×

திருமுடி முதல் திருவடி வரை

திருமுடி
     திருச்சியில் தேன் நிறைந்த பூக்களைத் தன் தலையில் சூடியவள் எனும் பொருள்படும் வகையில் மட்டுவார்குழலி எனும் திருப்பெயரில் அம்பிகை வணங்கப்படுகிறாள்.
    திருவாலங்காட்டில் வண்டுகள் சூழ்ந்த பூக்களைச் சூடியவள் எனும் பெயர் கொண்ட வண்டார் குழலியாய் அம்பிகை அருள்புரிகிறாள்.
    திருக்கூடலையாற்றில் சுருண்ட கூந்தலை உடையவளாக பிரிகுழல் அம்பிகை எனும் பெயரில் தேவி அருள்கிறாள்.
கண்கள்
 கோடியக்கரை குழகர் கோயிலில் மை எழுதிய பெரிய கண்களை உடையவள் எனும் பொருளில் மையார் தடங்கண்ணியை தரிசிக்கலாம்.
    திருமால்பூரில் அஞ்சனம் எழுதிய கண்களைக் கொண்ட அஞ்சனாட்சியை தரிசிக்கலாம். காஞ்சியில் ஆதிசங்கரர் சக்ரத்தில் நிறுவிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்வரும் இந்த அஞ்சனாட்சியின் பீடத்தில் நின்றருள்கிறார்கள்.
    வடுகூரில் பிளந்த மாவடுவைப் போன்ற கண்களைக் கொண்டவள் எனும் பொருளில் வடுவகிர்க்கண்ணம்மை அருளாட்சி புரிகிறாள்.
வாய், மொழி
 கரும்பினும் இனிமையான சொல்லுடையவள் என்னும் பொருளில் கரும்பன்னசொல்லம்மையை திருப்புறம்பயத்தில் தரிசிக்கலாம்.
    வீணையையும் பழிக்கும் நாதக்குரலுடையாளாக வேதாரண்யத்தில் யாழைப்பழித்த மொழியாள் அருள்புரிகிறாள். இதனாலேயே இத்தல சரஸ்வதியின் கையில் வீணை இல்லை.
    குயில் போன்ற குரல் உடையவள் எனும்படி குயில்மொழியம்மையாக திருஇடும்பை மாகாணத்தில் தேவி கோலோச்சுகிறாள்.
புன்னகை
     முல்லைப்பூ போன்ற பற்களைக் கொண்ட தவள வெண்ணகை அம்மையை திருப்பாலைத் துறையில் தரிசிக்கலாம்.
தோள்
     திருப்பந்தணைநல்லூரில் காம்பனதோளி எனும் திருப்பெயரில் அன்னை அருள்கிறாள்.
    வேயுறுதோளியம்மை எனும் பெயரில் திருநீடூரில் தேவியை தரிசிக்கலாம்.
மார்பகங்கள்
     உண்ணாமுலையம்மை எனும் பெயரில் இறைவி திருவருள்புரியும் தலம் திருவண்ணாமலை.
    திருவோத்தூரில் இளமுலைநாயகி எனும் பெயரில் அம்பிகை அருள்கிறாள்.
    திருநள்ளாறில் போகமார்த்தபூண்முலையம்மை எனும் பெயரில் அம்பிகையை தரிசிக்கலாம்.
    திருவாவடுதுறை தலத்தில் ஒப்பிலாமுலையம்மையான அம்பிகை அருளாட்சி செய்கிறாள்.
கை
 திருவைகாவூர் தலத்தில் வளையல்களைப் பூண்ட வளைக்கைநாயகியாய் பராசக்தி பொலிகின்றாள்.
இடை
 வடதிருமுல்லைவாயிலில் கொடி போன்ற இடையைக்கொண்ட கொடியிடைநாயகி தன் தண்ணருளைப் பரப்பிக்கொண்டுள்ளாள்.
சிறிய இடையைக்கொண்ட சிற்றிடை நாயகியை திருஇடையாற்றில் தரிசிக்கலாம்.
திருவடி
     திருவாரூர் பரவையுன்மண்டலி தலத்தில் பஞ்சினும் மெல்லிய அடிகளை உடையவள் எனும் பொருள்படும்படி பஞ்சின்மெல்லடியம்மையை தரிசிக்கலாம்.
- ராதா கிருஷ்ணன்

Tags : Thirumudi ,Thiruvadi ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ...