×

இந்த வார விசேஷங்கள்

22.10.2022 - சனி - கோவத்ஸ துவாதசி

`கோ’ என்றால் பசு. `வத்ஸ’ என்றால் வாத்சல்யம். துவாதசி என்றால், ஏகாதசிக்கு அடுத்த நாள். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் துவாதசி பாரணை செய்ய வேண்டும். அப்போதுதான் ஏகாதசி பலனை அவர்கள் அடைய முடியும். துவாதசி பாரணை மிக முக்கியமாகச் செய்ய வேண்டியது. அப்போது `கோ’ பூஜை செய்ய வேண்டும். இந்த கோபூஜை ஐப்பசி தேய்பிறை துவாதசி அன்று செய்வது மிகவும் விசேஷம். கோபூஜை, சகல சௌபாக்கியங்களையும் தரும். அன்று, கன்றுடன் கூடிய பசுவை வணங்க வேண்டும்.

பசுவை அமுல்யம் என்பார்கள். அதாவது, விலை மதிக்க முடியாதது என்று பொருள். யாகத்தின் மூலமாக உலகம் மற்றும் உயிர்களைப் படைத்தான் பிரம்மன். அந்த யாகத்தில் நெய் (ஆஹுதி) விட வேண்டும் என்றால், பால் வேண்டும். அந்தப் பாலைப் பொழிந்து தருவது பசு என்பதால் யாகத்திற்கு மிக முக்கியமானது பசு. எனவே, யாகத்தை செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன் ஒரு பசுவை வணங்கினால் கிடைக்கும்.

அன்றைய தினம், பசுவைக் குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் இட்டு, பூ மாலையை அணிவித்து, பூஜை செய்து, அதற்கு தீவனம் அகத்திக்கீரை முதலியவற்றைத் தரவேண்டும். ரமணமகரிஷி, பசு பூஜையின் உயர்வை மிக அற்புதமாகச் சொல்வார். பசுவை வலம் வந்து வணங்கி, அதனுடைய கழுத்தை ஆதரவாகத் தடவிக் கொடுக்க வேண்டும்.

அதற்கு `கோ கண்டூயனம்’ என்று பெயர். ஆண்டாள் திருப்பாவையில், ‘‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்து” என்று பாடுவதால், பசுக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அதை வணங்குவது முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்குவதற்குச் சமம்.

23.10.2022 - ஞாயிறு  எமதீபம்

தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி திதி. ஐப்பசி தேய்பிறை திரயோதசி திதியில், எமதீபம் ஏற்றுவதன் மூலமாக வாழ்வில் தடைகள் நீங்கி வெற்றி வசப்படும். குடும்பம் விருத்தி அடையும். தொழில் முன்னேற்றம் அடையும். திருமணத் தடைகள் போன்ற சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும். வீட்டின் மாடி போன்ற உயரமான பகுதிகளில், தெற்கு திசையை நோக்கி அன்று மட்டும், எம தீபம் ஏற்றும் மரபு உண்டு. பரணி, மகம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பரிகாரமாக எமதீபம் ஏற்றுவது சிறந்தது.

காரணம், பரணி நட்சத்திரம், எமனுடைய ஜென்ம நட்சத்திரம். மகம் நட்சத்திரம் என்பது பிதுர்களுக்கு அதிதேவதையினுடைய நட்சத்திரம். சில புத்தகங்களில், சதய நட்சத்திரம் என்று போட்டிருப்பதால் பரணி, சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் எமதீபம் ஏற்றலாம். மற்றவர்களும் ஏற்றலாம். பரிகாரமாக, எமதீபம் ஏற்றுவது சாலச்சிறந்தது. காரணம் ஆயுள்காரகன் சனி அல்லவா. நவக்கிரக சந்நதியிலும் காலபைரவர் சந்நதியிலும் தீபம் ஏற்றலாம்.

23.10.2022 - ஞாயிறு  தன திரயோதசி

பொதுவாக வடநாட்டில் தீபாவளி தினத்துக்கு முன்-பின் என ஐந்து தினங்கள் தீபாவளி கொண்டாடுவார்கள். தேய்பிறை திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை, பிரதமை, துவிதியை என ஐந்து நாட்கள் வடநாட்டில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவார்கள். இதில் முதல் நாள் திரயோதசி. இந்த திரயோதசியில் புதுக்கணக்கு போடுபவர்கள் உண்டு. புதிய முதலீடுகளைச் செய்பவர்கள் உண்டு. அன்று பூஜை அறையில், வெள்ளி, தங்க நாணயங்களை வைத்துப் படைப்பார்கள். பணப்பெட்டியை வைத்துப் படைப்பார்கள். இதன் மூலமாக செல்வம் பெருகும். தரித்திரம் விலகும்.

23.10.2022 - ஞாயிறு  தன்வந்திரி ஜெயந்தி

மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய தன்வந்திரி பகவானின் ஜெயந்தி தினம், இந்த திரயோதசி நாளைச் சொல்லுகின்றார்கள். பாற்கடலில் தோன்றியவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி பகவான். நோய்கள் வராமல் இருக்கவும், ஆரோக்கியம் கிடைக்கவும், ஆயுள் பலம் கிடைக்கவும், தன்வந்திரி பகவானை வணங்கவேண்டும். அவர்தான் மருந்து கடவுள்.

எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறி வாருமில்லை
மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா! மறுபிறவி  தவிரத்
திருத்தி உன் கோயிற் கடைப்புகப்பெய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்!


 - என்பது பெரியாழ்வார் பாசுரம்.

தண்ணீரிலிருந்து தோன்றியதால் `அப்ஜ்’ என்று பெயர். தன்வந்திரி பகவான் தேவர்களின் வாழ்வுக்காகவும் மற்றும் மனித குலத்தின் ஆரோக்கியத்திற்காகவும் ஆயுர்வேத சாஸ்திர உபதேசத்தை மகரிஷி விஷ்வாமித்திரரின் மகன் சுஸ்ருதனுக்கு அளித்தார். தன்வந்திரி பகவான் இயற்றிய, ``தன்வந்திரி சம்ஹிதா’’ ஆயுர்வேதத்தின் ஆதார நூலாகும்.  இந்த நாளை தேசிய ஆயுர்வேத தினமாகவும் கொண்டாடுகின்றனர். திரயோதசி அன்று தன்வந்திரி மந்திரத்தைச் சொல்லி, தன்வந்திரி பகவானைப் பூஜிக்கலாம்.

தன்வந்தரி மந்திரம்
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய நாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நமஹ


- என்ற மந்திரத்தை 21 முறை ஜெபம் செய்யவும்.

25.10.2022 - செவ்வாய்  சூரிய கிரகணம்

இன்றைய தினம் சூரியகிரகண நாள். 2022-ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம். செவ்வாய்க்கிழமை பகல் 2.28 மணி முதல் மாலை 6.32 மணி வரை சுவாதி நட்சத்திரத்தில் நிகழ்கிறது. துலாராசியில், இந்த கிரகணம் நிகழ்கிறது. துலாராசியில் கேது பகவான் இருப்பதால், இதனை கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் என்று சொல்வார்கள்.

ஆனால், சுவாதி ராகுவின் நட்சத்திரம். இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கிரகணம் நீடிப்பதால், சூரிய அஸ்தமன நேரம் வரை மட்டுமே கிரகணத்தைப் பார்க்க முடியும்.

கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்கள்: சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், திருவாதிரை. கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அன்றைய தினம் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.

அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் சூரிய தரிசனத்திற்குப் பின் உணவருந்த வேண்டும். கிரகண காலத்தில் நீராடி,   காயத்ரி மந்திரத்தையோ, உங்களுக்கு தெரிந்த ஸ்தோத்ரங்களையோ அல்லது பகவானின் நாமத்தையோ ஜெபம் செய்யலாம்.

கிரகணம் முடிந்த பின், மீண்டும் குளித்து விட்டு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டு, வீட்டில் உள்ள படங்களுக்கு நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி, கிரகணம் முடிந்த பின் சமைத்த உணவுகளை உட்கொள்ளவேண்டும். (சிலர் அடுத்த நாள்தான் உணவு உட்கொள்வர்)

அந்தந்த சம்பிரதாயப்படி காயத்ரி ஜெபம், தர்ப்பணம் ஆகிய வற்றைச் செய்ய வேண்டும். இந்த ஆண்டு தீபாவளி அன்று லட்சுமி பூஜைக்கு அடுத்த நாள், சூரிய கிரகணம் ஏற்படுவதால், நள்ளிரவுக்குப் பிறகு சூதகம் தொடங்கும். சூரிய கிரகணத்தால் லட்சுமி பூஜையில் எந்த பாதிப்பும் இருக்காது.

தொகுப்பு: சங்கர்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி