×

ஆனித்திருமஞ்சனம் நிகழும் ஆடல்வல்லான் ஆலய சிற்பங்கள்!

ஆலயம்: தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்.
காலம்: தென்னிந்தியாவை ஆண்ட பெரும் அரச மரபினர்களான சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள் இவ்வாலயத்திற்கு பெருங்கொடைகள் அளித்து, கட்டுமானம் மற்றும் புனரமைப்புகள் செய்துள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் சைவக் கோயில்களுள் பழமையானதும், முதன்மையானதுமான சிதம்பரம் நடராஜர் கோயில், சைவ இலக்கியங்களில் ‘‘கோயில்” என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில், முதலில் தோன்றிய ஆகாயத்தின் அம்சமாக சிதம்பரம் உள்ளது. இவ்வாலயத்தில் நடராஜருக்கு நடத்தப்படும் ஆனித் திருமஞ்சன விழா மிகவும் பிரபலமானதாகும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்து வணங்குவதாக ஐதீகம். நடராஜர் ஒவ்வொரு ஆண்டிலும் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் மட்டுமே திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அனைத்து சிவாலயங்களிலும் கருவறையில் லிங்க வடிவத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான், இவ்வாலயத்தில் மட்டுமே உருவத் தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார்.

தென்னிந்தியாவை ஆண்ட பெரும் அரச மரபினர்களான சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள் இவ்வாலயத்திற்கு பெருங்கொடைகள் அளித்து கட்டுமானம் மற்றும் புனரமைப்புகள் செய்துள்ளனர். முதலாம் பராந்தக சோழன் (பொற்கூரை வேய்ந்த பெருமை படைத்தவர்), முதலாம் ராஜராஜ சோழன், விக்கிரம சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் ஆலயத் திருப்பணிகள் மேற்கொண்டது குறித்த பல்வேறு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரும் (வடக்குக் கோபுரம்), பின் இப்பகுதி ஆட்சியாளர்களாக விளங்கிய பல்வேறு நாயக்க மன்னர்களும் (சிற்றாலயங்கள், பிரகாரங்கள், மண்டபங்கள்) திருப்பணிகள் பல புரிந்துள்ளனர். ஏழு நிலைகளுடன் கூடிய நான்கு பெரும் கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களின் உட்புறங்களில் ஆடல்கலையின் 108  கரணங்களை விளக்கும் சிற்பங்கள் சிறப்பு வாய்ந்தவை. இவ்வாலயக் கோபுரங்களில் அரிய சிவ வடிவங்களும், சிற்பங்களும் நிறைந்துள்ளன. ஆனால், ஆடல்வல்லானின் கற்சிற்பம் எதுவும் கோபுரங்களில் இல்லாமல் சந்நதியினுள் மட்டுமே உள்ளது.

சிவன்-பார்வதி திருமணம், கஜசம்ஹாரமூர்த்தி, துவாரபாலகர்கள், விஷ்ணு துர்க்கை, இணைந்து காட்சியளிக்கும் அஸ்வினி குமாரர்கள், இரு தலைகள் கொண்ட அக்னி தேவன், ஆமை மீது யமுனை, நாட்டிய கரண சிற்பங்கள் குறிப்பிடத்தகுந்தவை.நான்கு புறங்களிலும் மண்டபங்கள், நேர்த்தியான படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள `சிவகங்கை தீர்த்த குளம்’ இன்றும் எழில் குன்றாமல் உள்ளது.

மது ஜெகதீஷ்

Tags : Adalvallan Temple Sculptures ,Anitrumanjanam ,
× RELATED முதற்படைவீடு