×

சென்னை ஓபன் டென்னிஸ் 17 வயது லிண்டா சாம்பியன்: முதல்வர் வாழ்த்து

சென்னை: சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவில் 17 வயது செக் குடியரசு வீராங்கனை லிண்டா ஃபிரவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்ற இந்த டபுள்யு.டி.ஏ தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நடந்த இப்போட்டியில் மாக்தா லினெட்டுடன் (30 வயது, 67வது ரேங்க்) செக் குடியரசின் லிண்டா ஃபிரவிர்தோவா (17 வயது, 130வது ரேங்க்) மோதினார். இறுதிப் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டதால் அரங்கம் நிரம்பி வழிந்தது.முதல் செட்டில் லிண்டாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து முன்னேறிய மாக்தா 6-4 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். எனினும், 2வது செட்டில் அபாரமாக செயல்பட்ட லிண்டா 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி இளம் வீராங்கனையை திணறடித்த மாக்தா லினெட் 4-2 என முன்னிலை பெற்றாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு கடும் நெருக்கடி கொடுத்த லிண்டா தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 40 நிமிடம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். லிண்டா வென்ற முதல் டபுள்யு.டி.ஏ பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த லிண்டாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுக் கோப்பையை வழங்கி பாராட்டினார்.முன்னதாக நடந்த இரட்டையர் பிரிவு பைனலில் கனடாவின் கேப்ரியலா டப்ரவ்ஸ்கி – லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா – நடேலா சலமிட்சே (ஜார்ஜியா) ஜோடியை மிக எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இப்போட்டி வெறும் 58 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இரட்டையர் பரிசளிப்பு நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கனிமொழி எம்பி, ஆ.ராசா எம்பி, விளையாட்டுத் துறை செயலர் அபூர்வா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மற்றும் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்….

The post சென்னை ஓபன் டென்னிஸ் 17 வயது லிண்டா சாம்பியன்: முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chennai Open Tennis ,Linda Champion ,CM ,Chennai ,Linda ,Chennai Open Singles Division ,International Women's Tennis Series ,Archives Open Tennis ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல், மதுரையில் 5 செ.மீ. மழைப்பதிவு..!!