×

தோல் நோயை நீக்கும் பேரையூர் ஈசன்

சிவாலயங்களின் அமைப்பை இரண்டு விதமாகக் கூறுவார்கள். பாடல் பெற்ற தலங்கள் என்கின்ற வரிசையில் இடம்பெறுவது ஒரு வகை. குறிப்பிட்ட பகுதியின் வரிசையில் இடம் பெறுவது இன்னொரு வகை. தேவாரத் தலங்களில் எத்தனையாவது தலம் என்கின்ற முறையும் உண்டு. காவிரியாற்றின் வடகரையில் உள்ள தலங்களில் எத்தனையாவது தலம் அல்லது, தென்கரையில் உள்ள தலங்களில் எத்தனையாவது தலம் என்ற வரிசையும் உண்டு. அந்த அடிப் படையில் ``ஓகைப்பேரையூர்’’ என்ற தலம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரை திருத்தலத்தில் 114வது தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 178வது தலமாக விளங்குகிறது. பேரையூர் என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால் மக்கள் இப்பகுதியை ஓகைப்பேரையூர் என்று வழங்குகின்றனர். வங்காரப்பேரையூர் என்ற பெயரும் வழங்குகிறது.

தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகே உள்ள திருத்தலம் இது. இத்திருத்தலத்தை சுற்றிலும் வேறு சிவாலயங்களும் உண்டு தலையாலங்காடு, திருநாட்டியத்தான்குடி, திருவாரூர், திருவண்டுதுறை ஆகிய பாடல் பெற்ற தலங்களும் அருகே உள்ளன. இத்தலத்தின் புராணப் பெயர் ஓகைப்பேரையூர். அப்பர் பெருமான் இத்திருத்தலத்தை;

 மறையு மோதுவர்
மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட
முடைய கபாலியார்
துறையும் போகுவர்
தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர்
பேரெயி லாளரே.

என்றும்,சொரிவிப் பார்மழை
சூழ்கதிர்த் திங்களை
விரிவிப் பார்வெயிற்
பட்ட விளங்கொளி
எரிவிப் பார்தணிப்
பாரெப் பொருளையும்
பிரிவிப் பாரவர்
பேரெயி லாளரே
என்றும் பாடுகின்றார்.

சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் சிவனாருக்கு, ஜகதீஸ்வரர் என்று திரு நாமம். மிக சிறிய ஊர்தான். ஆனால், போக்குவரத்து வசதிகள் உண்டு. மூன்று நிலை ராஜகோபுரம் நம்மை கம்பீரமாக வரவேற்கும். கிழக்கு நோக்கிய இக்கோயிலின் வெளியே, அருமையான திருக்குளம் உள்ளது. ஒரு தலமானது மூன்று அமைப்புகளால் சிறப்படையும்.

ஒன்று தலம், இன்னொன்று தீர்த்தம், பிறிதொன்று மூர்த்தம் என்று சொல்வார்கள். இத்தலம் மூன்று வகையாலும் பெருமைபெற்றது. பசுஞ்சோலைகளோடு காட்சி
தரும் இவ்வூரின் திருக்குளம், கண்ணுக்கு இனிய காட்சியாக விளங்குகிறது. இந்தத் தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்று பெயர். கிழக்கு நோக்கிய கோயிலின், உள்பிராகாரத்தில் நுழைந்தால் கற்பக விநாயகர் காட்சி தருகின்றார். மேலும், பல சிறிய சந்நதிகள் இருக்கின்றன.

 ஒன்றில் முருகனும், இன்னொரு சந்நதியில் மகாலட்சுமியும், மற்றோரிடத்தில் பைரவரும், அய்யனாரும், சூரிய சந்திரர்களும், துர்க்கையும், லிங்கோத்பவரும் காட்சி தருகின்றார்கள். இத்தலத்தின் தீர்த்தம் வெகு சிறப்பானது. தோல் சம்பந்தப்பட்ட நோயினால் துன்பப்படுபவர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடி ஜெகதீஸ்வரரையும், அமிர்த நாயகி என்ற திருநாமத்தால் அழைக்கப்படும் ஜெகன் நாயகியையும் வணங்கினால், நோய் தீரும் என்ற நம்பிக்கை உண்டு. கருவறையில் ஒளிப்பிழம்பாகக் காட்சி தருகிறார் ஜெகதீஸ்வரர். பார்க்கப் பரவசமாய் இருக்கும். அம்பிகையின் அழகோ நெஞ்சில் நிலைக்கும். ஜெகதீஸ்வரி அல்லவா?

இத்தலத்திற்கு இன்னும் ஒரு சிறப்புண்டு. இங்குள்ள நடராஜப்பெருமான் மிக அற்புதமான எழிலோடு காட்சி தருகிறார். திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகை திருப்பதிகத்தைப் பெற்ற இத்தலத்தில் பேரெயில் முறுவலார் என்ற பெண்மணி, சங்க காலத்தில் வாழ்ந்துவந்தார். அவர் பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும் புறநானூற்றிலும் இடம் பெற்றுள்ளன. அதுசரி இந்த தலத்திற்கு ஏன் பேரையூர் என்று பெயர் வந்தது? ஒரு காலத்தில் சோழர்கள் தமிழகத்தை சிறப்புடன் ஆட்சி செய்தனர். அவர்கள் தலைநகரமாக திருவாரூர் விளங்கியது. பாதுகாப்புக்காக மிகப்பெரிய கோட்டை ஒன்று திருவாரூரை சுற்றிக் கட்டப்பட்டது. அந்தக் கோட்டையின் அருகே எழிலோடு அமைந்த ஊர் என்பதால் “பேர் எயில்” ஊர் என்று பெயர் பெற்றது. அப்பெயர் பிற்காலத்தில் மருவி பேரையூர் என்றாகியது.

 ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி உற்சவம், மார்கழி மாதத்தில் திருவாதிரை உற்சவம் போன்ற மிகச் சிறப்பான திருவிழாக்கள் நடந்துவருகின்றன. முருகர் சஷ்டி விழா அதுவும் சித்திரை சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு திருக்கோயிலிலும் ஒரு தல விருட்சம் சிறப்புடன் இருக்கும். திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் அவசியம் தல விருட்சத்தை வணங்கி வருவது பெரும் புண்ணியம் மட்டுமல்ல, ஆலய வழிபாட்டினை நிறைவாக்கும். அந்த வகையில், இத்தலத்தின் தலவிருட்சமாக நார்த்தை மரம் விளங்குகிறது.
 இந்த ஆலயம் காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். விழாக் காலங்களில், இந்த நேரம் மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

எப்படிச் செல்வது?
திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், கமலாபுரத்திற்கு அடுத்துள்ள மூலங்குடி சென்று இத்தலத்தை அடையலாம். திருவாரூரில் இருந்து மாவூர் கூட்டுரோடு - வடபாதி மங்கலம் சாலை வழியாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.

முனைவர் ராம்

Tags :
× RELATED திருவருட்பாவில் தந்தை மகன் உறவு