×

வாமன ஜெயந்தியும் ஓணம் பண்டிகையும்

7.9.2022 - வாமன ஜெயந்தி,
8.9.2022 - ஓணம் பண்டிகை


இன்று திருமாலுக்குரிய புதன்கிழமை (7.9.2022). அவருடைய அம்சமாக சூரியனுக்குரிய உத்திராட நட்சத்திரம். வாமன அவதாரம் நிகழ்ந்த நாள். பொதுவாக எந்த அவதாரத்திலும் அனுக்கிரகம், நிக்கிரகம் என்று இரண்டு நிலைகள் உண்டு. வராக அவதாரத்தில் இரண்யாட்சனை அழித்து பூமாதேவியைக் காப்பாற்றினார்.
நரசிம்ம அவதாரத்தில் இரணியனை அழித்து பிரகலாதனைக் காப்பாற்றினார். இராமாவதாரத்தில், ராவணனை அழித்து தேவர்களையும், விபீஷணனையும்
காப்பாற்றினார்.

ஆனால், வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தியை அழிக்கவில்லை. அவனுடைய அகந்தையை மட்டும் அழித்து அருள்புரிந்தார். தன்னுடைய பக்தனாக மகாபலி சக்கரவர்த்தியை மாற்றி, பாதாள உலகத்தை ஆளும்படி முடிசூட்டினார். எனவே முழுமையான அனுக்கிரகம் தரும் அவதாரமாக வாமனாவதாரம் போற்றப்படுகிறது.

அதனால், ஆண்டாள் வாமனனை உத்தமன் என்னும் பெயரைச் சூட்டி அழைக்கின்றாள். வேறு எந்த அவதாரத்திற்கும் இந்தப் பெயரை ஆழ்வார்கள் தரவில்லை. சகல விஷ்ணு ஆலயங்களிலும், குறிப்பாக உலகளந்த பெருமாள் சந்நதி இருக்கக்கூடிய ஆலயங்களில், வாமன ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படும். வாமன அவதாரத்தை வணங்கினால், நினைத்த காரியம் நிறைவேறும். இழந்த பொருள் எதுவாயினும் திரும்பக் கிடைக்கும்.

தசாவதாரங்களுள் வாமனவதாரம் குருவுக்கு உகந்த அவதாரம் என்று சொல்கிறார்கள். குருவே, `தான்’ என்னும் அகந்தையை நீக்கி நல்லருள் பெற வழிகாட்டுபவர். தன் குருவான சுக்ராச்சாரியாரின் சொல்லைக் கேட்காததாலேயே மகாபலியும் வீழ்ந்தான். எனவேதான், வாமன அவதாரத்தை நவகிரகங்களுள் குருவின் மகிமை நிறைந்த அவதாரம் என்று சொல்கிறார்கள். எனவே, மகாவிஷ்ணுவை வாமன ரூபமாகவும் உலகளந்த பெருமாளாகவும் வணங்க, குரு பகவானின் பரிபூரண அருள்
கிடைக்கும் என்கின்றனர்.

வாமன ஜெயந்தி நாளில்தான் குரு ஜெயந்தியும் வருகிறது. அன்று வாமன காயத்ரி மந்திரம் சொல்வது சிறப்பு.

ஓம் ஸ்ரீவிக்ரமாய வித்மஹே
விஸ்வரூபாயை தீமஹி
தன்னோ வாமன ப்ரசோதயாத்


என்ற வாமன காயத்திரி மந்திரத்தைச் சொல்லிப் பிரார்த்தித்தால் சகல நலன்களும் கிடைக்கும்.

கேரள தேசத்தில், மக்கள் அனைவரும் கொண்டாடும் பொதுப் பண்டிகையாக வாமன ஜெயந்தி, ஓணம் பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அழகான கோலம் போட்டு, பல்வேறு பதார்த்தங்களைப் படைத்து மகிழ்ச்சியாக பிரமோற்சவம் போல தொடர்ச்சியாக சில நாட்கள் இப்பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். ஓணம் என்பது திருவோண நட்சத்திரத்தைக் குறிக்கும். திருவோண நட்சத்திரத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுவதால் ஓணம் பண்டிகை என்று பெயர்.
 
கேரள மக்கள் இதை தங்கள் புத்தாண்டு தொடக்கமாகவும் கொண்டாடுகின்றனர். வாமனருக்கு மூன்றடி மண் தந்த மகாபலிச் சக்கரவர்த்தி, இந்த நாளில் தன்னுடைய மக்களைப் பார்ப்பதற்காக வருவதாகவும், அவரை வரவேற்பதாகவும், இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் ‘‘அத்தப்பூ” என்ற பூக்கோலம் ஆகும்.  ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். ஓணத்திருநாளை மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர். பூக் கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.

அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரளிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர். இப்படி குதூகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம் பண்டிகை.

‘‘அறுவடைத் திருநாள்” என்று ஓணம் பண்டிகையை அழைப்பர். மலையாள ஆண்டின் ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது.

இதை பெரியாழ்வார் தம்முடைய பாசுரத்தில் ``அஸ்தத்தின் பத்தாம் நாள்’’ என்று பாடுகின்றார். அஸ்த நட்சத்திரத்தில் ஆரம்பித்தால், பத்தாவது நட்சத்திரம் திருவோணம் வரும். எனவே இது பத்து நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர்.

ஓணம் பண்டிகையின் முதல் நாள் அஸ்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் 64 வகைகளில் விதம்விதமாக பட்சணங்கள் தயார் செய்யப்படுகிறது.  இவ்வுணவினை ``ஓண சாத்யா’’ என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும்.

அன்று, கேரளத்தின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. ஆறாம் நாள் திருக்கேட்டை (திரிக்கேட்டா), ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

தொகுப்பு: விஷ்ணு பிரியா

Tags : Vamana Jayanti and Onam festival ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்