×

திருமண பாக்கியம் தரும் திருநல்லமுடையார்

கோனேரிராஜபுரம்

திருமால் பூமிப்பிராட்டியை தம் அருட்கண்களால் அளந்தார். அடர்ந்து பரவிக்கிடக்கும் அந்த அரசவனங்காட்டை நோக்கி சுட்டிக் காட்டினார். பூமாதேவி மயிர்க்கூச்செறிந்தாள். மெல்ல தம் திருவடியை அந்த திக்கு நோக்கி திருப்பினாள். காவிரித்தாய் கையில் ஏந்தினாள். அந்த அரச வனங்காட்டிற்குள் நுழைந்தாள். அவள் உயிர் சக்தியின் மையத்திலிருந்து ஓர் சக்தி பீறிட்டு பூமித்தாயை நிறைத்தது. பிராட்டி அந்தச் சுகம் தாங்காது அலறினாள்.

எங்கிருக்கிறது அந்த மையம் என்று தேடினாள். ஓர் ஒளியை தொடர்ந்தாள். சிலிர்த்து சுடர் பரப்பி செங்கதிர் சிவமாக வீற்றிருந்தார் ஈசன். பூமிப் பிராட்டியின் வருகை அறிந்த சிவப் பிரானின் உள்ளம் கனிந்தது. அவளின் அகத்திலிருந்து ஏதோவொன்று அலறி நகர்ந்தது. வெறுமையானாள். பிரபஞ்ச சக்தியாக ஒளிர்ந்து கிடக்கும் லிங்கத் திருமேனியை கண்கள் மூடி வணங்கினாள். அருகிலிருக்கும் வில்வத் தழைகளை நீவி எடுத்தாள். கூடையில் நிரப்பினாள். ஐயனின் சிரசில் அர்ச்சித்தாள். கேவிப் பொங்கிய ஆனந்தத்தில் தான் இழந்த பலத்தை ஒட்டுமொத்தமாக பெற்றாள். அசுர சக்திகளின் சிறு சுவடுகள் கூட தன் உள்ளத்தில் இல்லாதது கண்டு இன்னும் ஆனந்தித்தாள். ஈசனும் அவளுக்கு ஆனந்தமான அந்த திருமணக் காட்சியைக் காட்டினார்.

“கல்யாண சுந்தரா...’’ என்று உதடு பிரித்து விளித்தாள். ஈசனின் விழிக்கூரம்புகள் அவளை வஜ்ரம் பாய்ந்த விருட்சமாக மாற்றின. ஈசன் மெல்ல லிங்கத் திரட்சிக்குள் ஒடுங்கினார். அரசவனத்தை தென்றல் தாலாட்ட, பூமிப்பிராட்டி அயர்ந்தாள். ஈசனின் சந்நதியில் சமாதியிலிருக்கும் ரிஷி போல் அமர்ந்தாள். ஈசனின் மையத்திற்குள் பிரவேசித்தாள். பூமியை இன்னும் உறுதியாகச் சுமந்தாள். ஈசனின் மூச்சுக்காற்றாக விளங்கும் வேத சப்தங்களை தமக்குள் ஏற்றாள். தர்மச் சக்ரத்தை மையமாக்கி பூமியைச் சுழற்றினாள். உயிர்கள் குளுமையுற்றன. பிரபஞ்சம் வளர்ந்தது. இதைக் கண்ட கௌதம மகரிஷி ‘‘ஆஹா... பூமித்தாயின் திருவடி படர்ந்த அந்தத் தலத்தை தம் சிரசில் ஏற்று தரிக்க வேண்டுமே’’ என்று ஆவலுற்றார்.

பூமித்தாய் வெகுகாலம் இத்தல ஈசனை பூஜித்தாள். மெதுவாக நகர்ந்து புவியின் மையத்தில் அமர்ந்தாள். பூமியின் சுமை இப்போது அவளுக்கு மெல்லிய சிறகாக இருந்தது. கௌதம மகரிஷி பூமாதேவி பூஜித்ததாலேயே ‘பூமிச்சுரம்’ என்று திருப்பெயரிட்டார். நல்லோர்களும், ஆன்றோர்களும், மகரிஷிகளும் அத்தலத்தில் வந்து குடியேறினர். பூமிநாதர் எல்லோரையும் பேரணையால் ஈர்த்தார். மக்கள் அத்தலத்தை ‘திருநல்லம்’ என்று அழைத்தனர். பூமிநாதரையும், மங்கள அணிகலன் பூண்டொழுகும் அழகம்மையான அங்கவள நாயகியையும் தரிசித்து வரலாமா என்று இத்தலத்தை அடைந்தனர். கௌதமர் குடில் அமைத்து தீவிர தவம்புரிந்தார். மாமுனியைச் சுற்றிலும் சீரடியார்களும் தவத்தில் ஒன்றினர். அகிலத்தின் அசைவாட்டத்தை... அலகிலா ஆனந்த நடனத்தை கண்டு களிக்க மாட்டோமா என்று தீவிர தாக தவத்தில் ஈடுபட்டனர்.

சிவனும் உமையும் ஒன்றாக ரிஷப வாகனனோடு வானில் நின்றனர். பார்த்தோர்கள் அகமலர்ந்தார்கள். கௌதமர் கருணைமிகு ஈசனின் வடிவத்தை வைத்த கண் வாங்காது பார்த்தார். ‘விரி சடையோன் வீசியாடும் ஆனந்தத் தாண்டவத்தை இங்கு ஆடிக்காட்ட மாட்டாயா’ என்று விசும்பினார். தில்லைக்கூத்தன் திருநல்லத்தில் தன் திருநடனத்தை ஆடிக்காண்பித்தார். அது ஆனந்தத் தாண்டவம். அதனால் பேரானந்தத்தின் பெரு உச்சியை சட்டென்று ரிஷிகள் பிடித்தனர்.

அவன் கழல் காலடிச் சதங்கையினூடே பிரபஞ்சத்தை அவன் ஆட்டுவிக்கும் விதம் கண்டு வியந்தனர். அளந்தாடும் ஆனந்த ஆட்டம் அவர்களை பிரமிக்கச் செய்தது. திருநல்லப் பிரானோடு தம்மை மறந்து ஏகமாக கலக்கச்செய்தது. அந்த ஆனந்தத் தாண்டவ மூர்த்தி அருவமாக அத்தலத்தில் அசைந்துகொண்டேயிருந்தது. யுகத்தையும் அசைத்து சற்று முன்நோக்கி நகர்த்தியது. சோழர்களின் காலத்தை நெருங்கியது. சிலா மூர்த்தியாக தன்னை மாற்றிக்கொள்ளும் காலம் அருகிலிருப்பதை நடராஜர் அறிந்தார்.

நாயன்மார்களும், நால்வர்களும் தலத்தின் சிவப்புழுதியில் நனைந்து பழுத்த சிவமாக மாறினர். பூமிநாதர் என்கிற திருநல்லமுடையாரையும், அங்கோல் வளை மங்கை எனும் செந்தேனூறும் அழகிய திருப் பெயரையுடைய நாயகியையும் தரிசித்தனர். சோழப் பேரரசின் பெருந்தேவியான செம்பியன் மாதேவியால் கற்றளியாக உருப்பெற்றது. அதன் பின்னர் வந்த அரசர்கள் பல்வேறு திருப் பணியில் ஈடுபட்டனர். அதில் ஒரு சோழ அரசன் நடராஜரின் ஆனந்தத்தையே வார்த்தெடுத்து சிலா ரூபத்தில் சிலிர்க்க வைக்க வேண்டுமென்று ஆவலுற்றான். சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். தன் மனதிற்கு சிறந்தவர் என கணித்து ‘நீங்கள்தான் செய்து தர வேண்டும்’ என்று உத்தரவிட்டான்.

ஆனால், ஈசன் தானாக தன்னைகாட்டிக் கொள்ள வேண்டுமே என்று பிடிவாதம் பிடித்தான். சிற்பியின் கரங்களில் சிலை வளர்ந்தது. ஆனால், அந்த மெல்லிய சிரிப்பும், ஆனந்த அலையலும் உள்ளத்தில் தைக்கும்படி சிலையில் பொலிந்து இறங்க மறுத்தது. இன்னும், மாற்றங்கள் செய்வோமே என்று உளியால் செதுக்க சிலை பின்னமாகி சிதைந்தது. நாட்கள் நெருங்கின. அவன் மனதில் ஆனந்தம் மறைந்து துக்கக்களை மிகுந்தது.

நடராஜர் சிலையை தன்னால் ஏன் வடிக்க முடியாமல் போகிறது என்று அங்கு உலைக்குள் கொதித்துக்கொண்டிருந்த பஞ்ச உலோகக் குழம்பையும் வெறித்தபடி இருந்தான். அக்னிக் குழம்பின் கொதிப்புக் குதியலில் ஓர் ஆனந்தத்தாண்டவம் தெரிந்தது. ஈயத்தின் துளிகள் சுடராக ஒளிர்ந்தன. ஈசன் அதனுள் ஒளிந்துகொண்டான். பெருஞ் சிவப்பேறி கனிந்தான். சிற்பி ஏதோ வியத்தகு உணர்வு அவ்விடத்தை ஆக்கிரமிப்பது கண்டு பயந்தான். அவ்விடம் விட்டு அகன்றான். ஆனால், அக்னிக்குழம்பு அணையாது இன்னும் பொன்னுருவில் மிளிரத் தொடங்கியது.
சோழனின் கால்பற்றி ‘‘என்னால் தில்லைக்கூத்தனின் திருவுருவைச் செய்ய இயலாதய்யா... ஏதோவொன்று என்னை மறிக்கிறது. காரணம் புரியாது தவிக்கிறேன். என் சிலைக் கணக்குகள் தவறாகின்றன. என்னை மன்னியுங்கள்’’ என்றான்.

‘‘அறிவிலியாக பேசாதே. இன்றொரு நாள் உனக்கு அவகாசம். நாளை சிலை பிரதிஷ்டை. ஒன்று சிலை இருக்க வேண்டும். இல்லையெனில் உன் சிரசு பூமியில் உருளும்’’ என்று அரண்மனைக்குள் சென்றார், அரசன். சிற்பி திருநல்லம் கோயிலுக்குள் நுழைந்தான். ஈசனுக்கருகே வயதான தம்பதியர் மேனி முழுதும் திருநீறு பூசி நின்றிருந்தனர். ‘‘வெகு தொலைவிலிருந்து வருகிறேன் ஐயா. தொண்டை தாகத்தால் வறட்சியுற்றிருக்கிறேன். அருந்த நீர் வேண்டுமே’’ என்று பணிவாகக் கேட்டனர்.

சிற்பி ‘‘நீர் வேண்டுமெனில் என்னையா கேட்பீர். எங்கேனும் இருந்தால் பிடித்துக் குடித்துக் கொள்ளுங்கள்’’ என்றான். வார்த்தைகள் கூர் ஈட்டியாகப் பாய்ந்தது. ‘‘திருநல்லமுடையாரை தரிசிக்க வந்தவருக்கு நீர் கொடுக்க மாட்டீரா’’ என்றார் வேதியர்.சிற்பி கிழச்சிங்கத்தின் பக்கம் திரும்பினான். முகத்தில் கோப அனல் பறந்தது. ‘‘ஐயா, வேதியரே... இதோ வெந்து கொண்டிருக்கிறதே இந்த உலோகக் குழம்பை எடுத்துக் குடியுங்கள். இப்போதைக்கு இதுதான் முடியும்’’ என்று வெறுப்புடன் பேசினான்.

அந்த திவ்ய தம்பதியினர் கொதித்துப்போய், பொன்னுரு வில் கொப்பளிக்கும் அக்னிக் குழம்பில் தம் அழகிய பஞ்சினும் மெல்லிய காலடியை உலைக்குள் இருக்கும் பாத்திரத்தில் வைத்து இறங்கினர். சிற்பி அலறினான். ‘‘ஐயோ...’’ என்று பெருங்குரலெடுத்துப் பிளிறினான். அவ்விடத்தில் பெருஞ்ஜோதியொன்று வெடித்தது. உலகம் யாவையும் மறைத்து ஆனந்தக் கூத்தனாக... தில்லை அம்பல நடராஜனாக திகழ்ந்தெழுந்தது. விரி வார் சடையன் எண்திக்கும் விரிந்தெழுந்தான்.

சடாபாரம் அலைய ஆனந்த நர்த்தனமாடினான். உள்ளுக்குள் அசைந்தவன் புறத்திலே சிலையாகி நின்றான். சிற்பி மூர்ச்சையுற்றான். கௌதமர் கண்டதை, பூமிப்பிராட்டி பார்த்துப் பூரித்ததை கால மறியா பெருவெளியில் அந்த திருநல்லத்துச் சிற்பி கண்டு அதிர்ந்தான். கண் விழித்தான். சிலை பொன்னாக ஜொலித்தது. அருகே சென்று பார்க்க சிலையின் மார்புப் புறம் மூச்சுக் காற்றின் அசைவால் மேலே விம்மி விம்மி அழுந்தியது. புன்சிரிப்பொன்று உதடுகளில் நிரந்தரமாக படர்ந்திருந்தது.

கைகளின் கீழே தோலின் மேல் தோன்றும் மரு ஒன்று காணப்பட்டது. கைகள் வைத்துணர ரத்த ஓட்டம் போல ஏதோவொன்று அசைந்தோடியதைப் பார்த்து அயர்ந்தான். மணிக்கணக்கில் முகவாயில் கை வைத்து தன் கண்களால் சிலையின் வடிவழகைப் பருகினான். மன்னரை பார்க்கப் போனான். நடந்ததைக் கூறினான். மன்னர் நம்ப மறுத்தார். கோயிலிலுள்ள சிலையழகைக் கண்டு மயங்கினார். தன் போன்று கை நகங்களும், தோலின் வழவழப்பும் எப்படி என்று சோதித்தறிய மெல்லிய ஈட்டியால் விலாப்பக்கம் குத்த குருதி கொப்பளித்தது. ‘‘ஐயனே என்னை மன்னித்துவிடு’’ என்று அவர் கழற்சதங்கை கால் பற்றித் தொழுதான். ஊரார் கூடிவிழா எடுத்தனர்.

இன்றும் அந்த உயிரோட்டம் மிகுந்த நடராஜர் சிலை திருநல்லம் எனும் கோனேரிராஜபுரத்தில் உள்ளது. நால்வராலும் பாடல் பெறும்போது திருநல்லம் என்றழைக்கப்பட்ட இத்தலம், கோனேரிராயன் என்னும் சிற்றரசனுக்குப் பிறகு ‘கோனேரிராஜபுரம்’ என்றாகியது. சோழர்கள் காலத்தில் எல்லா மன்னர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஊராக விளங்கியது. வரலாற்றுச் செறிவும், புராணத்தின் பழமையும், வேதவிற்பன்னர்களால் நிறைந்து சிறந்து விளங்கிய தலமிது. இப்பேர்பட்ட திருக்கோயிலை தரிசிப்போமா...

கோனேரிராஜபுரத்தை முழுக் கற்றளியாக செய்தவர் கண்டராதித்த சோழனின் மனைவியாகிய செம்பியன் மாதேவியாவார். அவர் வணங்குவது போன்ற புடைப்புச் சிற்பம் பிராகார கோஷ்டங்களில் இடம் பெற்றுள்ளது. மேற்கு நோக்கிய ராஜகோபுரம். கட்டை கோபுரத்தின் எதிரில் பரந்துவிரிந்த திருக்குளம். மனதை பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு நகர்த்திச் செல்கிறது கோயிலின் தொன்மை.

 வெளிப்பிராகாரத்தின் வடக்குப் பக்கம் அம்பாள் தனிக் கோயிலில் எழிலோடு வீற்றிருக்கிறாள். சொல்லச் சொல்ல மனதிற்கு இனிமையை ஊட்டும் அழகுப் பெயர் இவளுக்கு. திருஞான சம்பந்தர் அங்கோல் வளை மங்கை என்கிறார். அங்கவள நாயகி என்றும், தேக சுந்தரி என்றும் சற்றே மாற்றியும் அழைக்கிறார் கள். வெள்ளிக் காப்பில் மின்னுகிறாள். வாழ்க்கையை அவளருளால் அவள் போல மெருகூட்டுகிறாள். அங்கோல் வளை மங்கை எனும் திருநாமமே தியானத்திற்குரிய சொற்றொடர். உள்ளம் முழுதும் அவளின் நாமம் நிறைந்து நாதனை காணப் போவோம்.

திருக்கோயிலில் வெளி மண்டபம், நடராஜர் மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக் கிரகம் என்று ஐந்து தனித்தனி மண்டபங்கள் உள்ளன. முகப்பு வாயிலிலிருந்து உள்ளே நகர வெளி மண்டபத்தில் மேற்புறத்திலுள்ள ஓவியங்கள் உயிரை நிறுத்தும் பேரழகு மிக்கவையாக அமைந்துள்ளன. ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் ஈசனும், உமையும் எத்தனை அழகு... ஞானியரின் கதைகளை ஓவியமாகச் சொல்லும் அற்புதம். சிறு சிறு கோயில்களின் சந்நதி வரைபடங்கள், ஆங்கிலேயர்களோடு பேசும் ஊர் மக்கள், சிங்கத்தின் மீது உற்சவ விக்ரகம் என்று மேல் தளத்தில் கழுத்து வலிக்க எப்படித்தான் வரைந்தார்களோ என்று ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

அதையடுத்து நடராஜர் மண்டபம். நகமும், சதையும், தோலின் மறுவும் அண்ணாந்து பார்க்க வைக்கும் சிலையின் பிரமாண்டமும் மயிர்க்கூச்செறிய செய்கின்றன. இன்னமும் கூட ஒரு கொதிப்பும், தணலும் சந்நதியை நிறைத்தபடி இருக்கிறது. சடைக் கற்றைகள் தீ போல பரவியிருக்கின்றன. கால்கள் வீசியிருக்கும் லாவகத்தை அருகிலிருந்து பார்க்க ஏதோவொரு புயல் சட்டென்று கடந்து நகர்வது போன்ற உணர்வு. கால் மாற்றி நடனமிடும் முகத்தில் ஓர் நளினமும், மெல்லிய புன்சிரிப்பும் அந்தப் பொன்னொளியில் இன்னும் ஜொலிக்க வைக்கிறது. அந்தச் சிற்பியின் மிரட்சியை நாமும் அங்கு உணரலாம். அதை சாத்தியமாக்கும் வகையில் அருகிலேயே பூமிநாதர் சந்நதி.

யுகம்தோறும் வீற்றிருப்பவரான மூலவர் சந்நதிக்கருகில் இடையறாத ஓர் அருட் சக்தி பொத்துக் கிளர்ந்தெழுகின்றது. அருகினில் சென்று இமைமூட நம் அகத் திலும் சுழன்று எழுகிறார். பூமிப்பிராட்டியை பக்குவப்படுத்தி, அசுரனின் தாக்கத்திலிருந்து தடுத்தவன் நம்மையும் இங்கு தடுத்தாட்கொண்டருளுவார். திருமணக்கோலம் காட்டி மகிழ்ந்தவன், இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு மணமுடித்து மகிழ்கிறான். அதனாலேயே திருநல்லமுடையார் எனும் பூமிநாதரை ‘கல்யாண சுந்தரர்’ என்று அன்பாக அழைத்தனர். அப்பரடிகள் ‘‘நல்லம் மேவிய நாதன் அடிதொழ வெல்ல வந்த வினைப்பகை வீழுமே’’ என்கிறார். இத்தல ஈசனின் திருவடிகளை தொழ நம்மை அழிக்க வந்த வினைகள் அழியுமே என்று உறுதி சொல்கிறார்.

கர்ப்பக் கிரக விமானம் சோழர் சிற்பக்கலை பாணியை கொண்டது. இதில் ஒன்பது கோஷ்டங்கள் உள்ளன. அவற்றில் மங்கை பங்கர், துர்க்கை, பிட்சாடனர், பிரம்மா போன்றோரும், கிழக்குப் பக்கம் லிங்கோத்பவர், தெற்குப் பக்கம் குரு, அழகான நடராஜர் கற்சிலை, விநாயகர், அகத்தியர் என்று கற்களை வைத்துக் கொண்டு விளையாடியிருக்கிறார்கள், சோழர்கள். குரு பகவான் சந்நதிக்கு எதிராக ஞானகூபம் எனும் கிணறு உள்ளது. இத்தலத்தில் சுவாமி சந்நதி மேற்கு நோக்கியும், அம்பாள் சந்நதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது. அதாவது சிவபிரான், உமையம்மையை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு எதிரெதிராக உள்ளனர்.

தல விருட்சம் அரச மரமாகும். மிகப் பெரிய கோயிலும், அதிநுணுக்கமான சிற்பச் செறிவும், கல்வெட்டுக்கள் கூறும் காலச் செய்திகளும், இன்னும் இன்னும் புராணத் தகவல்களும் பிரமிப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. அப்பரின் இத்தல வாக்குக்கு இணங்க ‘‘காலமானது கழிவதன் முன்னமே ஏலுமாறு வணங்கிநின் றேத்துமின்’’. அதாவது, ‘உமது வாழ்நாள் முடியும் முன்னே சென்று இயலும் நெறியில் வழிபட்டு உய்வடையீர்’ என துரிதப்படுத்துகிறார். காலத்தின் கோரம் தரிசிக்காது செய்துவிடும் என்றும் பயமுறுத்துகிறார். இத்தலம் கும்பகோணம் - காரைக்கால் மார்க்கத்திலுள்ள எஸ்.புதூர் என்ற ஊரிலிருந்து செல்ல வேண்டும். மினி பஸ்கள் மற்றும் ஆட்டோ வசதிகளும் உள்ளன.

திருவருணை கிருஷ்ணா

Tags : Tirunallamudiyar ,
× RELATED திருமண பாக்கியம் தரும் திருநல்லமுடையார்