×

உருவ கேலியால் ஆவேசம் அடைந்த பிபாஷா பாசு

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தமிழில் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான ‘சச்சின்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது அவரது உடல் எடை அதிகரித்தது குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பிபாஷா பாசுவுக்கு இந்தியில் புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், குடும்ப வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பாலிவுட் நடிகர் கரண் சிங் குரோவரை காதல் திருமணம் செய்த அவர், கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். ஆனால், குழந்தை பிறந்த பிறகு பிபாஷா பாசுவின் உடல் எடை கூடிவிட்டது.

இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பிட்ட காலம் வரை இதை கண்டுகொள்ளாமல் இருந்த பிபாஷா பாசு, தற்போது அந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார். இதுகுறித்து வெளியிட்ட பதிவில், ‘உங்களுடைய தெளிவான வார்த்தைகளுக்கு நன்றி. மனித இனம் என்றென்றும் இவ்வளவு ஆழமற்றதாகவும், தாழ்ந்ததாகவும் இருக்கக்கூடாது என்று நம்புகிறேன். வாழ்க்கையை பொறுத்தவரையில், பெண்கள் அனைவரும் பலவிதமான கேரக்டர்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

நான் அன்பான துணை மற்றும் குடும்பத்தினருடன் கூடிய தன்னம்பிக்கை கொண்ட ஒரு பெண். மீம்ஸ்களும், ட்ரோல்களும் என்னை ஒருபோதும் வரையறுக்கவில்லை. ஒருவேளை எனது இடத்தில் இன்னொரு பெண் இருந்திருந்தால், இதுபோன்ற கொடூரமான விமர்சனங்களால் ஆழமாக பாதிக்கப்பட்டு காயம் அடைந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். மாறாக, பெண்களை புரிந்துகொண்டு பாராட்டினால், அவர்கள் மேலும் உயர்வார்கள். பொதுவாகவே நாங்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாத பெண்கள் என்று சொல்லலாம். எங்களை கடுமையாக விமர்சிக்கும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

Tags : Bipasha Basu ,Bollywood ,John Mahendran ,Vijay ,Genelia ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை