×

ஐராவதத்துக்கு சாப விமோசனம் தந்த ஐராவதீஸ்வரர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது ஆனையூர். இங்கு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஐராவதீஸ்வரர் ஆலயம் உள்ளது. மூலவராக ஐராவதீஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவபெருமான் உள்ளார். மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலில் மீனாட்சியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. விநாயகர், முருகன், ஐராவதம், ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் பண்டைய கால கட்டிடக் கலைக்கு சான்றாக உள்ளன. கோயிலின் தெற்கே குளம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோயில் உள்ளது.

தல வரலாறு

ஒரு முறை சிவபெருமானுக்கு பூஜை செய்த துர்வாச முனிவர், பூஜை பிரசாதத்தை இந்திரனுக்கு அளித்தார். இந்திரன் அதை அலட்சியமாக வாங்கி, தனது வாகனமான ஐராவதம் யானையின் மீது வைத்தார். அந்த பிரசாதம் கீழே தவறி  விழுந்த போது, ஐராவதம் அதை தனது காலால் மிதித்தது.இதனால் கோபமடைந்த துர்வாசர், ‘சிவ பிரசாதத்தை மதிக்காத இந்திரனின் பதவி பறி போகட்டும். ஐராவதம் காட்டு யானையாக மாறட்டும்’ என்று சாபமிட்டார். தனது தவறை உணர்ந்த ஐராவதம், தனக்கு சாப விமோசனம் தருமாறு துர்வாசரிடம் வேண்டியது. மனமிரங்கிய துர்வாசரும், ‘பூலோகத்தில் கடம்பவனத்திற்கு சென்று, அங்கு சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் அக்னீஸ்வரமுடையாரை வணங்கி வழிபடு. சாபவிமோசனம் கிடைக்கும்’ என்று  தெரிவித்தார்.

துர்வாச முனிவர் சாபத்தின்படி காட்டு யானையாக மாறிய ஐராவதம், தற்போது ஆனையூர் என்று அழைக்கப்படும் திருக்குறுமுல்லூர் கடம்பவனப்பகுதிக்கு வந்தது. அங்கு வனப்பகுதியிலிருந்த அக்னீஸ்வரமுடையாரை வழிபட்ட ஐராவதம், சாப விமோசனம் பெற்றது. தன்னை வழிபட்ட ஐராவதத்துக்கு சாபவிமோசனம் அளித்ததால் அக்னீஸ்வரமுடையார் ‘ஐராவதீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.இந்த நிகழ்வுக்கு பின்னர் திருக்குறுமுல்லூர் என்று அழைக்கப்பட்ட இப்பகுதி ‘ஆனையூர்’  என்று அழைக்கப்பட்டது. ஐராவதம் பாவ விமோசனம் பெற்ற அடையாளமாக கடம்ப மரத்தில் செய்யப்பட்ட  ஐராவத சிலை கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது என்பது புராணம்.
பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
*********
சிவராத்திரி, பிரதோஷம், ஐப்பசி மாத அன்னாபிஷேகம், கார்த்திகை உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்களாகும். அன்றைய தினங்களில் நடக்கும் விசேஷ பூஜைகளில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இங்கு மூலவரை வழிபட்டால் பாவங்கள் விலகும் என பக்தர்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள், இறைவனுக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சுயம்புலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தும் வணங்குகின்றனர். சித்திரை மற்றும் ஆடி மாத பிரதோஷ தினங்களில் கருவறையின் மீது சூரிய ஒளிபடுவது, சூரியபகவானே நேரில் வந்து மூலவரை தரிசனம் செய்வது போன்ற சிறப்பை பெற்றுள்ளது. கோயில் நடை காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி வரை 8.30 மணி வரையிலும் திறந்திருக்கிறது.


Tags : Iravathiswarar ,
× RELATED தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்...