×

அளவிலா ஆற்றல் தரும் அகிலாண்டேஸ்வரி

இடையாத்தூர் என்ற ஊர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம், புதுக்கோட்டைக்கு மேற்கில் சுமார் 30கி.மீ.தொலைவில் பொன்னமராவதி வடக்கில், சுமார் 15.கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இடையாத்தூர் என்றால், ``இடையிலுள்ள ஆத்தூர்’’ எனப் பொருள் படும். அதாவது காரையூருக்கும், இன்றைய மறவா மதுரைக்கும் இடையில் இடையாத்தூர் கண்மாயிலிருந்து ஓடைபோல் வடக்கு நோக்கி நீர் ஓடும் பாதை உள்ளதால், இடையாற்றூர் எனப் பெயர் ஏற்பட்டு தற்போது இடையாத்தூராக மருவி இருக்கலாம்.இவ்வூரின் தென்புறத்தில், ‘‘தான்தோன்றீஸ்வரர்” என்ற சிவன் கோயில் உள்ளது. இச்சிவன் கோயில், கிழக்குப் பார்த்த கோயிலாக உள்ளது. ஆனாலும், கோயிலின் வடபுறத்து வாயில் வழியாகவே கோயிலுக்குச் செல்ல வேண்டும். இவ்வாயில் வழியாக செல்லும்போது, முதல் பிரகாரத்தின் இடது புறத்தில் கிழக்குப் பார்த்த நிலையில் அம்மனுக்கு ஒரு தனிக் கோயில் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகிய அமைப்பில் உள்ளது.

அம்மன் உலக மக்கள் அனைவரையும் ரட்சிப்பவள் என்ற பொருளில் `அகிலாண்டேஸ்வரி’ என்று அழைக்கப்படுகிறாள். இக்கோயிலுக்கு தென்புறத்தில் உள்பிரகாரத்திற்குள் செல்வதற்கு ஒரு வாசல் உள்ளது. இரண்டாம் பிரகார நுழைவு வாயில், உள்பிரகார நுழைவு வாயில் என இரண்டு வாயில்களின் மேல் ராஜகோபுரம் போன்ற சிறிய கோபுரங்கள் உள்ளன. சுவாமி கோயில் உள்பிரகாரத்தில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகிய வற்றோடு காணப்படுகிறது. மகாமண்டபத்திற்கு முன்பாக முன் மண்டபம் தூண்களைக் கொண்டும் மேற்கூரை மூடப்பட்டவையாக இருந்தாலும், தற்போது மேற்கூரை கற்கள் சிதில மடைந்த நிலையில் தூண்கள் மட்டும் நெஞ்சார்ந்து நிமிர்ந்து நிற்கின்றன.

கல்வெட்டுச் செய்திகள்: ``கோவி இராஜகேசரி’’ என்ற முதலாம் குலோத்துங்க சோழனின் 50வது ஆட்சியாண்டு அதாவது கி.பி 1075ஆம் ஆண்டின் கல்வெட்டே காலத்தால் முந்திய கல்வெட்டாகும். மேற்கண்ட கல்வெட்டு இரட்டபாடி கொண்ட சோழவளநாடு என்ற கோனாட்டு இடையாற்றூர் திருத்தான்தோன்றீஸ்வரர் முடையாருக்கு என்பதால் இக்கோயில் இறைவன் ‘‘தான்தோன்றீஸ்வரர்” என்று அழைக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. தென்புறம் சுவரிலுள்ள ‘‘கோப்பரகேசரி” என்ற மூன்றாம் குலோத்துங்க சோழனின் 29வது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் தான்தோன்றீஸ்வரமுடையாருக்கு அமுதுபடி நிமந்தங்களுக்கு இடையாற்றூர் அகவயல், முள்ளிவயல் ஆகிய வயல்களிலுள்ள நிலங்களின் இறை, கடமை, அந்தராயம் ஆகிய வரிகளை நீக்கி கோயிலுக்கு கொடுத்தமையைத் தெரிவிக்கிறது.

சுவாமி கோயிலின், கீழ் புறம் சுவரிலுள்ள எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவரது 16வது ஆட்சியாண்டில், அதாவது கி.பி.13ம் நூற்றாண்டு காலத்தில் கோனாட்டு நாட்டவர் திருக்கொடுங்குன்ற முடைய நாயனாற் என்ற பிரான்மலையிலுள்ள இறைவனும், நல்லமங்கையார் என்ற அம்மனும் சுந்தரபாண்டியன் பெயரால் நடைபெறக்கூடிய சந்திப்பூசைக்கும், திருவிழாவிற்கும் சுந்தரபாண்டியனின் திருமுகப்படி இடையாற்றூர் வயலில் வரி நீக்கி நிலக் கொடை அளிக்கப்பட்டது. சுவாமி கோயிலின் வடபுறம், சுவரிலுள்ள 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டுஎனக்கருதக்கூடிய பிற்கால கல்வெட்டு சாமசந்தி பூசையில் தான்தோன்றீஸ்வரர்க்கு உணவு படைப்பதற்கும், நந்தவனம் வைப்பதற்காகவும் வெட்டப்பட்ட கல்வெட்டாகும்.
- புதுகை
பொ.ஜெயச்சந்திரன்

Tags : Akilandeswari ,
× RELATED பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தர் குரு பூஜை விழா