×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

485. விதாத்ரே நமஹ (Vidhaathrey namaha)

அஜாமிளன் என்பவன் இளமைக் காலத்தில், தருமத்தில் நாட்டம் கொண்டவனாக நல்ல முறையில் இல்வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஆனால், காலப்போக்கில் தீய சகவாசத்தால், தருமத்தை மறந்து அறநெறிக்குப் புறம்பான வாழ்க்கையை வாழத் தொடங்கிப் பற்பல தீய செயல்களிலே ஈடுபடத் தொடங்கினான். வயது முதிர்ந்து அவனது ஆயுள் முடியும் தறுவாய் வந்த போது, யம தூதர்கள் அவன்மீது பாசக் கயிற்றை வீசுவதற்காக வந்தார்கள்.

அச்சமயம், அவன் இளம்வயதில் செய்த பக்தியின் நினைவு அவன் மனதில் தோன்றியது. எப்போதுமே நாம் செய்த சிறிய தருமச்செயல் கூட வீண் போகாது. அந்த நற்செயலின் பயனாக, தனது கடைசி மகனை அழைக்க வேண்டும் என்ற எண்ணம் அஜாமிளன் மனதில் தோன்றியது. அந்த மகனின் பெயர் நாராயணன். இவன் திருமாலை எண்ணிக் கூப்பிடாவிட்டாலும், மகனை எண்ணி “நாராயணா!” என்று அழைத்தான்.

உடனே, அங்கே விஷ்ணு தூதர்கள் வந்தார்கள். யம தூதர்களைப் பார்த்து, “இவன் பகவானின் திருநாமத்தை உச்சரித்துவிட்டான். இனி இவனை நாங்கள் விஷ்ணு லோகம் அழைத்துச் செல்வோம்! நீங்கள் யம லோகம் அழைத்துச் செல்லக்கூடாது!” என்றார்கள். இதைக் கேட்ட யமதூதர்கள், “என்ன சொல்கிறீர்கள்? இவன் தனது மகனின் பெயரைத் தானே சொன்னான்?” என்று கேட்டார்கள்.

அதற்கு விஷ்ணு தூதர்கள், “அவன் யாரை நினைத்துச் சொல்லி இருந்தாலும், சொன்னது திருமாலின் திருப்பெயர். அதற்குப் பலன் உண்டு. நீங்கள் நெருப்பில், தெரிந்து கை வைத்தாலும் தெரியாமல் கை வைத்தாலும் சுடும். மருந்தைத் தெரிந்து உட்கொண்டாலும், தெரியாமல் உட்கொண்டாலும் நோய் தீரும். அதுபோலத்தான் பகவானின் திருநாமங்களும்!” என்று விடையளித்தார்கள். “அப்படியே இருந்தாலும், ஒருமுறைதானே இவன் நாராயணா என்று சொன்னான்?” என்று கேட்டார்கள் யமதூதர்கள். விஷ்ணு தூதர்கள், “ஆயிரம் வருடங்கள் இருட்டாக இருந்த ஓர் அறையில், விளக்கை ஏற்றினால், அந்த நொடியே வெளிச்சம் வந்து விடுகிறது அல்லவா? அதுபோலத் தான் எத்தனையோ பிறவிகளாகப் பாபம் செய்திருந்தாலும், ஒருமுறை பகவானின் திருப்பெயரை உச்சரித்தவாறே பாபங்கள் நீங்கி, அவர்கள் தூய்மை அடைந்துவிடுகிறார்கள்.

அதன்பின், அவர்களின் மனம் பாபச் செயலில் ஈடுபடுவதில்லை!” என்று விளக்கினார்கள். அதைக் கேட்ட யமதூதர்கள், யம லோகத்துக்கே திரும்ப வந்துவிட்டார்கள். விஷ்ணு தூதர்கள், அஜாமிளனை நல்லோர்கள் இருக்கும் இடத்தில் கொண்டு சென்று சேர்த்தார்கள். அடியார்களோடு கூடியதால், மனம் திருந்தி பக்தி வளரப்பெற்ற அஜாமிளன், அதன்பின் திருமாலைத் தஞ்சம் அடைந்து படிப்படியே முக்தி பெற்றான்.

யமதூதர்கள் யமனிடம், “நாங்கள் அஜாமிளனைப் பிடித்துவரச் சென்றபோது விஷ்ணு தூதர்கள் எங்களைத் தடுத்து விட்டார்கள்! இப்படிக் கடமை செய்யும் போது இடையூறு ஏற்படாமல் நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று கோரினார்கள்.யமனோ, “அடடா! என்ன காரியம் செய்தீர்கள்? பகவானின் திருநாமங்களைச் சொல்வோருக்கு அருகில் நீங்கள் செல்லவே கூடாது! தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கிறார் என்றால், அவர்களை உங்களுக்குத் தலைவர்களாகக் கருதி வணங்கிவிட்டு நீங்கள் திரும்ப வந்துவிடுங்கள். உலகில் உள்ள மற்றவர்களுக்கு வேண்டுமானால் நான் தலைவனாக இருக்கலாம். ஆனால், எனக்கும் மேல் தலைவராக இருப்பவர் திருமால். எனவே, அந்தத் திருமாலின் தொண்டர்களிடம் நீங்கள் அபச்சாரப் பட்டு விடாதீர்கள்!” என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னானாம்.

இப்படி யமன் உள்ளிட்ட அனைத்துத் தேவர்கள், முனிவர்கள், கிரகங்கள் எல்லோரையும் நியமித்து இயக்குபவராகத் திருமால் விளங்குவதாலே, அவர் ‘விதாதா’ என்று அழைக்கப்படுகிறார். ‘விதாதா’ என்றால் நியமித்து இயக்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 485-வது திருநாமம்.“விதாத்ரே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு, யமபயம் வாழ்வில் ஏற்படாதபடித் திருமால் அருள்புரிவார்.

486. க்ருதலக்ஷணாய நமஹ (Krutha Lakshanaaya namaha)

வானமாமலை மடத்தின் முதல் ஜீயரான பொன்னடிக்கால் ஜீயரைத் தரிசிக்க, அவரது சிஷ்யையான சின்னியம்மாள் என்ற பெண் தரிசிக்கச் சென்றார். ஜீயரின் திருவடிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தார் சின்னியம்மாள். வந்து நமஸ்கரித்த சிஷ்யையைப் பார்த்து பொன்னடிக்கால் ஜீயர், “உன் ஊர் என்ன?” என்று கேட்டாராம். சின்னியம்மாள், “நம்மாழ்வாரின் அவதாரத் திருத்தலமான திருக்குருகூர் தான் அடியேனுக்குப் பிறந்த ஊர்!” என்று சொன்னாராம். “நீ எந்தக் குலம்?” என்று ஜீயர் கேட்க, “அச்சுத குலம்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள்.

(இறையடியார்களுக்குள் என்றுமே ஏற்றத்தாழ்வு கிடையாது. அச்சுதனாகிய திருமாலைப் பற்றிய அனைவரும் அச்சுத குலம் என்ற ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் தானே?) “உன் கோத்திரம்?” என்ன என்று ஜீயர் கேட்க, “பராங்குச கோத்திரம்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள். (வசிஷ்டர், விஸ்வாமித்ரர், பரத்வாஜர் போன்ற பல முனிவர்களின் பெயர்களில் கோத்திரங்கள் உண்டு. ஆனால், அவர்களை விட ஏற்றம் பெற்ற பராங்குசரான நம்மாழ்வாரை இட்டு, அவரது கோத்திரம் என்று இப்பெண் பதில் சொல்லியிருக்கிறார்.)

“நீ எந்த வேதத்தைப் பின்பற்றுகிறாய்?” என்று கேட்டார். ரிக்வேதமோ, யஜுர் வேதமோ, ஸாமவேதமோ, அதர்வண வேதமோ எதையுமே சொல்லாமல், “திராவிட வேதம்!” என்றார் சின்னியம்மாள். தமிழ்வேதமாகிய ஆழ்வார்களின் பாசுரங்களின் நெறியில், தான் நிற்பவள் என்று உணர்த்துகிறார். “உன் உறவினர்கள் யார்?” என்று ஜீயர் கேட்க, “ஆத்ம பந்துக்கள்!” என்று சொன்னார் சின்னியம்மாள். (உடல்ரீதியான உறவுகளுள் பக்திக்கு விரோதமாக இருப்போர் உண்மையான உறவினர்கள் அல்லர்.

ஆத்மா பரமாத்மாவை அடைய உதவும் சிறந்த பக்தர்களே உண்மையான உறவினர்கள் ஆவர் என்பது தாத்பரியம்)“உன் பெற்றோர் யாவர்?” என்று கேட்டார் ஜீயர். தனது ஊரான வானமாமலையில் கோவில் கொண்டுள்ள பெருமாள் - தாயாரின் திருப்பெயர்களையே தன் பெற்றோர் பெயராகக் குறிப்பிட்டு, “தெய்வநாயகனும் - ஸ்ரீவரமங்கைத் தாயாரும்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள்.

“உன் தொழில் என்ன?” என்று ஜீயர் கேட்க, “பாகவத கைங்கர்யம் - அடியார்களுக்குத் தொண்டு செய்வது!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள். “அதற்கு என்ன பயன்?” என்று ஜீயர் கேட்டார். “அதுவே பிரயோஜனம், அடியார்களுக்குக் கைங்கரியம் செய்யும் பேற்றுக்கு மேல் வேறென்ன கூலி வேண்டும்?” என்று பதில் அளித்தார் சின்னியம்மாள்.

“என்ன பிரார்த்தனையோடு என்னிடம் வந்திருக்கிறாய்?” என்று ஜீயர் கேட்டார். “உங்களுக்கும் இறை அடியார்களுக்கும் இடைவிடாது தொண்டு செய்யும் பேற்றை அடியேனுக்கு அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் சின்னியம்மாள்.இந்த பதில்களைக் கேட்டு மகிழ்ந்த ஜீயர் சுவாமிகள், “உன்னைப்பற்றி அனைத்தும் தெரிந்திருந்த போதும், நான் உன்னிடம் இவ்வளவு கேள்விகள் ஏன் கேட்டேன் தெரியுமா? ஒரு பக்தனுக்குரிய இலக்கணங்கள் என்ன என்பதை உலகம், உன்மூலம் அறியட்டும் என்பதைக் கருதியே நான் கேட்டேன். நீ சொன்னது போல், தன் ஊருக்கு அருகிலுள்ள ஆழ்வாரின் அவதாரத் தலத்தையே தன் பிறந்த ஊராக ஒவ்வொரு பக்தனும் சொல்லிக்கொள்ளவேண்டும்.

அச்சுத குலம் என்றுதான் தன் குலத்தைக் குறிப்பிட வேண்டும். ஆழ்வாரை இட்டுப் பராங்குச கோத்திரம் என்றும், ஆழ்வார் பாசுரங்களை இட்டு திராவிட வேதம் என்றும் தனது உட்பிரிவுகளைக் குறிப்பிட வேண்டும். இறைவனையும் இறைவியையுமே பெற்றோராகவும், இறை அடியார்களையே உறவினர்களாகவும் கொள்ளவேண்டும். இறைவனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு செய்வதையே வாழ்வின் பயனாகக் கருதவேண்டும். இந்த இலக்கணங்கள், நீ தந்த எளிய பதில்கள் வாயிலாக உலகத்தோரின் மனங்களில் பதியட்டும்!” என்று ஆசீர்வாதம் செய்து அருளினார்.

இப்படித் தனது அடியார்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இலக் கணங்களைத் திருமாலே ஆசார்யர்கள் மூலம் வகுத்துக் கொடுத்திருப்பதால், திருமால் ‘க்ருதலக்ஷண:’ என்று அழைக்கப்படுகிறார். க்ருத என்றால் வகுத்தவர். லக்ஷண என்றால் இலக்கணம். ‘க்ருதலக்ஷண:’ என்றால் அடியார்களுக்கான இலக்கணங்களை வகுத்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 486-வது திருநாமம். “க்ருதலக்ஷணாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு, அடியார்களுக்கு உரித்தான அங்க அடையாளங்கள் அனைத்தும் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

487. கபஸ்தி நேமயே நமஹ (Gabhasthi Nemayey namaha)

சக்கரவர்த்தி என்ற வைணவப் பெரியவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். ஒருமுறை அவர் காஞ்சியில் உள்ள வேகவதி நதியில் நீராடச் சென்றார். அங்கே நதியில், மிதந்து வந்த ஒரு சவம் கரையில் ஒதுங்கியது. சக்கரவர்த்தியின் மீது அந்தச் சவம் மோதியது. அச்சவத்தின் தோள்களில் சங்கு சக்கரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதனால், இறந்தவர் ஒரு வைணவர் என்று புரிந்து கொண்டார் சக்கரவர்த்தி. பஞ்ச சம்ஸ்காரம் என்பது வைணவப் புனிதச் சடங்கு. இதை ஒரு குருவிடம் செய்துகொள்ள வேண்டும். இது பின்வரும் ஐந்து பாகங்களைக் கொண்டது.

1. திருமாலின் சங்கையும் சக்கரத்தையும், சீடனின் இரு தோள்களிலும் குரு பொறிப்பது.
2. திருமண், ஸ்ரீசூர்ணம் இவற்றைக் குரு, சீடனுக்குப் பன்னிரண்டு இடங்களில் அணிவிப்பது.
3. இறைவனுக்கும் இறை அடியார்க்கும் தாசன் என்று குறிப்பிடும்படியான பெயரைக் குரு, சீடனுக்குச் சூட்டுவது.
4. மூன்று ரகசிய மந்திரங்களைச் சீடனுக்கு உபதேசம் செய்வது.
5. பெருமாளுக்குப் பூஜை செய்யும் முறையை உபதேசிப்பது.

இவற்றைப் பெற்றதன் அடையாளமாக அச்சவத்தின் தோள்களில் சங்கு சக்கர முத்திரைகள் தெரிந்தன. சிறிது காலம் பொறுத்திருந்து பார்த்தார் சக்கரவர்த்தி. இறந்தவரைச் சொந்தம் கொண்டாடி ஒருவரும் வரவில்லை. அனாதைப் பிணத்தை எத்தனை காலம்தான் அப்படியே வைத்திருக்க முடியும்? ஒரு வைணவரின் பிணத்தை விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை சக்கரவர்த்திக்கு.

அதனால், அந்த வைணவப் பிணத்துக்குச் சக்கரவர்த்தியே ஈமச்சடங்குகளைச் செய்தார். யார் என்று தெரியாமல் ஈமச் சடங்குளைச் செய்ததால், அவரை ஊர் மக்கள் விலக்கி வைத்தனர். “நீ பொல்லான்!” பொல்லான் என்று சக்கரவர்த்தியை ஊரார் இகழத் தொடங்கினர். “அந்தணர் குலத்தில் பிறந்த நீங்கள், தோளில் பூணூல் இல்லாத ஒருவனுக்கு எப்படி ஈமக்கிரியை செய்யலாம்?” என்றெல்லாம் பலவாறு கேள்வி கேட்டார்கள். “எப்போது தோள்களில் சங்கு சக்கர முத்திரைகள் இருக்கின்றனவோ, அப்போதே இவர் திருமால் அடியார் என்பது உறுதியாகிவிடுகிறது.

அதன்பின் பூணூல் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? அடியார்களுக்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது!” என்று பதில் சொன்னார் சக்கரவர்த்தி. ஆனால், ஊரார் அதை ஏற்க மறுத்தார்கள். “உங்கள் வீட்டில் சிராத்தம் செய்தால் நாங்கள் உண்ண வரமாட்டோம்!” என்றும் கூறினார்கள்.

அனாதைப் பிணத்துக்கு இரங்கி, தான் செய்த நல்ல காரியத்துக்காகத் தன்னை ஊரார் ஒதுக்கிவிட்டனரே என்று சற்றே வருந்தினார் சக்கரவர்த்தி. அப்போது, காஞ்சி வரதராஜப்பெருமாள் தனக்கு விசிறி வீசித் தொண்டு செய்யும் திருக்கச்சி நம்பிகளோடு உரையாடிக் கொண்டிருக்க, சக்கரவர்த்திக்கு நேர்ந்த இந்த விஷயத்தைப் பற்றித் திருக்கச்சி நம்பிகள் வரதராஜப் பெருமாளிடம் விண்ணப்பித்தார்.

அதைக் கேட்ட வரதராஜப் பெருமாள், ``அவன் (சக்கரவர்த்தி) ஊருக்குப் பொல்லான். ஆனால், எனக்கு நல்லான்!” என்று அருளினார். பெருமாளுடைய அருள் வார்த்தையைக் கேட்டு வியந்தார் திருக்கச்சி நம்பிகள். ஊராருக்கும் இதைத் தெரிவித்தார். அதன்பின்தான், சக்கரவர்த்தியின் பெருமையை ஊரார் அறிந்து கொண்டார்கள்.பகவானே தன் வாயால் நல்லான் என்று அழைத்ததன் நினைவாக, நல்லான் சக்கரவர்த்தி என்றே அவருக்குத் திருநாமம் ஏற்பட்டது. ராமானுஜர் தமக்குப் பின் 74 சிம்மாசனாதிபதிகளை நியமிக்கும்போது, இந்த நல்லான் சக்கரவர்த்தியையும் அந்த 74 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவராக நியமித்து அருளினார். மரியாதைக்குரிய திரு.ராஜாஜி அவர்களும்கூட இந்த நல்லான் சக்கரவர்த்தி வம்சத்தில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகச் சக்கரவர்த்தி, அந்த அடியவர்க்கு ஈமக்கிரியை செய்யக் காரணமான அவர் தோள்களில் உள்ள சங்கு சக்கரப் பொறியைப் போல், தனது அடியார்களுக்குக் காப்பாக அவர்களின் தோள்களில் தனது சக்கரப் பொறியைத் திருமால் தந்து காப்பதால் ‘கபஸ்திநேமி:’ என்று அழைக்கப்படுகிறார். ‘கபஸ்திநேமி:’ என்றால் ஒளிவீசும் சக்கரத்தை உடையவர் என்று பொருள். “தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின் கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி ஆட்சி செய்கின்றோம்” என்ற பெரியாழ்வாரின் பாசுரத்துக்கேற்ப அந்த ஒளி வீசும் சக்கரத்தையே அடியார்களின் தோள்களிலும் காப்பாகத் தந்தருள்கிறார் திருமால். “கபஸ்திநேமயே நமஹ” என்று இந்த 487-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் தனது ஒளிவீசும் சக்கரத்தால் திருமால் காத்தருள்வார்.

488. ஸத்வஸ்தாய நமஹ (Sathvasthaaya namaha)

ஆழ்வார்களுள் ஒருவரான திருமழிசைப் பிரான், கும்பகோணத்தில் கோவில் கொண்டிருக்கும் சாரங்கபாணிப் பெருமாளைத் தரிசிக்கும், ஆவலுடன் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டுக் கும்பகோணத்தை நோக்கிப் பயணித்தார். வழியில் உள்ள பெரும்புலியூர் என்ற கிராமத்தில், ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்தார் திருமழிசைப்பிரான். அத்திண்ணையிலே வேதம் ஓதிக்கொண்டிருந்த அந்தணர்கள் திருமழிசைப் பிரானைக் கண்டு, `தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த இவர் கேட்க நாம் வேதம் ஓதுதல் தகாது’ என்று எண்ணி, வேதம் சொல்வதை நிறுத்திவிட்டார்கள்.

திருமழிசைப் பிரான் அவர்களின் கருத்தை அறிந்து திண்ணையை விட்டு இறங்கினார். மறையவர்கள் உடனே வேதம் ஓதத் தொடங்கினார்கள். ஆனால், விட்ட வாக்கியம் தோன்றாமையால் தவறித் தடுமாறினார்கள். ஆழ்வாரும் அதைக் கண்டு, கருநெல்லை நகத்தால் பிளந்து, “க்ருஷ்ணானாம் வ்ரீஹீணாம் நக நிர்ப்பின்னம்” என்ற வேதத் தொடரைத்தான் நீங்கள் சொல்லி வந்தீர்கள் என்று குறிப்பால் காட்டியருளினார்.

அவர்கள் தெளிந்து வந்து ஆழ்வாரை வணங்கி, பிழையைப் பொறுத்தருள்க என வேண்ட, திருமழிசைப் பிரானும், அவர்களுக்குப் பல இன்மொழிகளைக் கூறி விடை பெற்றுக்கொண்டு சென்றார்.பின்னர், அந்தப் பெரும்புலியூர் திருக்கோவிலின் வெளிப்புறத்தைத் திருமழிசைப் பிரான் பிரதட்சிணம் செய்ய, உள்ளே எழுந்தருளியிருக்கும் பெருமாள் இவ்வாழ்வார் எழுந்தருளுகிற திருவீதிகள் தோறும் தம் திருமுகத்தைத் திருப்பிக்கொண்டே வந்தார். இந்தச் செயலை அக்கோயில் அர்ச்சகராகிய நம்பி கண்டு, சில பக்தர்களுக்கும் காட்டினார். அந்தக் கிராமத்தில், பெரும்புலியூர் அடிகள் என்ற பெரியவர் யாகம் செய்துவந்தார்.

அந்தப் பெரும்புலியூர் அடிகளின் யாகசாலைக்குச் சென்று ஊர்மக்கள் இவரது பெருமையைக் கூறினார்கள். பெரும்புலியூர் அடிகள் உடனே அங்கு வந்து, திருமழிசைப் பிரானை வணங்கி யாகசாலைக்கு எழுந்தருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்தார். திருமழிசைப் பிரானும் சம்மதிக்கவே, அவரை யாகசாலைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார் பெரும்புலியூர் அடிகள். பின்னர் யாகத்தில் செய்யும் `அக்கிர பூஜை’ என்ற முதல் மரியாதையை ஆழ்வாருக்குச் செய்தார் பெரும்புலியூர் அடிகள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வேள்விச் சடங்கர்கள், திருமழிசைப் பிரானை இழிவுபடுத்திப் பேசினார்கள். ஆழ்வாரும் வெறும் சடங்குகளை மட்டுமே பற்றி நிற்கும் அவர்களுக்கு நல்லறிவு உண்டாகும்படிச் செய்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன் எம்பெருமானை எண்ணி,

“அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவ தென்கொலோ
இக்குறும்மை நீக்கியென்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே”


 - என்று பாடியருளினார்.

என் இதயத்தில் நீ இருப்பதை இவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று திருமாலிடம் கோரினார் ஆழ்வார்.திருமாலும், யாவரும் காணும்படி ஆழ்வாரின் உள்ளத்தில், தான் பள்ளி கொண்டிருக்கும் காட்சியைக் காண்பிக்க, ஆழ்வாரை இகழ்ந்து பேசிய சடங்கர்கள் எல்லோரும் இக்காட்சியினால் உள்ளம் மாறி ஆழ்வாரது திருவடிகளில் விழுந்து வணங்கி, “ஆழ்வாரே அக்கிர பூசைக்கு உரியவர்!” எனப் பன்முறை போற்றி, தாம் செய்த செயல்களை மன்னித்தருளுமாறு வேண்டினர்.

திருமழிசைப் பிரானும் அவர்களுக்குப் பல நன்மொழிகளைக் கூறி, பெரும்புலியூர் அடிகளிடத்தும் விடை பெற்றுக்கொண்டு திருக்குடந்தைக்கு எழுந்தருளினார். ஆக, திருமழிசைப் பிரான் போன்ற சிறந்த அடியார்களின் இதயத்தில் எப்போதும் வசிப்பதால் திருமால், ‘ஸத்வஸ்தஹ’ என்று அழைக்கப்படுகிறார். ஸத்வ என்பது இதயத்தைக் குறிக்கிறது. ஸ்த என்றால் நிலைநிற்பவர். ‘ஸத்வஸ்த:’ என்றால் அடியார்களின் உள்ளத்தில் வசிப்பவர். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 488-வது திருநாமம். “ஸத்வஸ்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களில் திருமால் எப்போதும் குடியிருப்பார்.

489. ஸிம்ஹாய நமஹ (Simhaaya namaha)

அம்பரீஷன் என்ற மன்னன் இட்சுவாகு குலத்திலே தோன்றியவன், ராமனுக்குக் குலமுன்னவர். அம்பரீஷனின் பக்திக்கு உகந்த திருமால், தனது சுதர்சன சக்கரத்தை அம்பரீஷனிடம் கொடுத்து, உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தாலும் இந்தச் சக்கரம் உன்னைக் காக்கும் என்று கூறியிருந்தார். இத்தகைய சிறந்த பக்தரான அம்பரீஷன், மதுவனம் என்னும் இடத்தில் ஒரு வருடம் தங்கி இருந்து நிறைய தானங்கள் செய்து ஏகாதசி விரதமும், அனுஷ்டித்து வந்தான்.

இப்படிப் பதினொரு மாதங்கள் ஏகாதசி விரதம் நிறைவு செய்த நிலையில், பன்னிரண்டாவது மாதம் வந்தது. ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் நீராடி, திருமாலுக்குப் பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்யும் நேரம். அப்போது, துர்வாச முனிவர் தம் சீடர்களுடன் அங்கே வந்தார். உரிய முறையில் அவரை வரவேற்றான் அம்பரீஷன். “இத்தகைய மகான் இங்கே வந்தது அடியேனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே நீங்கள் தங்கி இருந்து உணவு அருந்தி எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.

துர்வாசரோ, “அம்பரீஷா! நான் எனது அனுஷ்டானங்களை இன்னும் நிறைவு செய்ய வேண்டிய உள்ளது. நான் நிறைவுசெய்துவிட்டு வந்து உண்கிறேன்!” என்றார். “சரி! அதுவரை காத்திருக்கிறேன்!” என்று மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டான் அம்பரீஷன். ஆனால், சிஷ்யர்களோடு நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றச் சென்ற துர்வாசர், வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. துவாதசி திதி நிறைவடைவதற்குள், பாரணை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டிய நிலையில், காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பதால் அம்பரீஷன் கலங்கினான்.
ஒருநிலையில், தன் குருவிடம் அம்பரீஷன், “சுவாமி! துவாதசி திதி முடியும் தறுவாய் வந்துவிட்டது. வந்திருக்கும் விருந்தினரான துர்வாசருக்கு உணவளிக்காமல் உண்டாலும் தவறாகிவிடும். அதே சமயம், துவாதசி திதி நிறைவடைவதற்குள் உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்யாவிட்டாலும் தவறாகிவிடும். என்ன செய்வது?” என்று கேட்டான்.

அம்பரீஷனின் குரு, “நீ பெருமாளின் ஸ்ரீபாத தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்து விடு. தண்ணீரை உட்கொண்டதால், விரதம் நிறைவானதாகவும் கொள்ளலாம். அதே சமயம், வேறு உணவு உட்கொள்ளாததால், விருந்தினருக்கு முன் `உண்டாய்’ என்ற தோஷமும் வராது!” என்று வழிகாட்டினார். அப்படியே செய்தான் அம்பரீஷன். இறைவனின் திருவடி தீர்த்தத்தை அம்பரீஷன் உட்கொண்ட அடுத்த நொடி, அங்கே துர்வாசர் சீடர்களோடு வந்துவிட்டார்.

“எனக்கு உணவளிக்காமல் எப்படி நீ விரதத்தை நிறைவு செய்தாய்?” என்று கோபத்துடன் முழங்கினார். அம்பரீஷனை அழிப்பதற்காக ஒரு பிசாசை அவன்மீது ஏவினார் துர்வாசர். பகவான்மீதுள்ள நம்பிக்கையால், கலங்காமல் நின்றான் அம்பரீஷன். அவனுக்குக் காவலாகத் திருமால் தந்திருந்த சுதர்சனச் சக்கரம், துர்வாசர் ஏவிய பிசாசை விழுங்கியது. அந்தச் சக்கரத்தாழ்வார் அதன்பின் துர்வாசரைத் துரத்தத் தொடங்கினார். சக்கரத்தாழ்வார் துரத்த, பிரம்மா, ருத்ரன் என்று எல்லாத் தேவர்களின் உதவியையும் நாடினார் துர்வாசர். யாரும் அடைக்கலம் தரவில்லை.

திருமாலின் திருவடிகளில் விழுந்தார் துர்வாசர். “என் பக்தனிடம் மன்னிப்பு கேட்டாலே ஒழிய என் சக்கரம் உங்களை மன்னிக்காது!” என்று சொல்லிவிட்டார் திருமால். அதன்பின் நிறைவாக, அம்பரீஷனின் பாதங்களில் வந்து விழுந்தார் துர்வாசர். “ஆஹா! சுவாமி! நீங்கள் என் பாதங்களில் விழுவதா?” என்று பதறிய அம்பரீஷன், சக்கரத்தாழ்வாரைத் துதித்தான். அதனால், உகந்து சக்கரத்தாழ்வார் சாந்தம் அடைந்தார். இனி அடியார்களிடம் நாம் தெரிந்தோ தெரியாமலோ மோதவே கூடாது என்று சொல்லிக் கொண்டே, அம்பரீஷனிடம் இருந்து விடைபெற்றாராம் துர்வாசர்.

இப்படித் தன் அடியார்களுக்குத் தீங்கு இழைக்க நினைப்போரைத் தண்டிப்பதால், திருமால் ‘ஸிம்ஹ:’ தண்டிப்பவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 489-வது திருநாமம்.“ஸிம்ஹாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்க்கையில் எந்தத் தடைகளும் வராதிருக்கும்படிதிருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Anantan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!