×

கருணை உள்ளமே கடவுள் இல்லம்

பூமியில் இருப்பவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கருணை காட்டுவான்” என்று கூறினார் நபிகளார். “பேரீச்சம்பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாவது நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்றும் கூறியிருக்கிறார் இறைத்தூதர் அவர்கள். மறுமையில், வெற்றியும் ஈடேற்றமும் கிடைக்க வேண்டும் எனில் ஏழை எளியோருக்கும் தேவையுடையோருக்கும் உதவ வேண்டும். பேராசை காரணமாக யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் பணத்தை மட்டுமே எண்ணி எண்ணி சேமித்து வைப்பவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது இறுதிவேதம் குர்ஆன். “அவன் பொருளைச் சேகரிக்கின்றான். மேலும், அதனை எண்ணி எண்ணி வைக்கின்றான். அவன் கருதுகின்றான், தன்னுடைய பொருள் தன்னிடம் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று. அவ்வாறன்று. சிதைத்துச் சின்னா பின்னமாக்குகின்ற ஓரிடத்தில் அவன் தூக்கி எறியப்படுவான்.” (குர்ஆன் 104-2-4)

சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் இடம் கொடூரமான நரகமாகும். ஆகவே, “பூதம் காத்த புதையல் போல்” பணத்தை அம்பாரமாய்ச் சேமித்து வைப்பதற்குப் பதிலாக, நல்ல காரியங்களுக்கும் ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதற்கும் செலவிட வேண்டும். மறுமையில், இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் நடைபெறும் ஓர் உரையாடலை அண்ணல் நபிகளார் நமக்கு அழகாக விவரித்துள்ளார். மறுமை நாளில் இறைவன் தன் அடியாரை நோக்கி, “உலகில் நான் பசியோடு இருந்தேன். எனக்கு நீ ஏன் உணவளிக்கவில்லை?” என்று கேட்பான்.
பதறிப் போகும் அடியார், “இறைவனே...! உலகிற்கே படியளக்கும் பரம்பொருள் நீயன்றோ? உனக்கு எப்படிப் பசிக்கும்?” என்று வியப்புடன் கேட்பான். “உலகில் இன்ன அடியான் பசியோடு இருந்தான். உன்னிடம் உணவு கேட்டான். நீ அளிக்கவில்லை. அளித்திருந்தால், நீ அங்கே என்னைக் கண்டிருப்பாய்” என்பான் இறைவன். கருணை மிக்க அந்தப் பரம்பொருள் மீண்டும் தன் அடியாரை நோக்கி, “உலகில் நான் தாகத்தால் தவித்திருந்தேன். நீ ஏன் எனக்குத் தண்ணீர் புகட்டவில்லை?” என்று கேட்பான். துடித்துப்போய் அடியார், “இறைவா..! உலகிற்கே தண்ணீர் எனும் அருளை வழங்குபவன் நீயன்றோ? உனக்கு எப்படி தாகம் ஏற்படும்?” என்று கேட்பான். ‘உலகில் இன்ன அடியான் தாகத்தால் தவித்துக்கொண்டிருந்தான். குடிப்பதற்கு உன்னிடம் தண்ணீர் கேட்டான். நீ தரவில்லை. தந்திருந்தால் அங்கே என்னை நீ கண்டிருப்பாய்” என்பான் இறைவன்.
தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகள் போலவே மக்கள் சேவைக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் வாழ்வியல்தான் இஸ்லாம். “ஆதரவற்ற விதவைகளுக்கும் அநாதைகளுக்கும் யார் உதவுகிறாரோ அவர் பகல் முழுக்க நோன்பு நோற்பவர் போன்றும், இரவு முழுக்க நின்று வழிபடுபவர் போன்றும் ஆவார்” என்று கூறியுள்ளார் நபிகளார். கருணை எனும் ஊற்று எந்த உள்ளத்தில் சுரக்கிறதோ அந்த உள்ளம்தான் கடவுள் வாழும் இல்லம். நம் இதயக் கதவுகளை எளியோருக்காகத் திறந்தால் இறைவனின் அருட்கதவுகள் நமக்காகத் திறக்கும்.
- சிராஜுல்ஹஸன்

Tags : God ,
× RELATED தண்ணீர்… தண்ணீர்…