×

ஆடியில் அவதரித்த அன்னையே “முன்னுதித்த நங்கை”

சுசீந்திரம், கன்னியாகுமரி

கன்னியாகுமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், நாகர் கோவிலிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில். சுசீந்திரம் கோயில் மூலவரைத் தாணுமாலயன் என்றே அழைக்கின்றனர். இது மும்மூர்த்தி களின் கோயில். தாணு சிவனையும், மால் திருமாலையும், அயன் பிரம்மனையும் குறிக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் இனைந்த கோயில் என்றாலும், நடைமுறையில் சிவன் கோயிலாக வழிபாடு பெறுகிறது.

அற்புதமான சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத் தெப்பக்குளத்துக்கு அருகில், அழகாகக் காட்சியளிக்கிறது ‘முன்னுதித்த நங்கை’ திருக்கோயில். முன்னுதித்த நங்கை எனப் பெயர் தோன்றக் காரணம் என்ன?முப்பெருந் தேவியர்களான லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் கணவன்மார்கள், அனுசூயா தேவியின் கற்பின் சக்தியால் குழந்தைகளாக்கப் பட்டனர். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் தங்கள் சுய உருவம் பெற முப்பெருந்தேவியர் மூவரும் அன்னை அருள் வேண்டி கடுமையான நோன்பு இயற்றினர். ஆதிபராசக்தி, அவர்கள் முன் உதித்து அருள் பாலித்ததால் “முன்னுதித்த நங்கை” என்று பெயர் ஏற்பட்டது.

ஆதி பராசக்தியாக விளங்கும் முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோயில் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் கருவறை அழகிய ஆறு தூண்களால் தாங்கப்பட்டுள்ளன. ஆராதனை மண்டபம், மூலஸ்தானத்தைத் தொட்டு தெற்குப் புறமாக உள்ள அர்த்த மண்டபம் ஆகியவை இவ்வாலயத்தின் அங்கங்களாகும். இத்திருக்கோயிலில், மூன்று அறைகள் உள்ளன. இங்கே உட்பிராகாரமும், வெளிப்பிராகாரமும் அமைந்துள்ளன. இந்தக் கோயிலுக் கென்று தனியாகக் கொடி மரமோ, பலி பீடமோ, ராஜகோபுரமோ எதுவும் கிடையாது. அம்மன் கருவறை வாயிலில் சுமுகி, சுந்தரி என்கிற இரண்டு பெண்கள் துவாரபாலகிகளாக இருக்கிறார்கள்.

கருவறையைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் தர்ம சாஸ்தா, பஞ்ச கன்னியர், சிவன், பார்வதி, பூதநாதர், நாகராஜர், காலபைரவர் போன்ற மூர்த்திகளின் வடிவங்கள் அலங்கரிக்கின்றன. வேதாளம் போன்ற உருவங்களும் வழிபாட்டு மண்டபத்தில் உள்ளன. 135 அடி உயரமுள்ள, 7 நிலை மாடங்கள் கொண்ட தாணுமாலயன் ஆலயத்தின் ராஜ கோபுர உட்புறச் சுவரில், முன்னுதித்த நங்கை அம்மன் வரலாறு அழகிய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. அவற்றில், அன்னை முன்னுதித்த நங்கை அம்மனின் அருட்சிறப்பைக் கண்கூடாகக் கண்டு தரிசிக்கலாம்.

கர்ப்பக் கிருகத்தில் வீற்றிருந்து அருளாட்சிபுரியும் அன்னை ஆதிபராசக்தியே முன்னுதித்த நங்கையாவாள். மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள் என்பது ஆன்றோரின் கருத்தாகும். மும்மூர்த்திகளுக்கும் மேலான பரப்பிரம்மன் என்பது எதுவோ அதன் உருவமே ஆதிபராசக்தி வடிவம். அன்னை முன்னுதித்த நங்கை அஷ்டபுஜங்களுடன் திரிசூலத்தை ஒரு கையில் தாங்கிப்பிடித்து, அநீதி, அக்கிரமங்களை அழித்து காலத்தை வெல்லும் கால தேவியாகக் காட்சி அளிக்கிறாள்.

ஆலயங்களில் பொதுவாக தெய்வீகத் திருவுருவங்களை கருங்கல் அல்லது ஐம்பொன் எனப்படும் பஞ்ச லோகத்தால் வடிப்பது வழக்கம். ஆனால் முன்னுதித்த நங்கை அம்மனின் திருவடிவம் கற்சிலைகள் செய்யத் தொடங்கும் காலத்துக்கு முற்பட்டது என்பதால், அந்த நாளைய வழக்கப்படி கருசர்க்கரை என்னும் தெய்வீக மருந்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அவை காவிமண், குந்தரிக்கம், குலுகுலுசர்க்கரை, கொம்பரக்கு, செஞ்சயம், பசுநெய், எள்எண்ணெய், என பலவித மூலிகைச் சாறு ஆகிய எட்டுப் பொருள்களால் செய்யப்பட்டதாகும். இதைக் கொண்டு செய்யப் படும் மருந்து ‘அஷ்டபந்தனம்’ எனப்படும். சில்ப சாஸ்திரம் இதை ‘கடுசர்க்கரை யோக மருந்து’ என்கிறது. இத்தகைய சிலைகளுக்கு அபிஷேகம் கிடையாது.

முன்னுதித்த நங்கைக்கும் அபிஷேகம் கிடையாது. எனவே, அவ்வுருவத்துக்கு முன் மாமேரு வடிவத்திலுள்ள சக்கரத்தைப் பத்ரகாளியாக ஆவாகனம் செய்து அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றன.சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயிலில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி போன்ற மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களிலும், அம்மன் முன்னுதித்த நங்கையே முதன்மைப்படுத்தப்பட்டு பூஜிக்கப்படுகிறாள். அம்மன் வீதியுலா வரும் காட்சி ஆதிகாலத்திலிருந்து இன்று வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடி மாதத்தில் அன்னைக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆடி மாதம் முதல் செவ்வாயன்று இரவு கருமாரியாகவும், இரண்டாம் செவ்வாயன்று சரஸ்வதியாகவும், மூன்றாம் செவ்வாயன்று கேரள பகவதியாகவும், நான்காம் செவ்வாயன்று ராஜராஜேஸ்வரியாகவும், ஐந்தாம் செவ்வாயன்று மகிஷாசுரமர்த்தினியாகவும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.

ஆடிப்பூர நன்னாள் அன்னை அவதரித்த புனித நாளாக கருதுவதால், அன்று முன்னுதித்த நங்கைக்கு சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பெளர்ணமி அன்றும், நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் முன்னுதித்த நங்கைக்குப் பலவித விசேஷ அலங்காரங்களும் பூஜைகளும், ஆராதனைகளும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

உற்சவ காலங்களில் பல்லக்கு, படிச்சட்டம், சூரிய பிரபை, சந்திர பிரபை, பத்மம், கற்பக விருட்சம், கேடயம், வேதாளம், பெண் பூதம், சிம்மம், யாளி, யானை, காமதேனு, ரிஷபம், குதிரை, அன்னம், மயில், கிளி என பலதரப்பட்ட வாகனங்களில் ஆரோகணித்து அன்னை முன்னுதித்த நங்கை திருவீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். நாலா திசைகளிலிருந்தும் வரும் பக்தர்களின் கூட்டம் அளவிடற்கரியது.

முன்னுதித்த நங்கை பற்றிய கதை, சுசீந்திரம் தல புராணத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது. தாணுமாலயன் கோயிலுக்கும், இந்தக் கோயிலுக்கும் உள்ள உறவு காலங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. இவள் கார்த்தியாயனி. ஆதலால் தாணுமாலயன் கோயில் விழாவில் ஆரம்பத்திலும் முடிவிலும் போற்றப்பட வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது.நல்லன எல்லாம் தரும் அன்னை ஆதி பராசக்திய முன்னுதித்த நங்கையின் மலரடி தொழுவோம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!

டி.எம்.ரத்தினவேல்

Tags : Audi ,
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...