×

ஏன் கண்ணன் மலையைத் தூக்கினான்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கிருஷ்ணாவதாரத்திலே, ஸ்ரீகிருஷ்ணன் குன்றைக் குடையாக எடுத்து, கோபியர்களைக் காத்தது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரிதர கோபாலா, கோவர்த்தன கிரிதரா என்று வடநாட்டிலும் இந்தப் பெயர் விசேஷம். ஸ்ரீமத் பாகவதத்தில், எத்தனையோ லீலைகள் கண்ணன் செய்திருந்தாலும்கூட, சில குறிப்பிட்ட லீலைகளை மட்டும் திரும்பத் திரும்பப் பேசி மகிழ்வதுண்டு. வெண்ணெயைத் திருடியது, பூதனையை வதம் செய்தது, காளிங்க நர்த்தனம், ராசலீலை செய்தது போன்ற லீலைகளை அவர்கள் திரும்பத் திரும்ப அனுபவிப்பார்கள்.அதில் எல்லா ஆழ்வார்களும், அனுபவிக்கக்கூடிய லீலை கோவர்த்தன கிரியை குடையாக எடுத்தது.

ஆண்டாள், திருப்பாவை பாசுரம் பாடுகின்ற பொழுது, அன்றியிவ்வுலகம் அளந்தாய், போற்றி! என்று, வாமன அவதாரத்தையும், சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி என்று ராம அவதாரத்தையும் சொல்லி விட்டு, கிருஷ்ண அவதாரத்தைச் சொல்லுகின்ற பொழுது, கோவர்த்தனகிரியை எடுத்த விஷயத்தைத்தான், குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்று பேசுகின்றார். பிறகுதான், மற்ற விசேஷங்களைப் பாடுகின்றார். நம்மாழ்வார், திருப்பதிப் பெருமாளைப் பாடும்போது, முதலில் மலைதான் நினைவுக்கு வருகிறது. மலைமீது நின்ற பெருமாள் அல்லவா.

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

இங்கே பகவானைக்கூட தொழுவது இருக்கட்டும். மலையைத் தொழுதாலும், நம்வினை நீங்கிவிடும் என்கிறார். ஸ்ரீமத் பாகவதத்தில் ஆயர்களிடம், மலையைத் தொழச் சொன்னது கண்ணன்தானே? இன்னொரு பாசுரத்திலே, நம்மாழ்வார் குன்றம் எடுத்த பிரான் அடியாரோடு ஒன்றிநின்ற பிரான், என்று ஒரு கருத்தைச் சொல்லுகின்றார். குன்றம் எடுத்தது மட்டுமல்ல, தன்னை நம்பிய அடியார்களோடு ஏழு நாட்கள் தானும், குளிரிலும் மழையிலும் நின்றான் கண்ணன் என்பது முக்கியம்.

“உங்களுக்கு நான் துணை இருக்கிறேன்” என்று கூடவே இருப்பதுதான் மிகப்பெரிய உதவி. யார் காப்பாற்றுகின்றானோ, அவனும் அவர்களோடு கீழே நின்றான் என்கின்ற நுட்பமான குறிப்பை, நாம் பார்க்கலாம். கிருஷ்ணாவதாரத்தில், மலைக்குக் கீழே நின்றவன், கலியுகத்தில் திருமலையில் மேலே நிற்கிறான். இப்படி ஆழ்வார்கள், இதிலே ஈடுபடுவதற்கு, என்ன காரணம்? ஏன் கண்ணன் ஏழு நாட்கள் மலையைத் தூக்கிக் காக்கும்படி நேரிட்டது? ஒரு அருமையான தத்துவம், இதில் உண்டு.

அதுவரை ஆயர்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்திரனுக்கு விழா எடுத்துக் கொண்டிருந்தார்கள். கண்ணன் அவர்களைத் தடுத்து, ‘‘ஏன் இந்திரனுக்கு விழா எடுக்க வேண்டும்? உங்களுக்கு எல்லா உதவியும் செய்வது இந்த மலைதான். இந்த மலையில் உள்ள மரங்களைத்தான் பசுக்கள் மேய்கின்றன. மழைக்கும் இந்த மலைதான் ஆதாரமாக இருக்கிறது. அதற்கு பூஜை போடுங்கள். ஏன் இந்திரனுக்கு பூஜை போடுகிறீர்கள்? என்று கேட்டான்.

இதில் ஒரு அடிப்படையான வழிபாட்டுத் தத்துவம் சொல்லப்படுகிறது. எது உங்களுக்கு எல்லா விதத்திலும் பிரத்யட்சமாக (நேரடியாக) உதவுகிறதோ, அதற்கு பூஜை செய்ய வேண்டும் என்கின்ற தத்துவத்தை காட்டுகின்றார். கண்ணனுடைய வார்த்தையை நம்பி, இந்திர பூஜையை நிறுத்திவிட்டு, மலைக்கு பூஜை செய்கின்றார்கள் ஆயர்கள். இந்திரனுக்கு, இப்படி செய்வது நியாயம்தான் என்கிற உணர்வு இல்லை.

இதை செய்யச் சொன்னது தன்னையும் காக்கின்ற பகவான்தான் என்கின்ற ஞானமுமில்லை. ஆயர்கள், பகவான் கொடுத்த ஞானத்தால் பகவானை உணர்ந்தார்கள். ஏன் மாடுகளும், கன்றுகளும் கூட உணர்ந்தன. ஆனால், இந்திரன் உணரவில்லை. காரணம் ஆணவம். பகவான் பேச்சைக் கேட்ட பாகவதர்களான ஆயர்களை பழி வாங்க வேண்டும் என்று நினைக்கின்றார்.

அதற்காக புஷ்கலா வர்த்தக மேகங்களை அழைத்து, ‘‘மழையை நம்பித்தானே இந்த ஆயர்கள் இருக்கின்றார்கள். இவர்களைத் தண்டிக்க வேண்டும்.  பசுக்களுக்கு உணவில்லாமல் செய்துவிட்டால் பசுக்கள் மடிந்து விடும். பசுக்கள் மடிந்து விட்டால், ஆயர்கள் வாழ்வும் நிலை குலைந்துவிடும்” என்று சொல்லி, தொடர்ந்து கடுமையான மழை பெய்ய வைக்கின்றான். இந்திரன் ஆணைக்கு கட்டுப்பட்ட அந்த மேகங்கள், கல் மழை பெய்கிறது. ஆயர்கள் குளிரிலும் மழையிலும் படாதபாடு படுகிறார்கள்.

இப்பொழுது, கோபியர்களுக்கு, அச்சம் வருகிறது. உடனே, கண்ணனிடம் சரணடை கிறார்கள். ‘‘கண்ணா, நீ சொல்லித்தானே, இப்படி மலைக்கு பூஜை செய்தோம். எங்களுடைய வாழ்வு இப்படி ஆகிவிட்டதே” என்று தவித்தார்கள். உடனே, ‘‘இந்தச் செயலுக்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டு உங்களைக் காப்பாற்று கிறேன்’’ என்றான், கண்ணன். யார் ஒருவர், ஒரு செயலைச் செய்ய சொல்லுகின்றார்களோ, அதனுடைய அனைத்து விளைவிலிருந்தும் காப்பாற்ற அவர்களே ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்ற விதி இதில் சொல்லப்படுகிறது.

நான் சொல்லித்தான் இந்த மலைக்கு, பூஜை இட்டார்கள். ஆகையினால், இவர்களை காப்பாற்றுவது தன் கடமை என்று, கண்ணன் நினைக்கின்றான். “நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி, கோவர்த்தன கிரியையே, குடையாக எடுத்து, ஏழுநாள் கல் மழையில் இருந்தும், இடியிலிருந்தும், குளிரிலிருந்தும் காப்பாற்றுகின்றான்.

ஸப்த ராத்ரம் மஹா மேகா: வவர்ஷூர் நந்த கோகுலமே
இந்த்ரேண சோதிதா விப்ர கோபானாம் நாசகாரிணா:

- என்று, ஆயர்களை நாசம் செய்ய விடாமல் மழை பொழிந்தது என்று பாகவதத்திலே வருகின்றது. இதிலிருந்து காப்பாற்ற குன்றைக் குடையாய் எடுத்தான். இப்போது ஒரு சந்தேகம் எழும். ஏன் மலையைக் குடையாய்த் தூக்க வேண்டும்? காரணம் இதுதான்.மலைக்குத்தான் அவர்கள் பூஜை இட்டார்கள். மலை, தங்களைக் காக்காமல் போய்விட்டதே. மலையை நம்பி, நாம் மோசம் போய்விட்டோமே என்று மலையைத் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். மலைக்குப் பூஜை செய்ததால்தானே ஆபத்து வந்தது. எனவே, எது ஆபத்து தந்ததோ, அந்த ஆபத்து தந்த பொருளையே வைத்து, இவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கோவர்த்தனகிரியைத் தூக்கி காப்பாற்றினான்.

இரண்டாவதாக, இதில் தத்துவ விளக்கமும் ஒன்றுண்டு. வினைகளின் விளைவுதான் இடி, மின்னல், மழை. இதை தாங்க முடியாமல் கண்ணனைச் சரணடைந்தார்கள். கண்ணன் குன்றைக் குடையாக எடுத்து காத்தான். இதில் மழை வினைகள். கண்ணன் பகவான். அவன் தாங்கிய குன்றுதான் கண்ணனின் பேரருள். பகவானுடைய பேரருள் கிடைத்துவிட்டால், எந்த வினைகளில் இருந்தும் மீளலாம் என்பது இதன் பொருள். கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாய்க் கவித்ததன் மூலமாக, நான்கு செயல்களைச்  செய்தான்.

1) இந்திரனின் ஆணவத்தை அடக்கினான்.
2) மலையின் மீது பழி ஏற்படா வண்ணம் காத்தான்.
3) அவர்களைக் காக்கும் கடமை மலைக்கு உண்டு என்பதால், வேறு மலையைத் தூக்காமல் அதே மலையைக் கொண்டு, ஆயர்களைக் காத்தான்.
4) பசுக்களையும் கன்றுகளையும் காத்தான்.

இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் தற்போதும் தீபாவளித் திருநாளுக்கு அடுத்த நாளில், ஆண்டுதோறும் கோவர்த்தன பூஜை, வட இந்திய மாநிலங்களில், குறிப்பாகப் பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோவர்த்தன பூஜை திருநாளை, குஜராத்தி மக்கள் தங்களின் புத்தாண்டாகவும், மராத்தியர்கள் வாமனர், மகாபலி சக்கரவர்த்தியை பாதாள லோகத்தில் அமிழ்த்திய நாளாகவும் கொண்டாடுகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோ பூஜையும் கொண்டாடப்படுகிறது.

தொகுப்பு: கல்யாணராமன்

Tags : Kannan ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!