×

ஓ.பன்னீர்செல்வத்தின் பதவியை பறிக்க மீண்டும் மனு அளிக்க முடிவு; மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் எடப்பாடி இன்று மாலை ஆலோசனை

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அதன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில், சட்டசபையில் ஓபிஎஸ் தரப்பை சமாளிப்பது, அவரை சட்டப்பேரவை அதிமுக துணை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்காக மீண்டும் புகார் அளிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்டம் அதிமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவின் உட்கட்சி பிரச்னை அதிமுகவினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டாலும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது ஆளுமையை நிலைநிறுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேபோன்று, ஓ.பன்னீர்செல்வமும் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதன்படி, எடப்பாடி தலைமையின் அதிருப்தி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார். அதேபோன்று, சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார். அதன்படிதான், பண்ருட்டி ராமச்சந்திரன், மைத்ரேயன் ஆகியோரை தன் பக்கம் இழுத்தார் ஓ.பன்னீர்செல்வம்.  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் நீதிபதிகள் அளித்த உத்தரவு தடையாக அமைந்தது. ஓபிஎஸ் பிரச்னை செய்தாலும் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை யாராலும் தடுக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் சேர வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக அறிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறி வருகிறார். இந்நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்யவுள்ளார். இக்கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஒற்றைத்தலைமை பிரச்னை உச்சக்கட்ட மோதலில் உள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் நாளுக்கு ஒரு பேட்டி அளித்து வரும் நிலையில் இன்றைய தினம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எம்எல்ஏக்கள் கூட்டம் கூடுகிறது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வான பின்னர், அவர் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக சட்டசபைக் கூட்டம் நடக்கும் முன்பாக, தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடக்கும். மாவட்ட செயலாளர்களை இணைத்து தற்போது இந்த கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், அக்டோபர் 17ம் தேதி தொடங்க உள்ள சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்துகின்றனர். எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரும், துணை கொறடா பதவியிலிருந்து மனோஜ் பாண்டியனை நீக்கிவிட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை சபாநாயகர் அப்பாவு ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவேளை தேர்தல் ஆணையத்தின் முடிவை சபாநாயகர் எதிர்பார்த்து, ஓ.பன்னீர் செல்வத்தை பதவியில் இருந்து நீக்காமல் இருக்கும்பட்சத்தில், ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் சட்டசபைக்கு வந்தால் அவர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மீண்டும் சபாநாயகரை சந்தித்து மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்டோபர் 17ம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு நாள். இதற்காக மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்த தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. வழக்கறிஞர்கள் குழு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக அரசு தொடுக்கும் வழக்குகளை சமாளிக்க ஏதுவாக, புதிய வழக்கறிஞர் குழு அமைப்பது குறித்தும், வழிகாட்டுதல் குழுவை மாற்றியமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.அதேபோல, பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பேசவுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆலோசனை கூட்டத்திற்கு வரும் அனைத்து எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் கோரிக்கையை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் மோடி சந்திக்க மறுத்தது, அமித்ஷா சந்தித்தாலும் பன்னீர்செல்வம் விவகாரத்தில் தலையிட மறுத்தது, தொடர்ந்து அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடுவது ஆகிய பிரச்னைகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடிய போது ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த போது ஏற்பட்ட கலவரத்தை யாராலும் மறக்க முடியாது. இன்றைய தினம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது….

The post ஓ.பன்னீர்செல்வத்தின் பதவியை பறிக்க மீண்டும் மனு அளிக்க முடிவு; மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் எடப்பாடி இன்று மாலை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Pannerselvam ,District Secretaries ,Addapadi ,Chennai ,Edappadi Palanisamy ,Bannerselvam ,Dinakaran ,
× RELATED அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...