×

ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்!

‘‘ஆண்டவரை எக்காலமும் நான் போற்றுவேன்; அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன். எளியோர் இதைக்கேட்டு அக்களிப்பர். என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள். அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப் படுத்துவோம். துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன். அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார். எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர். அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவி அழைத்தான். ஆண்டவர் அவனுக்கு செவி சாய்த்தார். அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவரை விடுவித்துக் காத்தார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.

ஆண்டவரின் தூயோரே அவருக்கு அஞ்சுங்கள். அவருக்கு அஞ்சுவோருக்கு எக்குறைவும் இராது. வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர். ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றிஉங்களுக்குக் கற்பிப்பேன். வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?அப்படி யெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு. வஞ்சக மொழியை உன் வாயை விட்டு விலக்கிடு. தீமையை விட்டு விலகு. நன்மையே செய். நம் வாழ்வை நாடு. அதை அடைவதிலேகருத்தாய் இரு.

ஆண்டவரின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன. அவர் செவிகள் அவர்களதுமன்றாடுதலைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமை செய்வோருக்கு எதிராக இருக்கின்றது. அவர் அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச்செய்வார். உடைந்த உள்ளத்தாருக்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார். நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.

நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல. ‘‘அவை அனைத்தினின்று ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். தீயோரை தீவினையே சாகடிக்கும். நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார். - (திருப்பாடல்கள் 34:1-22)அகந்தையைக் கொன்றுவிடு. துன்பப்படும் மனித குலத்துக்குத் தொண்டு செய். ஏழைகளுக்கும், துன்பப்படுவோர்களுக்கும் உதவி செய்வதற்காக  உனது பணம், நேரம் மற்றும் சக்தியை தியாகம் செய். இது உனக்கு முக்தியும் விடுதலையும் அளிக்கும். கடமையைக் கடமைக்காகவே  செய்ய வேண்டும்.

கடமையைச் செய்ய பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. இதுதான் நல்வாழ்க்கை மற்றும் அறிவுப்பூர்வமான  வாழ்க்கையின் சட்டம். கடமையில் பக்தி என்பது கடமையைச் செய்வதில் தளர்ச்சியில்லா உறுதிகொண்டிருப்பதாகும். கடமையாற்றும்போது உயிரைத் துறக்க நேர்ந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் வாய்ப்பாகக் கருதி கடமையாற்ற வேண்டும். பிறருக்கு நலம் சேர்ப்பதற்காகவும், பிறரை மகிழ்விப்பதற்காகவும்  வாழுங்கள். நீங்கள் எந்த அளவிற்கு சுயநலம் கருதாமல் இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு பிறருக்கு உண்மையாகவே தொண்டு செய்ய முடியும்.
- ‘‘மணவைப்பிரியன்’’

ஜெயதாஸ் பெர்னாண்டோ

Tags : Lord ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்