×

தாமரையை ஆதரிக்கும் சுயேச்சைக்கு பாடம் எடுத்த இலை நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தூங்கா நகர் பல்கலையில் டிஸ்டன்ஸ் எஜூகேஷனில் என்ன தான் நடந்தது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகர் பல்கலையில் கடந்த இலைக்கட்சி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளில் மிக முக்கியமானதான தொலைநிலை கல்வியில் போலி ஆவணம் மூலம் பணம் வசூலித்து, சான்றிதழ் கொடுத்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. இதுதொடர்பாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த நடவடிக்கையை சற்றும் எதிர்பார்க்காத சிலர் திகைத்து போய் நிற்கிறார்களாம். ஏனென்றால் பல கட்ட விசாரணையின் முடிவில்தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு தொடக்கம் தானாம். இன்னும் கடந்த கால இலைக்கட்சி ஆட்சி காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளில் பல்கலைக்கழக முக்கிய தலைகளான அப்போதைய பதிவுக்குரியவர், இயக்கத்திற்குரியவர், மேலதிகாரியானவர் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதோடு, மாணவர் சேர்க்கை மையங்களில் நடைபெற்ற முறைகேடுகளில் இவர்களோடு, தேனிக்காரருக்கு நெருக்கமான சிலருக்கும் தொடர்பு இருக்கிறதாம். விரைவில் மேலும் பலர் மீதும் நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது. இதில் முக்கிய தலைகள் மாணவர் சேர்க்கை மையத்துடன், போலி சான்றிதழ் வழங்கியதுடன், சூரிய சக்தி மின் திட்டம் எனவும் பல வகையிலும், பல லட்சங்களை சுருட்டியுள்ளனர். இப்போதைய இந்த நடவடிக்கை, கடந்த இலைக்கட்சி காலத்தில் ஆட்டம் போட்டு கல்லா கட்டியவர்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கி இருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சின்ன ஸ்டேட்ல பெரிய பிரச்னை படம் எடுத்து ஓடுதாமே, அப்படி என்னதான் பிரச்னை…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘புல்லட்சாமிக்கு எதிராக படிக்கட்டில் அமர்ந்து போராடிய பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏவை அழைத்து சபையின் நாயகர் சமரசம் பேசினார். அப்போது எனது தொகுதியில் கோயில், சொசைட்டி உள்ளிட்ட கமிட்டியில் கூட எனக்கு எதிரானவர்களை நியமிக்கிறார். இதெல்லாம் நியாயமான என கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகி, சுயேச்சைக்கு பாடம் எடுத்தாராம். நீங்கள் உங்களது கோரிக்கையை கேட்கிறது தப்பில்லை. கேட்ட விதம் சரியில்லை. முதல்வரிடம் உங்கள் கோரிக்கையை நேரடியாக தெரிவிக்காமல், அவரே பார்த்து செய்ய வேண்டும் என்பதெல்லாம் ஓவர். அதோடு முதல்வரை நீங்கள் ஆதரிக்கவில்லை. தாமரை கட்சியைதான் ஆதரிக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தர தாமரைக்கு பொறுப்பு இருக்கிறது. இசையை சந்தித்து புகார் கொடுத்தால் எல்லாம் முடிந்துவிடுமா. 2024ல் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இது மாதிரி ஆட்டம் போட்டால் உங்க கட்சி மட்டுமல்ல. இது தேஜ கூட்டணிக்கே பின்னடைவை ஏற்படுத்தும். பார்த்து நடந்துங்க… சாமிக்கு ஒன்னும் உங்களை தூக்கி சுமக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தாமரையை ஆதரிப்பதுபோல, அவரை ஆதரிக்கவும் சுயேச்சைகள் இருக்கிறார்கள். உங்கள் படம் ஓடாது. சாமியை கவிழ்க்க நினைத்தால், ஆதரிக்க எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டுவிடும். பார்த்து பக்குவமா நடந்துக்கங்க.. உணர்ச்சி வசப்பட்டு, வாய்ப்பை இழந்துவிடாதீர்கள் என எம்எல்ஏவுக்கு அறிவுரை சொல்லி எழுந்து போனாராம்…’’ விக்கியானந்தா.‘‘கோவை விஷயத்தை தட்டி விடுங்க கேட்கலாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சி எல்லைக்குள் புதிதாக கட்டிடம் கட்டும்போது, மாநகராட்சியின் வரைபட அனுமதி பெற வேண்டியது கட்டாயம். முன்பு, இந்த நடைமுறை காகித வடிவில்  இருந்தது. விண்ணப்பதாரர்களின் கோப்புகளை சரிபார்த்து, உரிய கட்டணம் பெற்றுக்கொண்டு, லைசென்ஸ் வழங்கும் பணி எளிதாகவும், விரைவாகவும் நடந்தது. ஆனால், தற்போது ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மிகுந்த காலதாமதம் ஆகிறது. ஒரு இடத்தில் இருந்து ஸ்கேன் செய்து, கோப்புகளை இன்னொரு இடத்துக்கு அனுப்பும்போது, மண்டலம் விட்டு மண்டலம் மாறி சென்று விடுகிறது. இதனால், நீண்ட கால விரயம்  ஏற்படுவதுடன், கோப்புகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிந்து விடுகிறது. குறிப்பாக, மாநகராட்சியின் 4 மண்டலங்களில் கோப்புகள் கடந்த ஆறு மாதமாக தேங்கி கிடக்கிறது. இதனால், கட்டிட வரைபட அனுமதி பெற முடியாமல் மக்கள்  தவிக்கின்றனர். பல மாதமாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. விண்ணப்பதாரர்கள் மட்டுமின்றி, தனியார் பொறியாளர்கள், காண்ட்ராக்டர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் என பல தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆன்லைன் நடைமுறையை எளிதாக்க வேண்டும், இல்லையேல் காகித வடிவிலான பழைய  நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வீடு, கடைகளுக்கு புதிதாக மின் இணைப்புக்கு கறாராக லஞ்சம் கேட்கும் மி.வா அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடலோர மாவட்டத்தில் வீடு, கடைகளுக்கு புதிதாக மின்இணைப்பு வேண்டி சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் விண்ணப்பம் பெறப்பட்ட உரிமையாளர்கள் வீடுகள், கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் மின்வாரிய துறை அதிகாரி ஒருவர், ‘விட்டமின் ப’ கறந்து விடுகிறாராம். அவரது பெயரிலே செல்வாக்கு உடைய நபராக இருந்து வரும் அந்த அதிகாரி, புதிதாக வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க, ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்து விட வேண்டும் என கறாராக கேட்குகிறாராம். இதே போல் கடைகளுக்கு புதிய மின் இணைப்பு கொடுக்க ரூ.20 ஆயிரம் கொடுத்து விட வேண்டுமாம். அவ்வாறு ‘விட்டமின் ப’ கொடுத்தால் தான், காரியம் உடனடியாக நடக்குமாம்… இல்லாவிட்டால், மின் இணைப்பு கிடைப்பது குதிரை கொம்பாகி விடுகிறதாம். தற்போது இந்த விவகாரம் கடலோர மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அதிகாரி பற்றி உயரதிகாரிக்கு புகாருக்கு மேல் புகார் சென்றுள்ளதால் விரைவில் அந்த அதிகாரி வலையில் சிக்குவதாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குள் அரசல் புரசலாக பேசிகிட்டங்களாம். இந்த விவகாரம் தெரிய வந்த வசூல் அதிகாரி தற்போது கியிலில் இருந்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post தாமரையை ஆதரிக்கும் சுயேச்சைக்கு பாடம் எடுத்த இலை நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Nagar University ,Peter ,University of Dunga Nagar ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...