×

ராஜயோகம் அருளும் ராஜகோபாலன்

மன்னார்குடி

1. வஹ்னி முனிவரின் புதல்வர்களான கோபிலர், கோபிரளயர் போன்ற இருவருக்கும் பிருந்தாவனத்தில், தான் நிகழ்த்திய 32 லீலைகளையும் கண்ணன் நிகழ்த்திக் காட்டிய தலம் மன்னார்குடி.

2. அவற்றில் கடைசியாக கண்ணன் காட்டிய 32வது கோலமே ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் திருக்கோலம். கோபிலர், கோபிரளயர் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் அத்திருக்கோலத்திலேயே இத்தலத்தில் நிலைகொண்டார் என்கிறது தலபுராணம்.

3. இதனாலேயே இத்தலம் தட்சிணதுவாரகை என அழைக்கப்படுகிறது.

4. இத்தலம் 154 அடி உயர ராஜகோபுரம், 7 பிராகாரங்கள், 16 கோபுரங்கள், 24 தெய்வ சந்நதிகள், நெடிதுயர்ந்த மதில்கள், அழகான மண்டபங்கள் கொண்டு கலைப் பொக்கிஷமாய் திகழ்கிறது.

5. நான்கு வேதங்களையும் கற்றறிந்த அறிஞர்கள் வாழ்ந்த ஊர் என்பதால் ராஜாதி ராஜ சதுர்வேதிமங்கலம் எனவும், செண்பக மரங்கள் நிறைந்திருந்த இடமாதலால் செண்பகாரண்யம் என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.

6. இத்தலத்தில் காணப்படும் ஒற்றைக் கல்லினாலான கருடகம்பம் வியப்புடன் தரிசிக்க வேண்டிய ஒன்று.

7. மூலவர், ஸ்ரீ தேவி-பூதேவி சமேத வாசுதேவர் எனவும் உற்சவர் ஸ்ரீ வித்யாராஜகோபாலன் என்றும் வணங்கப்படுகிறார்.

8. உற்சவ மூர்த்தி, கோபாலசுந்தரீ எனும் அம்பிகை உபாசனையில் போற்றப்படும் லலிதையும் கண்ணனும் சேர்ந்த வடிவில் திரிபங்கநிலையில் தரிசனமளிக்கிறார். இவர் பாதத்தில் தேவிக்குரிய ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

9. மூல தாயார், செண்பகலட்சுமி என்றும், உற்சவர் செங்கமலத்தாயார் எனும் பெயரிலும் அருளும் தலம் இது.

10. தாயாரின் தோழிகளாக ராஜநாயகி, துவாரகா நாயகி என இருவர் அருள்கின்றனர்.

11. இக்கோயிலிலுள்ள சந்தான கோபாலன் விக்ரகத்தை மழலை வரம் வேண்டுவோர் மடியில் ஏந்தி பிரார்த்தனை செய்தால் தட்டாமல் அவர்களுக்கு பிள்ளைப் பேறு அருள்கிறான் கண்ணன்.

12. தலவிருட்சமாக புன்னை மரமும், பத்து தல தீர்த்தங்களில் முக்கியமானதாக ஹரித்ரா தெப்பக் குளம் விளங்குகிறது. இது பல ஏக்கர் பரப்பளவு கொண்டு பிரமாண்டமாக வியாபித்திருக்கிறது.

13. இத்தலத்தில் தினமும் ஏதாவது உற்சவம் நடந்து கொண்டே இருப்பதால் இப்பெருமாள் நித்யோற்சவப் பெருமாள் என பக்தர்களால் போற்றப்படுகிறார்.

14. இத்தல பிரம்மோற்சவத்தை பிரம்மாவே தொடங்கி வைத்ததாக ஐதீகம்.

15. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாளில் பஞ்சமுக ஹனுமார் வாகனமும், ஆறாம் திருநாள் இருதலை ஒரு உடல் கொண்ட கண்டபேரண்ட பட்சி வாகனமும் இத்தலத்தின் விசேஷ வாகனங்களாக பவனி வருகின்றன.

16. 16ம் திருநாளான வெண்ணெய்த்தாழி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

17. இந்த பெருமாள் கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் அருள் புரிந்து வருவதாக நம்பப்படுவதால் சதுர்யுகம் கண்ட பெருமாள் எனவும் இவர் போற்றப்படுகிறார்.

18. ராஜகோபாலன் ஒரு காதில் குண்டலத்தையும், மறு காதில் தோட்டையும் அணிந்து வித்தியாசமாக அருட்காட்சி தருகிறார்.

19. தாயாரின் உற்சவங்கள் அனைத்தும் ஆலயத்திற்குள்ளேயே நடப்பதால் தாயார் படிதாண்டாப் பத்தினி என அழைக்கப்படுகிறார்.

20. கும்பகோணத்திலிருந்து 38 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 40 கி.மீ, தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

தொகுப்பு: ஜி. ராகவேந்திரன்

Tags : Rajagopalan ,
× RELATED நடைபயிற்சி செய்தவரிடம் இளம்பெண்ணுடன்...