×

மின் ஆளுமை திட்டங்களில் தமிழகம் 2ம் இடம் நாமக்கல்லில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா-அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா விரைவில் அமைக்கப்படும் என ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மின்-அலுவலகம் நடைமுறைப்படுத்துதல் குறித்த ஆய்வு கூட்டம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, அரசு கேபிள் டி.வி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், மின் – அலுவலகம் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள் உள்ளிட்ட 22 வெவ்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் 854 அலுவலர்களுக்கு தனியான மின் அஞ்சல் முகவரிகள் உருவாக்கப்பட்டு, அவர்கள் தங்களது மின்னணு கையொப்பம் அளிக்க, மின்னணு பயனர் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. மின் -அலுவலகம் திட்டத்தின் கீழ், வருவாய்த்துறையை சேர்ந்த 277 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு துறை அலுவலர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கைகளால், மின் ஆளுமை திட்டங்களில் கடந்த ஓராண்டுக்கு முன் 17வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது 2வது இடத்தை பெற்றுள்ளது. மிகவிரைவில் முதல் இடம் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்னணு கோப்பு மேலாண்மை அமைப்பு, காகிதம் இல்லா அலுவலகத்தை உருவாக்கவும், விரைவாக நடவடிக்கை எடுக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அலுவலகத்திற்கு உள்ளும், வெளியும் நடைபெறும் நிகழ்நேர தொடர்புகள், முடிவுகள் மேற்கொள்ளும் திறனை மேம்படுத்த, மின்னணு கோப்பு மேலாண்மை அமைப்பு உதவும். இந்த மென்பொருளில் உள்ள தணிக்கை மற்றும் வரலாற்று அம்சங்கள் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கின்றன.தலைமை செயலகத்தின் அனைத்து துறைகளிலும் மின் அலுவலக மென்பொருளை செயல்படுத்த 3,245 ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து துறை தலைமையகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள அலுவலகங்கள் மின்-அலுவலகம் மென்பொருள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள், கோட்ட அளவிலும், வட்டார அளவிலும், கிராம அளவிலும் மின்-அலுவலகம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு அலுவலக தகவல் தொடர்புக்கு பயன்படுத்த பாதுகாப்பான மின்னஞ்சல் சேவை வழங்கப்பட்டுள்து.தற்போதைய மின்னஞ்சல் சேவையை மேம்படுத்தி மாநிலம் முழுவதும் கூடுதலாக 50,000 பயனர்களுக்கு மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, திறன் படைத்த இளைஞர் தொகுப்பாக மாற்ற முடியும், இதற்காக தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என ராஜேஸ்குமார் எம்பி., கோரிக்கை வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்கவும், இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கவும், தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.பின்னர், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தில் இணைய வழி சேவை,  செயல்பாடுகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலர் (சென்னை) சுரேந்திரன், ஆர்டிஓ.,க்கள் மஞ்சுளா, இளவரசி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தேவிகாராணி, பிஆர்ஓ சீனிவாசன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். காப்பீட்டு திட்ட அட்டை பெறும் வசதியை விரிவுபடுத்த வேண்டும்ஆய்வு கூட்டத்தில், ராஜேஸ்குமார் எம்பி., பேசியதாவது: கலைஞர் காப்பீட்டு மருத்துவ திட்டத்தில் அடையாள அட்டை வசதி பெறும் வசதி தற்போது மாவட்ட தலைநகரில் மட்டும் இருக்கிறது. இதை விரிவுபடுத்தி அனைத்து இ-சேவை மையங்களிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அவசரமாக ஆபரேசன் செய்ய வேண்டிய ஒருவருக்கு, காப்பீட்டு அட்டை தாமதமாக கிடைப்பதன் மூலம் அவர் எந்த வகையிலும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இதை விரைவாக விரிவுபடுத்தவேண்டும். சேந்தமங்கலம் தாலுகா பகுதியில் இன்டர்நெட் சேவையில் குறைபாடு இருக்கிறது. இதனால் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை மக்கள் விரைவாக பெற இயலவில்லை. இந்த குறைபாட்டை அமைச்சர் போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதே நிலை தான், கொல்லிமலையிலும் இருக்கிறது. இந்த குறைபாட்டையும் போக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மனோதங்கராஜ், இந்த பிரச்னையை தீர்க்க எல்காட் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொல்லிமலையில் அரசின் அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் கிடைக்கவும் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.ராசிபுரத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எம்பி கோரிக்கைநாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி., அமைச்சர் மனோதங்கராஜிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்:நாமக்கல் மாவட்டத்தில், குறிப்பாக ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில், பொறியியல் பட்டதாரிகள் அதிகளவில் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் (நாமக்கல் தொடங்கி கரூர், மதுரை முதல் கன்னியாகுமரி வரை 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை பெங்களூரு நகரத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ராசிபுரம் வழியாகத்தான் செல்கிறது) சேலம் முதல் நாமக்கல் மற்றும் கோயம்புத்தூர் செல்லும் சாலைகள், சேலம், நாமக்கல் ஆகிய பெரும் நகரங்களுக்கு இடையே ராசிபுரம் அமைந்திருப்பதால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் வகையில், இங்கு மென்பொருள் தொழிற்பூங்கா அமைக்கவேண்டும். மென்பொருள் தொழிற்பூங்காவிற்கு தேவையான தண்ணீர் வசதி முதற்கொண்டு அனைத்து வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக உள்ளது. இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி., தெரிவித்துள்ளார்….

The post மின் ஆளுமை திட்டங்களில் தமிழகம் 2ம் இடம் நாமக்கல்லில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா-அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Information ,Minister ,Manothankaraj ,Namakkal ,Manodhangaraj ,IT Park ,Dinakaran ,
× RELATED அயலகத் தமிழர் நலவாரியத்தில்...