×

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்!

(மத்தேயு 19:3-10)

கணவன்  மனைவியான அவர்கள், கல்யாணமான புதிதில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தனர். காலப்போக்கில் கருத்து வேறுபாடு வளர்ந்து அது முற்றியது. கடைசியில் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து வேண்டினர். இந்த உறவு அறுந்து போக வேண்டியது தான். வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டதற்காக உற்றார், உறவினர்கள் எல்லோரும் கவலைப்பட்டார்கள்.

கடவுளே! இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு என்று வேண்டினார்கள். ஒருநாள் ஒரு பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்து, இப்போது நமக்குள் ஒரு போட்டி. அதில் நீங்கள் ஜெயித்துவிட்டால் நானே முன்னின்று உங்களுக்கு விவாகரத்து வாங்கித் தருகிறேன். நான் ஜெயித்து விட்டால் நான் சொல்கிறபடி நீங்கள் கேட்க வேண்டும். சரி! என்ன போட்டி? அதைச் சொல்லுங்கள்!

முதலில் ஒரு மெல்லிய நூல் கொண்டு வாருங்கள்; நூலைக்கொண்டு வந்தார்கள். பெரியவர் அதை வாங்கிக் கொண்டார். இப்போது இந்த நூலின் ஒருமுனையை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னொரு முனையை நான் பிடித்துக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் சேர்ந்து இழுத்து இந்த நூலை அறுத்துவிட வேண்டும். அவ்வளவுதான். இது ஒரு பெரிய காரியமா? என்று சொல்லிக்கொண்டே அவர்கள் பக்கம் இழுக்க ஆரம்பித்தார்கள்.

இந்தப் பக்கம் நின்ற பெரியவரோ, அவர்கள் இழுக்க இழுக்க அவர்கள் பக்கமே நகர்ந்துபோய்க் கொண்டிருந்தார். அப்புறம் எப்படி நூல் அறுபடும், அவர்கள் சுற்றிச்சுற்றி வந்தார்கள். பெரியவரும் கூடவே சுற்றிச்சுற்றி வந்தார். இறுதியாக அந்தக் கணவன்மனைவி தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டார்கள். இப்போது பெரியவர் சொன்னார். இவ்வளவுதான் வாழ்க்கை! ‘‘விட்டுக்கொடுக்கத் தெரிந்தால் உறவு அறுந்து போகாது.’’ வாழ்க்கையின் மகத்துவத்தை கண நேரத்தில் புரிந்துகொண்ட கணவனும் மனைவியும் கண் கலங்க, பெரியவரின் காலில் விழுந்தார்கள்.

‘‘விட்டுக் கொடுக்கத் தெரிந்தவர்களே ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும்.‘‘பரிசேயர் இயேசுவை அணுகி, அவரை சோதிக்கும் நோக்குடன், ஒருவர் தன் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா? என்று கேட்டனர். அவர் மறுமொழியாக, ‘‘படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணும், பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால், கணவன் தன் தாய், தந்தையை விட்டு விட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.

இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்
கட்டும் என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘‘அப்படியானால் மண விலக்கு சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?’’ என்றார்கள். அதற்கு அவர் உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கி விடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால், தொடக்க முதல் அவ்வாறு இல்லை.

பரத்தமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டு தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவருமே விபச்சாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார். ‘‘கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என்றார்கள் சீடர்கள்.’’

‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

Tags : God ,
× RELATED தண்ணீர்… தண்ணீர்…