×

பிடாரி செல்லியம்மன் குறித்து தெரியுமா?

பிடாரம் என்ற சொல்லுக்கு ஆட்டி வைத்தல் என்பது பொருள். பாம்பை ஆட்டி வைப்பவன் பாம்புப் பிடாரன் என்று அழைக்கப்படுகிறான். பகைவர்களை ஆட்டு வித்து ஓடச்செய்பவள் ஆதலின் கிராம தேவதை பிடாரி என்று அழைக்கப்படுகிறாள். பீடைகளை (துன்பங்களை) அரிபவள் பிடாரி என்பர். பிடாரிகள் பலவகையாக உள்ளனர். ஊர்ப்பிடாரி, ஒண்டவந்த பிடாரி, ஓலைப் பிடாரி, சூலப்பிடாரி, காலப்பிடாரி என்ற பிடாரிகளைக் காண்கிறோம். பிடாகை என்னும் சொல்லுக்குக் கூடை என்பது பொருள். கூடையில் வைத்து வழிபட்ட பெண் தெய்வங்களே பிடாரி ஆனதென்பர்.

(பூம்பிடாகை, பூக்கூடை, பூஞ்செடிகள் சூழ்ந்த இடம் பிடாகை என்றழைக்கப்படுகிறது).பிடாகை என்பதைத் தனித்திருக்கும் இடம் என்பர். கல்வெட்டுக்களில் ஊரையொட்டியுள்ள இடங்கள் தென்பிடாகை, பிடாகை என அழைக்கப்படுவதைக் காண்கிறோம். ஊரை விட்டு ஒதுங்கியுள்ள இடத்தில் காவல் தெய்வமாக வீற்றிருப்பதால் கிராம தேவதை பிடாரி என்று அழைக்கப்படுகிறாள் என்பர். சிலப்பதிகாரத்தில், ‘‘அடங்காப் பசுந்துணி பிடர்த்தலைப் பீடம் ஏறிய வெற்றி வேல் தடக்கை கொற்றவை’’ என்று துர்க்கை விவரிக்கப்படுகிறாள்.

பிடர்த்தலை மீது நின்ற பெண்ணாதலின் பிடாரி ஆனாள் என்றும் கூறுவர். பிடாரி ஆலயங்களில் மூலவராக விளங்கும் அம்பிகையை அமர்ந்த கோலத்திலும், உலாத் திருமேனியை அமர்ந்த கோலத்திலும் அமைத்து வழிபடுகின்றனர். (காலப்போக்கில் சில இடங்களில் மூலவரைப் போலவே அமர்ந்த நிலையில் இருக்கும் உலாத் திருமேனிகளையும் அமைத்துள்ளனர்).

பிடாரி வடக்கு நோக்கி அமர்ந்திருப்பவள். அவளை வடவாயிற் செல்வி என அழைத்தனர். அதுவே மருவி இந்நாளில் செல்லியம்மன் என்றாகியுள்ளது. இவள் மேற்கரங்களில் பாசம், அங்குசம் தரித்து முன்கரத்தில் சூலம், கபாலம், ஏந்திக் காட்சியளிக்கின்றாள். தலையில் ஜ்வாலா முடியும் அதில் மண்டையோடு ஊமத்தம்பூ, சந்திர சூரியர் இடம் பெறுவர். காதுகளில் மகர குண்டலங்களும் தோடும் அணி செய்கின்றன.

வாய் இதழின் கரையோரத்தில் தெற்றுப் பற்கள் காணப்படும் விழிகள் விரிந்த நிலையில் உக்கிரப் பாவையுடன் விளங்குவாள்.
ஆதிநாளில் பிடாரிகளுக்குக் கோயில் இல்லை. ஓலைக் கூடையால் மூடி வைப்பர். வேண்டும்போது மட்டுமே பூசை செய்யப்படும். தினப் பூசைகள் செய்வது வழக்க மில்லை. செவ்வாயன்று விளக்கு வைப்பர். (வெள்ளிக் கிழமை வழிபாடுகள் பின்னாளில் ஏற்பாடு செய்யப்பட்டவைகளாகும்). மாதப் பிரவேசம் எனப் படும் முதல் தேதியில் அபிஷேகம் செய்வர். விசேட நாட்களில் அவள் உருவை எழுதி வைத்து வழிபடுவர்.

பிடாரிக்கு ஆதிமூலஸ்தானம் என்ற ஓரிடம் ஊருக்கு வெளியில் மலையடிவாரம், ஏரிக்கரை, ஆற்றங்கரை ஆகிய இடத்தில் இருக்கும். அங்கு அவள் உருவெளியாக (காற்று வடிவில்) உலவிக் கொண்டிருப்பாள். இந்த இடமே அவளுடைய அந்தரங்கத் தானமாகும். இங்கே எல்லா நாட்களிலும் சென்று வழிபடுவதில்லை. திருவிழாவிற்கு முன்பாக இந்த இடத்திற்குச் சென்று சூலம் நாட்டி பூங்கரகம் செய்து அம்மனை அழைப்பர். அப்போது பல்லி உத்தரவு அளித்த பின்னரே கரகத்தைத் தலையில் ஏற்றி ஊர்வலம் தொடங்குவர். அந்தக் கரகத்தைக் கோயிலில் வைத்துப் பின்னரே விழா தொடங்குவது வழக்கம். அம்மனுடைய கோயில் என்பது அவள் பரிவாரங்களுடன் வீற்றிருந்து அன்பர்களின் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்திக்கும் கொலு மண்டபமாகும். அங்குதான் மக்களுடைய பூசைகளை ஏற்றுக் கொள்ளுகிறாள்.

பிடாரிகள் ஆலயத்தை உச்சி வேளையிலும் நள்ளிரவிலும் சென்று வழிபடக் கூடாது. அந்த நேரங்களில் அவள் தன் உக்ரமயமான வேதாள, பூத கணங்களுடன் அவள் மகிழ்ந்திருக்கும் சமயம் என்பர். அப்பரிவாரங்கள் நமக்குத் துன்பத்தைத் தரும் என்று நம்புகின்றனர். ஊர்களில் அநியாயம் மிகுந்தாலும், ஒழுக்கம் குறைந்தாலும், அவள் மக்களைக் காப்பதை மறப்பாள். வேற்று ஊர்களுக்குச் சென்று விடுவாள். (அப்படி பிற ஊரிலிருந்து வந்து தன் ஊருக்கு வந்து சேர்ந்த பிடாரியை ஒண்டவந்த பிடாரி என்பர்.)

சில ஆலயங்களில் இரட்டைப் பிள்ளையார் இருப்பதுபோல இரட்டைப் பிடாரி திருவுருவங்கள் இருக்கக் காணலாம். இவர்களை ஒண்டவந்த பிடாரி, ஊர்ப் பிடாரி என அழைப்பர். பிடாரிக்குப் பூச்சொரிந்து, மாவிளக்கு, மாமிசம் கலந்த உணவுகள் ஆகியவற்றைப் படைப்பர். கூழ் ஊற்றுதல் சிறப்புப் படையலாகும். பணியாரம், கொழுக்கட்டை, வடை, சுண்டல், கீரைக் கறி ஆகியன பெரும் படையல்களாகும். இளநீரை நிவேதிப்பதும் பிரார்த்தனையாகும்.

பிடாரி தேரில் பவனி வருவது வழக்கம். அது பகலில் வலம் வருதல், இரவில் வலம் வருதல் என இரு வகையாகும். இவற்றைப் பகல்தேர் ராத்தேர் என்பர். பிடாரிக்கு இருப்பிடத்திலிருந்து கோயில் வரை நடை பாவாடை இட்டு அதன்மீது நடந்து சீர் கொண்டு வருவர். அவர்கள் தனியிடத்தில் பொங்கலிட்டு பலிதந்து சிறப்பு செய்வர். தேரோட்டத்தில் சந்ததிகள்தோறும் பலி நடைபெறும். வாசிபலி, தேர்க்கால் பலி, ஊர்ப்பலி என்று பலவிதமாக பலிகள் இடப்படும்.

எனவே, இவ்விழா பெருஞ்செலவு கொண்டதாகும். காலப்போக்கில் பிடாரிக்குரிய பாரம்பரிய விழாக்கள் வழக்கிழந்தன. அதற்கு முதல் காரணம் பெருஞ்செலவு அத்துடன் ஊரிலுள்ள அனைவரையும் ஒருமித்த மனதுடன் கூட்ட வேண்டிய நிலை. இரண்டாவது ஆதியில் இருந்த ஊர்க் கட்டுப்பாடுகள் காலப்போக்கில் தளர்ந்து போனது. இன்னும் பல காரணங்களும் உள்ளன.
தொண்டை மண்டலத்தில் மட்டும் பெருந்திருவிழாவுக்கு முன்பாகச் செல்லியம்மன் விழா அல்லது பிடாரி உற்சவம் என்ற பெயரில் அம்பிகைக்கு வீதியுலா நடைபெறுகிறது.

பிடாரியின் கோயிலுக்குக் கதவுகள் அமைக்கும் வழக்கம் முன்னாளில் இல்லை. எனவே, உற்சவரை பாதுகாப்பு கருதி பெரிய சிவாலயங்களில் எழுந்தருளி வைப்பது வழக்கமாக இருக்கிறது. சில தலங்களில் ஆலயத்தின் வடக்கில் மதிலோரமாக பிடாரி ஆலயத்தை நந்த வனத்துடன் அமைத்தனர். கோயில் விரிவாக்கம் பெற்றபோது கிராம தேவதை சிவாலயத்துக்குள் வைத்து வழிபடத் தொடங்கியுள்ளனர்.

பூசை. அருணவசந்தன்

Tags : Bidari Chelliyamman ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்