சென்னை: திரைப் படத்தில் நடிப்பதற்கு சில மாதங்கள் இடைவெளி விட்டுள்ள அஜித் குமார், தனது புதிய படத்தை வரும் நவம்பர் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பல நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தனது அணியினருடன் பங்கேற்று வரும் அவர், சர்வதேச அளவில் பல பரிசுகளை வென்றிருக்கிறார். அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ள அஜித் குமார், இத்தாலியின் ஐமோலா சர்க்யூட் என்ற கார் பந்தய சுற்றுப்பாதையில் அமைந்துள்ள, உலக ஃபார்முலா ஒன் சேம்பியன் அயர்டன் சென்னாவின் சிலையில், அவரது பாதங்களுக்கு முத்தமிட்டு மரியாதை செலுத்தினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
உலக கார் பந்தய சாம்பியனாக போற்றப்பட்ட அயர்டன் சென்னா, பிரேசில் நாட்டை சேர்ந்தவர். 13வது வயதிலேயே கார் ரேஸிங்கில் ஈடுபட்ட அவர், 1984 முதல் 1994 வரை 3 ஃபார்முலா ஒன் வேர்ல்ட் டிரைவர்ஸ் சாம்பியன் டைட்டிலை வென்றுள்ளார். 1994ல் இத்தாலியின் ஐமோலோ சர்க்யூட்டில் நடந்த சான் மெரினோ கிராண்ட் பிக்ஸ் கார் பந்தய போட்டியில் பங்கேற்றபோது, எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பிறகு அந்த இடத்தில் அவரது நினைவு உருவச்சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலைக்கு அஜித் குமார் மரியாதை செலுத்தினார். கார் பந்தயத்தில் அயர்டன் சென்னா, அஜித் குமாரின் இன்ஸ்பிரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

