×

ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையில் அசத்தும் பெண் ஊராட்சி தலைவர்

பெரும்பாலும் கிராம ஊராட்சி என்றால் பொதுமக்களுக்கு அரசு நிதியிலிருந்து தெருவிளக்கு, குடிநீர், சாலை, சுகாதாரம், வீடு கட்டிகொடுத்தல் போன்ற அடிப்படை வசதிகள், கிராமத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றி கொடுப்பதை பார்த்திருப்போம்.ஆனால் பஞ்சாயத்து நிலப்பரப்பில் ஒரு பகுதியை கடல் சூழ்ந்து, உவர்ப்பு நீர், உப்புக்காற்று, கரடு, முரடான மண்வளம் காணப்படும் ராமநாதபுரம்  வாலாந்தரவை கிராம ஊராட்சியில் ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைத்து சாதித்து வருகிறார். பெண் தலைவரான முத்தமிழ்ச்செல்வி. ராமேஸ்வரம் சாலை வழுதூர் மின் நிலையம் பின்புறம் பயன்பாடின்றி கிடந்த சுமார் 5 ஏக்கர் தரிசு நிலத்தை சீரமைத்து, லாபம் தரக்கூடிய காய்கறிகள், கீரை முதலியான  செடிகள், வாழை, கொய்யா போன்ற பழ வகை மரங்கள் நட்டு வளர்த்து வருகின்றார்கள். ஆடு, கறவைமாடு, முயல், நாட்டுக்கோழி உள்ளிட்ட கால்நடைகள், அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு என லாபம் ஈட்டக்கூடிய ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.வாலாந்தரவை ஊராட்சியில் 15 கிராமங்கள் உள்ளன.  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பண்ணை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்தது.  அதன்படி கலெக்டர், அதிகாரிகள் ஆலோசனைப்படி சுமார் 5 ஏக்கர் பயன்பாடற்ற நிலத்தை சீரமைத்து உழவார பணிகளை செய்தோம். இதில் முதன்முதலாக மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ரூ.8.75 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த மாதிரி தோட்டக்கலைப்பண்ணை அமைக்கப்பட்டது.கூடுதல் நிதி உதவியுடன் 4 கிணறுகள், ஒரு குளம், மெட்டல் சாலை வசதி, கால்நடை கொட்டகைகள்,  தொட்டிகள், உரக்குழிகள், அசோலா வளர்ப்பு தொட்டி, மண்புழு உரக்கூடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்தோம். முழுக்கவேநூறு நாள் வேலை பணியாளர்களை கொண்டே பண்ணை உருவாக்கினோம். இன்றுவரை முறையாகவும், பயனுள்ளதாகவும் பராமரித்து வருகின்றோம்.இதில் நாட்டு கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொத்தவரங்காய், கோவக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணி, பாகற்காய் மழை பிரதேசங்களில் மட்டும் வளரக்கூடிய பீட்ருட், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறி செடிகள். பல்வேறு கீரை வகைகள்,  தூதுவளை, ஓமம், துளசி, நொச்சி, செம்பருத்தி, கருவேப்பிலை உள்ளிட்ட மருத்துவகுணம் வாய்ந்த மூலிகை செடிகள் தலா அரை ஏக்கர் என்ற விகிதத்தில் ஒரு பகுதியில் தொடர்ச்சியாக பயிரிடப்பட்டது.இதனை போன்று மற்றொரு பகுதியில் வாழை ரகங்களான நாட்டுப்பழம், சக்கை, ரஸ்தாளி, செவ்வாழை, பூவன்பழம், மொந்தன் உள்ளிட்ட வாழைமரங்கள். கொய்யா, மாம்பழம், சப்போட்டா, மாதுளை, நெல்லி, பப்பாளி, நாவல் உள்ளிட்டவை ரகம் வாரியான மரங்கள் நட்டு வைத்துள்ளோம். இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு, சொட்டுநீர் பாசன முறையில் தோட்டத்தை பராமரித்து வருகின்றோம்.இது போக மண்புழு உரம் தயாரிக்கின்றோம். தோட்டப்பயன்பாட்டிற்கு போக மீதத்தை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கின்றோம். இதனை போன்று தொட்டியில் அசோலா வளர்க்கப்படுகிறது. மேலும் கொட்டகைகள் நாட்டுக்கோழி, கருங்கோழி, வாத்து, முயல் வளர்த்து வருகின்றோம். கடந்தாண்டு ஒருங்கிணைந்த பண்ணையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் மூலம் ரூ.1லட்சத்து 60ஆயிரம் வருவாய் கிடைத்தது. இதனை இந்த பண்ணை வளர்ச்சி மற்றும் பராமரிப்பு பணிகளுக்கே பயன்படுத்தி வருகின்றோம். இன்னும் தரிசாக உள்ள பல நிலங்களை இது போல ஊரட்சிக்கு பயனுள்ளதாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். பணித்தளப் பொறுப்பாளர் பிரியதர்ஷினி கூறும்போது, ‘‘நூறு நாள் பணியாளர்களை கொண்டு இந்த பண்ணை சிறப்பாக பராமரித்து வருகின்றோம். இதற்காக சுழற்சி முறையில் மக்களுக்கு நூறு நாட்கள் பணி வழங்கப்படுகிறது. கிராம மக்களும் தன்னார்வத்துடன் உழவார பணி செய்ய, களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், செடி, கொடி, நாற்று நடுதல், அறுவடை பணிகளை செய்கின்றனர்.  அவர்களே பணம் கொடுத்து விளைவிக்கப்பட்ட  பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். முழுவதும் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துகின்றோம். பூச்சிக்கொல்லிக்கு பதிலாக மாட்டுச் சாணம், ஹோமியம், மீன், கருவாடு கழிவுகளுடன் கூடிய பஞ்சகாவியம் மருந்து தயாரிக்கப்பட்டு அடிக்கப்படுகிறது.  இதனால் இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், கீரை மற்றும் பழங்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது’’ என்றார்.நடுவில் குளம்…தோட்டம் அமைந்துள்ள பகுதியின் நடுவே குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கரை பகுதிகளில் செடி, மரங்கள் இருப்பதால் மழை பெய்தாலோ, தண்ணீர் விடும்போது ஏற்படக்கூடிய மண் அரிமானத்தை தடுக்கும் விதமாக வெளி ஓரங்களில் முருங்கை, அகத்தி மரங்கள் உள்ளன. முருங்கைக்காய் பெரிய அளவில் இருப்பதால் நல்ல விலைக்கு செல்கிறது. இதனை போன்று அகத்திக்கீரை விற்பனையும் அதிகரித்து வருகிறது.வெட்டிவேர்…கண்மாய் கரையின் உள்வாய் பகுதியில் இடைவெளிகளை பின்பற்றி வெட்டி வேர்செடிகள் பயிரிடப்பட்டுள்ளது. வெட்டி வேர் மருத்துவகுணம் வாய்ந்தது என்பதால் நீர்க்கடுப்பு, தேக எரிச்சல், வயிற்று கடுப்பு, மூட்டு வலி, வயிற்றுபுண், தாகம், சளி, காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்டவற்றிற்கு மருந்தாகவும், நறுமணப் பொருட்கள், அழகு சாதனப்பொருள் மற்றும் மாலை தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இதனை போன்று ஆயில், பவுடர் போன்றவற்றிற்கு அதிகமாக பயன்படுத்துவதால் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது.அசோலா உற்பத்தி…பாசி வகையை சேர்ந்த உயிரினமான அசோலா வளர்க்கப்படுகிறது. குறைந்த செலவு, குறைந்த பராமரிப்பில் அசோலா ஒருதொட்டியில் வளர்க்கப்படுகிறது. இதில்15 நாட்களில் 30 முதல் 40 கிலோ உற்பத்தியாகிறது. இதனை அறுவடை செய்யும்போது இரண்டு பங்கை மட்டும் அறுவடை செய்து, ஒரு பங்கு விளையவைக்க விடப்படுகிறது. சூரிய ஒளி நேரடியாக விழாத அளவில் உள்ள இந்த தொட்டியில் 10 நாளுக்கு ஒருமுறை பசுஞ்சாணம் மட்டும் கரைத்து உரமாக இடப்படுகிறது. பூச்சி தொல்லையை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் கலந்து தெளித்து பராமரிக்கப்படுகிறது. கோழிகள் மற்றும் கறவைமாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதால் நல்ல விலைக்கு செல்கிறது.கால்நடை விற்பனை கிடையாது.கால்நடை வளர்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி, சேவல், வாத்துகள், கருங்கோழிகள், முயல், ஆடு, மாடு, கன்றுகள் வளர்க்கப்படுகிறது. இவற்றிற்கு இயற்கையான உணவுகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. கோழி முட்டைகள் அடவு வைத்து குஞ்சு பொறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனை போன்று மற்ற கால்நடைகளும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அவற்றை இனப்பெருக்க அபிவிருத்தி செய்து எண்ணிக்கையை பெருக்கும் எண்ணம் இருப்பதால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு விற்பனை செய்வது கிடையாது. 11 யூனியன்களில் 429 கிராம ஊராட்சிகள் உள்ளன. யூனியனுக்கு ஒரு ஒருங்கிணைந்த தோட்டக்கலைப்பண்ணை என்ற விகிதத்தில் 11 பண்ணைகள் அமைக்கப்பட்டது. ஆனால் வாலாந்தரவை பண்ணை ஒன்று மட்டுமே அரசின் விதிமுறை, ஆலோசனைகளின் படி முறையாக பராமரிக்கப்பட்டு லாபத்துடன் இயங்கி வருகிறது.தொடர்புக்கு: தலைவர் முத்தமிழ்ச்செல்வி 94872 76161.பணித்தள பொறுப்பாளர் பிரியதர்ஷினி 90038 20156தொகுப்பு : படங்கள் : மு.சுப்ரமணியசிதம்பரம்

The post ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையில் அசத்தும் பெண் ஊராட்சி தலைவர் appeared first on Dinakaran.

Tags : Asathum Panchayat ,President ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!