×

பந்தலூர் குரூஸ் மலையை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பந்தலூர்: பந்தலூர் குரூஸ் மலையை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் பந்தலூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இங்கு சுற்றுலா தளங்கள் எதுவும் இல்லை. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் என 6 தாலுகாக்கள் உள்ளன. மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் பந்தலூர் தாலுகா விளங்குகிறது. பந்தலூர் தாலுகாவில்  தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டம் கழகம் (டேன்டீ) மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள், கூட்டுறவு மற்றும் அரசு, தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள். ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களை இயற்கை சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதற்கு    பந்தலூரில் சுற்றுலா தளங்கள் எதுவும் இல்லாததால் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரி  மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுமுறை தினங்களில் பொழுது போக்கு அம்சங்களும் இல்லை.இதனால், அருகில் உள்ள கேரள மாநிலம் வயநாடு மற்றும் ஊட்டி, கோத்தகிரி குன்னூர் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுலாதளங்களை கண்டு ரசித்து பொழுதுபோக்கி வருகின்றனர். ஆண்டுதோறும் தமிழக அரசு மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், குன்னூரில் பழ கண்காட்சியும், உதகையில் மலர் கண்காட்சியும், கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும் நடத்தி வருகின்றனர் இதன்மூலம், ஏராளமான பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், அரசுக்கும் வருமாய் கிடைக்கிறது. ஆனால், பந்தலூரில் சுற்றுலா தளங்கள் இல்லாததால் பந்தலூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள குருஸ்மலை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பந்தலூர் குரூஸ் மலையில் இருந்து பார்க்கும்போது அங்கிருந்து கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரி போன்ற பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.இயற்கை எழில் கொஞ்சும்  காட்சியாக இருக்கும் இந்த குரூஸ் மலைக்கு வருடம்தோறும் புனித வெள்ளி  அன்று ஏராளமான கிறிஸ்தவர்கள் நடந்தே சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலுவையை  வழிபட்டு வருகின்றனர். குரூஸ் மலையை சுற்றுலா தளமாக தமிழக அரசு மாற்றினால் இப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்கு சென்று வருவார்கள்.எனவே, பந்தலூர் குரூஸ் மலையை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பந்தலூர் பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இது குறித்து கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறுகையில்,“இப்பகுதியில் உள்ள மக்கள் தேயிலை தோட்டங்களை வாழ்வாதாரமாக கருதி வருகின்றனர். படித்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். ஒரு சில இளைஞர்கள் வேலைவாய்பு இல்லாமல் கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வேலை தேடி செல்கின்றனர். பந்தலூரில் குரூஸ்மலை உள்ளிட்ட ஏராளமான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை சுற்றுலா தளமாக அரசு மாற்றினால் பலருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மாவட்டத்தின் பிறபகுதியில் கோடைவிழா நடத்துவது போல் பந்தலூரிலும் கோடை விழாக்கள் வருடம்தோறும் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம்  நடத்த வேண்டும்’’ என்றார்….

The post பந்தலூர் குரூஸ் மலையை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bandalur Cruise mountain ,Bandalur ,Bandalur Cruise Mountains ,
× RELATED பந்தலூர் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்