.

சில முக்கிய விதிகள்

1. பகலில் அக்னி பஞ்சகம், ராஜ பஞ்சகம், தவிர்த்து விடுதல் நல்லது.
2. இரவில் சோர பஞ்சகம், ரோக பஞ்சகம் தவிர்த்து விடுதல் நல்லது.
3. எல்லா முகூர்த்தங்களும் பகல் ஆனாலும் சரி, இரவு ஆனாலும் சரி மிருத்யு பஞ்சகம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
4. உபநயனத்தில் ரோக பஞ்சகம் ஆகாது.
5. திருமணத்தில் ராஜா பஞ்சகம் ஆகாது.

லக்கின துருவம் குறித்து பஞ்சாங்கங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதிலும் ஒவ்வொரு பஞ்சாங்கத்திலும் சிறு மாற்றங்கள் உண்டு. நீங்கள் வழிவழியாக பின்பற்றுகின்ற பஞ்சாங்கத்தின்படி பார்த்தால் போதும். சுபகாரியங்களை நடத்துவதற்கு இரு கண்ணுள்ள கிழமைகளான வளர்பிறை திங்கள், புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை நலம். ஆயினும் இப்பொழுது விடுமுறை தினத்தை அனுசரித்து ஞாயிற்றுக்கிழமை வைத்துக் கொள்கின்றார்கள்.

சுபகாரியங்களை நடத்துவதற்கு திதியும் முக்கியம். முதல்தர சுப திதிகளான திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளில் சுபகாரியங்களை நடத்தலாம். இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு.  அதனையும் அனுசரிக்க வேண்டும்.

ருது கால ஜாதக பலன்


பெண்களுக்கு ருது கால ஜாதக பலன் (பூப்பெய்தல்) என்று ஒன்று உண்டு. இன்னும் கிராமங்களில், ருது ஜாதகத்தை குறித்து வைத்துக் கொண்டு அதையே எல்லாவற்றுக்கும் பார்க்கிறார்கள். அதைப் பார்த்து பலன் தெரிந்து கொள்வதில் பல சிக்கல்கள் உண்டு. இப்பொழுது காலம் மாறிவிட்டது. ருது காலத்தை துல்லியமாக கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

அது தவிர எந்த ஜாதகமாக இருந்தாலும், அது தனிப்பட்ட ஒருவரின் பலாபலன்களை மட்டுமே சொல்லும் என்பதினால், ஒருவருடைய பிறந்த ஜாதகத்தை வைத்துக் கொண்டு பலன் சொல்வதுதான் சாலச்சிறந்தது. ருது ஜாதகத்தை துணை ஜாதகமாக தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாமே தவிர, ருது ஜாதகத்தை வைத்து ஒவ்வொன்றையும் நிர்ணயம் செய்வது என்பது நடைமுறைக்கு ஒத்துவராது. ஜாதகம் பார்ப்பதிலும் நாள் குறிப்பதிலும் நடைமுறை வழக்கம் என்று ஒன்று அனுசரித்துத்தான் செய்ய வேண்டும்.

பஞ்சபட்சி சாஸ்திரம்

பஞ்சபட்சி சாஸ்திரம் என்று ஒரு விஷயம் பஞ்சாங்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் பொழுது, அது வெற்றிகரமாக அமைவதற்கு இந்த பஞ்சபட்சி சாஸ்திரம் கடைபிடிக்கப்படுகிறது. இது முகூர்த்த நிர்ணயம் போன்ற விஷயத்திற்குப் பயன்படாது. ஒருவரை பார்க்க செல்லுதல், பணத்தை வசூலிக்க செல்லுதல் போன்ற சில காரியங்களுக்கு இந்த பஞ்சபட்சி சாஸ்திரம் நடைமுறையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது, அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. சிவபெருமான் பார்வதி தேவிக்கு, பஞ்சபட்சி சாஸ்திரத்தினை சொல்ல, பார்வதி தேவி நந்தியிடம் சொல்ல, நந்திதேவர் போகரிடம் சொல்ல, போகர் பஞ்சபட்சி சாஸ்திரம் என்ற நூலை தந்தார். அதன் பிறகு போகரின் சீடரான உரோமரிஷிக்கு போகர் கூறுவதைக் கேட்டு உரோமரிசியும் பஞ்சபட்சி குறித்தான ஓர் நூலை இயற்றியுள்ளார். உரோமரிஷி இயற்றிய நூலுக்கு வினாடி பஞ்சபட்சி சாஸ்திரம் என்று பெயர்.

இந்தக் கலையை அறிந்தோர் எதிரிகளை வெல்வர் என்பது நம்பிக்கையாகும். காலம் மற்றும் வெற்றி வாய்ப்பினை கணிக்க இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தினை கற்கின்றனர். பஞ்ச பட்சிகள் எனக் கூறப்படும் பறவைகளாவன, வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்பனவாகும். இதில் முதலில் அவரவர் பிறந்த நட்சத்திரங்களுக்கான பறவைகளை குறித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வளர்பிறையில் பிறந்திருந்தால், இந்த வரிசைப்படி குறித்துக்கொள்ள வேண்டும்.

1 அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிசம் - வல்லூறு
2 திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் - ஆந்தை
3 உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் - காகம்
4 அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் - கோழி
5 திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - மயில் தேய்பிறையில், பிறந்திருந்தால் இந்த வரிசைப்படி குறித்துக்கொள்ள வேண்டும்.
1 அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிசம் - மயில்
2 திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் - கோழி
3 உத்திரம், ஹஸ்தம். சித்திரை, சுவாதி, விசாகம் - காகம்
4 அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் - ஆந்தை
5 திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - வல்லூறு

27-நட்சத்திரங்கள், 12-ராசிகள், 9-கிரகங்கள் என அனைத்தும் இந்த பஞ்சபட்சிகளுக்குள் அடக்கம் என்று கூறுகிறார்கள். இதை வைத்துக்கொண்டு சரியான காலத்தை நிர்ணயிப்பது எப்படி.? அதை அடுத்த இதழில் பார்க்கலாம்.

தொகுப்பு: தேஜஸ்வி       

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்