×

சாருகேசிக்கு ரஜினிகாந்த் கொடுத்த ஐடியா

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘பாபா’ ஆகிய படங்களை இயக்கியவர், சுரேஷ் கிருஷ்ணா. தற்போது அவர் இயக்கியுள்ள ‘சாருகேசி’ என்ற படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி ஜோடியுடன் சத்யராஜ், ரம்யா பாண்டியன், சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், மதுவந்தி நடித்துள்ளனர். படம் குறித்து சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில், ‘சாருகேசி என்பது ஒரு மியூசிக்கல் பெயர். இந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி சொல்வது என் கடமை. காரணம், இந்த படத்தின் கதையை முதலில் நாடக வடிவத்தில் பார்த்து ரசித்து, அவர்தான் இதை திரைப்படமாக உருவாக்க ஐடியா கொடுத்தார்.

நான் அந்த நாடகத்தை பார்த்துவிட்டு, ‘இது திரைப்பட உருவாக்கத்துக்கு ஒரு அற்புதமான கதையாக இருக்கிறதே’ என்று சொன்னேன். உடனே ஒய்.ஜி.மகேந்திரன், ‘நீங்கள் இயக்கினால் நான் நடிக்கிறேன்’ என்றார். ரீமேக் படத்தை விட, நாவலை விட, மேடை நாடக கதையை திரைப்படமாக உருவாக்குவது என்பது மிகவும் கஷ்டம். அந்த நாடகத்தை வீடியோ வடிவில் பார்த்துவிட்டு திரைக்கதை எழுதினேன். ரஹ்மான், விந்தியா நடித்த ‘சங்கமம்’ என்ற படத்தை இயக்கியுள்ளேன். கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி முழுநீள படத்தை இயக்கியது இல்லை.

தேவா சார் கர்நாடக இசையை சிறப்பாக அமைத்துள்ளார். கர்நாடக பாடல்களை பாடுவதற்கு சங்கர் மகாதேவனிடம் கேட்டபோது, ‘உங்கள் சம்பளத்தை என்னால் தர முடியாது’ என்றேன். டியூனை கேட்ட அவர், ‘இந்த பாடலை மிஸ் செய்தால், அது நான் செய்த மிகப்பெரிய தவறாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு பாடினார். சம்பளம் எவ்வளவு என்று கேட்டபோது, ‘இதுபோல் ஒரு வாய்ப்பு கிடைப்பது அபூர்வம்’ என்றார். அதை கேட்டு எனக்கு பெருமையாக இருந்தது’ என்றார்.

Tags : Rajinikanth ,Charukesi ,Suresh Krishna ,Y.G. Mahendran ,Suhasini ,Sathyaraj ,Ramya Pandian ,Samuthirakani ,Jayaprakash ,Thalaivasal Vijay ,Madhuvanthi.… ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...