×

செல்வத்தையும் ஞானத்தையும் தந்தருவாள் ராஜமாதங்கி

சியாமளா நவராத்திரி
02-02-2022 முதல் 10-02-2022 வரை

பராசக்தி எடுத்த தசமகாவித்யா அவதாரங்களில் ஒன்பதாவதான மாதங்கி, உபாசகர்களால் பெரிதும் போற்றி வணங்கப்படுகிறாள்.லலிதா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் மாதங்கி. அமுதமயமான கடலின் நடுவில் ரத்தினத் தீவில், கற்பக மரங்கள் செறிந்த காட்டில், நவமணிகளால் இழைக்கப்பட்ட மண்டபத்தினுள், தங்க சிம்மாசனத்தில் இந்த தேவி அமர்ந்தருள்கிறாள். மதங்க முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு மகளாக அவதரித்ததால் மாதங்கி எனப் பெயர் பெற்றாள். மகிஷாசுர வதத்தின்போது இவள் சும்பநிசும்பர்களை வதைத்தவள் என சப்தசதீ பெருமையுடன் போற்றுகிறது. மகாதிரிபுரசுந்தரி, பண்டாசுரனுடன் வதம் செய்ய முற்பட்டு நிகழ்த்திய பெரும்போரில், மாதங்கி, விஷங்கன் எனும் அசுரனை அழித்தாள் என லலிதோபாக்யானமும் இவள் புகழ் பாடுகிறது. வாக்விலாசத்திற்கும் அறிவின் விருத்திக்கும் இவள் அருள் கட்டாயமாகத் தேவை. புலவர்களை மன்னர்களுடன் சரியாசனத்தில் வைக்கக் கூடிய வல்லமை இவளுக்கு உண்டு. உபாசகர்கள் உள்ளத்தில் பசுமையை, குளிர்ச்சியைப் பெருக்கெடுத்து ஓடச்செய்பவள் இத்தேவி. இவளை ராஜசியாமளா என்றும் அழைப்பர்.

மாதங்கியின் மந்திரம், 98 எழுத்துக்கள் கொண்டதாகும். மாதங்கி மந்திரம் ஒருவருக்கு சித்தியாகிவிட்டால் உலகில் உள்ள மற்ற வேத மந்திரங்கள் உட்பட அனைத்துமே ஒரு முறை படிப்பதாலேயே சித்தியாகும் என மதங்கமனுகோசம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவமே மாதங்கி. லலிதாம்பிகையின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் இவள், அந்த லலிதா பரமேஸ்வரிக்கே ஆலோசனை கூறும் மந்த்ரிணீயானவள். இவளின் ரதம் கேயசக்ர ரதம் என அழைக்கப்படுகிறது. கேயம் எனில் பாட்டு. கேயசக்ர ரதம் அசைந்து வரும்போது, அதன் ஒலி, சங்கீதமாய் கானம் இசைக்கும்.எப்போதும் தவழும் புன்முறுவலுடனும் சுழன்று மயக்கும் விழியுடையவளாக இத்தேவி விளங்குகிறாள். கதம்ப மலர்கள் தேவியின் கூந்தலை அலங்கரிக்கும் பேறு பெற்றன. மடியில் வீணையை வைத்துக்கொண்டு கீழ் இரு திருக்கரங்களால் அதை மீட்டிக்கொண்டும் மேலிரு கரங்களில் சம்பா நெற்கதிர்களையும் கரும்பு வில்லையும் ஏந்தியுள்ளாள். மற்ற நான்கு திருக்கரங்களில் கிளி, சாரிகை ஆகிய பறவைகளும் பாசமும் அங்குசமும் அலங்கரிக்கின்றன.

திருமுகம் பொலிவாய்த் துலங்க, நெற்றியில் கஸ்தூரி திலகம் பளிச்சிடுகிறது. திருமுடியில் சந்திர கலையுடன் கூடிய கிரீடம் மின்னுகிறது. சர்வாலங்கார பூஷிதையாக தேவி பொலிகிறாள். மரகத மணியின் நிறத்தைப் போல ஜொலிக்கும் பச்சை நிற மேனியள். வலது பாதத்தை மடித்து, இடது பாதத்தை தொங்கவிட்ட நிலையில் அருள்பவள். செவிகளில் சங்கினால் ஆன காதணிகளை அணிந்துள்ளாள். சில நூல்களில் பனை ஓலையால் ஆன காதணிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இவள் கரங்களில் உள்ள நெற் பயிர் உலகியல் இன்பங்களின் தொகுதியையும் கரும்பு வில், அழகு சாதனங்களையும், பாசம், ஆகர்ஷண சக்தியையும் சாரிகை, உலகியல் ஞானத்தையும் கிளி, ஆன்மிக அறிவையும் வீணை, பர - அபர போகங்களையும் காட்டுகின்றன. இத்தேவியின் வழிபாட்டில் உலகியல் இன்பம் துறக்கப்படுவதில்லை. மாதங்கி உபாசனை சகல கல்வி கேள்விகளிலும் தேர்ச்சியை அதி சீக்கிரத்தில் அருளும்; விசேஷமான இன்பக் கலைகளில், நுண்கலைகளில், இன்னிசைக் கலைகளில் உபாசகனுக்கு வெற்றி எளிதில் கிட்டுகிறது.
ஆனால், உலகியலை ஒரு சேறுபோலச் செய்துகொண்டு அந்தச் சகதியில் வீழ்ந்தாலும் முற்றிலும் அதிலேயே மூழ்கிவிடுவதில்லை. உலகியலின் பற்றிலேயே பேரின்பத்தைக் கண்டு அப்பேரின்ப வாழ்வில் எக்கணமும் வழுவாமல் இருப்பதே இந்த மாதங்கி உபாசனையின் ரகசியமாகும். மாதங்கி, சிருங்கார முக்கியத்துவம் வாய்ந்த தேவி. சிருங்காரம் என்பது உலகியலில் கூறப்படும் காமவெறியல்ல. காளிதாசனை சிருங்கார பட்டாரகன் என்று அழைப்பர். மற்றவர்கள் பார்வையில் உலகியல் இன்பத்தில் உழல்பவன் போல் தோன்றினாலும் உண்மையில் எக்கணமும் பர இன்பத்தினின்றும் வழுவாத வாழ்வுடையவனே உண்மையான சிருங்காரத்தின் நுட்பத்தை அறிந்தவனாவான். இந்த சிருங்காரம் உமாமகேஸ்வரரிடமும், லட்சுமி நாராயணனிடமும் விளங்குகிறது.

இத்தேவி மதங்க முனிவரின் புதல்வியாக அவதரித்ததால் மாதங்கி என அழைக்கப்படுகிறாள். பிரளய காலத்தில் மீண்டும் உலக ச்ருஷ்டி ஏற்படுவதற்காக, நான்முகனும், திருமாலும், ருத்திரரும் பரமேஸ்வரனைக் குறித்து தவம் புரிந்தனர். அச்சமயம் நான்முகன் பரமேஸ்வரனை மதங்கம் எனும் யானை வடிவாக தியானம் செய்ய, அப்போது அவர் மனதிலிருந்து உதித்த முனிவரே மதங்கர். அவரும் பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்ய விரும்பினார். காணும் இடமெங்கும் நீராக இருந்ததால் எங்கு தவம் செய்வதென்று அவருக்குப் புரியவில்லை. அப்போது அங்கு வந்த நாரத முனிவர் சுவேத வனம் என்று அழைக்கப்படும் திருவெண்காட்டில் அவரை தவம் புரியுமாறு பணித்தார். ஈசனுடைய சூலத்தால் தாங்கப்பட்டிருந்ததால் அந்த இடம் ப்ரளயத்தால் அழியாதிருந்தது.

நாரதரின் உத்தரவுப்படி அங்கு தவம் செய்த முனிவரின் தவத்திற்கு மன்மதன் இடையூறு செய்தான். என் தவத்திற்கு இடையூறு செய்த நீ சிவனின் நெற்றிக்கண்ணால் சாம்பலாவாய் என மன்மதனை மதங்கர் சபித்தார். அடிபணிந்த மன்மதனிடம், நீ கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணரின் மகனாய் ப்ரத்யும்னன் எனும் பெயருடன் பிறந்து மீண்டும் சரீரம் பெறுவாய் என ஆசீர்வாதம் செய்தார். அதே போல் அவருடைய தவத்தை சோதிக்க எண்ணிய திருமாலும் மோகினி உருக்கொண்டு வந்தார். அவரையும் சபிக்க மதங்கர் முற்பட்டபோது திருமால் தன் மோகினி வடிவைக் களைந்து தரிசனம் தந்தார். அதில் மனமகிழ்ந்த மதங்கர், அந்த இடத்திலேயே மோகினி வடிவாகவும், திருமால் வடிவாகவும் இருந்து கொண்டு என்றென்றும் பக்தர்களுக்கு அருட்பாலிக்க வேண்டுமென்றும் தமக்கு யோக மார்க்கத்தை அருள வேண்டும் என்றும் வேண்டினார். முனிவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட திருமாலும் பதரியில் தர்ம ப்ரஜாபதியின் புத்திரராய் அவதரித்தபோது அம்முனிவருக்கு யோக மார்க்கத்தை உபதேசித்தார்.

மதங்க முனிவர் யோகத்தில் இருந்தபோது அவரின் இதயத்தில் மகாகணபதி தோன்றி அஷ்டாங்க சித்தியை அருளினார். பரமேஸ்வரன் அம்பிகையுடன் நேரில் மதங்கருக்கு காட்சியருள பேரானந்தம் கொண்டார் மதங்கர். பரமேஸ்வரனிடம் தான் தவம் செய்த இடம் தன் பெயரிலேயே மதங்காஸ்ரமம் என்ற பெயருடன் விளங்கவேண்டும் என்றும், இங்கு பிறந்தாலும், வளர்ந்தாலும், இறந்தாலும் பக்தர்களுக்கு சதுர்வித புருஷார்த்தங்களையும் அருள மதங்கேசர் எனும் பெயரில் ஈசன் லிங்கவடிவில் விளங்க வேண்டு மென்றும், பராசக்தியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென்றும் பிரார்த்தித்தார். மேலும் அவ்வாறு பிறக்கும் தன் மகளை பரமேஸ்வரன் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும் வரம் கேட்டார். அப்போது அம்பிகை மதங்கரிடம் நான் சித்ஸ்வரூபிணி, நான் உனக்கு மகளாகப் பிறக்கமுடியாது. என் வடிவமான மந்த்ரிணீ தேவி உமக்கு மகளாகப் பிறந்து பரமேஸ்வரனை அடைவாள். ச்வேதாரண்யேஸ்வரரை மணம் புரிவாள் என அருளினாள்.

அதன்படி ஆடிமாதம் வெள்ளிக்கிழமை கூடிய நல்லநாளில் விடியற்காலை சர்வாலங்கார பூஷிதையாய் பெண் குழந்தை வடிவில் ஆவிர்பவித்தாள் மந்த்ரிணீ தேவி. விடியற்காலையில் நீராட நீராடும் துறைக்கு வந்த மதங்க முனிவர், பேரொளியுடன் திகழும் பெண்குழந்தையைக் கண்டு ஆனந்தம் கொண்டு தன் ஆஸ்ரமத்திற்கு அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று தன் மனைவி சித்கலையிடம் தந்தார். இருவரும் அக்குழந்தையை சீராட்டி பாராட்டி பாலூட்டி வளர்த்து வந்தனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த மாதங்கி, பருவ வயதை அடைந்ததும் அவளுக்குத் திருமணம் செய்ய மதங்கமுனிவர் முடிவு செய்தார். பல தேவர்கள் முனிவர்களுடன் மதங்கேஸ்வரரிடம் சென்று மாதங்கியை திருமணம் செய்து  தங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ள சித்திரை மாதம் சுக்ல பட்சம், சப்தமி திதி கூடிய நன்னாளில் தான் மாதங்கியை திருமணம் புரிவதாக மதங்கேஸ்வரர் திருவாய் மலர்ந்தருளினார்.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடந்தன. மாதங்கி தேவலோக சிற்பியான விச்வகர்மாவின் மூலம் 7 ஆவரணங்கள் கொண்ட யந்த்ர மயமான மாதங்கிபுரத்தை திருமணத்திற்காக சிருஷ்டித்தார். மதங்கமுனிவரும் தேவர்கள் சகிதமாய் மதங்கேஸ்வரரை அழைக்க அவரும் தன் சிவகணங்களுடன் அங்கு வந்து தங்கினார். மறுநாள் வேத கோஷங்களும், மங்கள வாத்தியங்களும் முழங்க மாதங்கி தேவியை மதங்கேஸ்வரர் திருமணம் செய்துகொண்டார். அந்த ஆனந்த வைபவத்தைக் கண்டு பேரானந்தம் கொண்ட மதங்கர் பரமேஸ்வரனிடம் தாங்கள் எப்போதும் இத்திருக்கோலத்திலேயே இங்கு காட்சி தந்தருள வேண்டும் என பிரார்த்திக்க அவருடைய இதயக் கமலத்தில் என்றும் திருமணக் கோலத்திலேயே காட்சி தந்து கொண்டிருக்கிறார் பரமேஸ்வரன். இந்த மாதங்கியே ராஜமாதங்கி எனப் போற்றப்படுகிறாள்.

பண்டாசுரனுடன் போரிட கிளம்பும்போது லலிதா தேவியின் கரும்பு வில்லினின்றும் உதித்தவள் மாதங்கி. இத்தேவியின் ரதம் கேயசக்ர ரதம் என அழைக்கப்படுகிறது. ரதம் ஓடும் போது
ஸ ரி க ம ப த நி எனும் ஏழு ஸ்வரங்களின் ஒலியும் அதில் இனிமையாக எழும். எப்போதும் சங்கீத யோகினிகளால் சூழப்பட்டிருப்பவள் இவள். லலிதாம்பிகையின் இருப்பிடமான புரத்தில் உள்ள பத்மாடவி எனும் தாமரை மலர்கள் பூத்த தடாகத்தின் மத்தியில் உள்ள சிந்தாமணி கிரஹத்தின் கிழக்கு வாயிலில் வெள்ளியாலான பவனமே இவளின் இருப்பிடம். இதைச்சுற்றி கதம்ப வனம் உள்ளது. அதிலிருந்து மாதங்கிக்குப் பிடித்தமான காதம்பரீ எனும் தேன் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும். இத்தேவியை உபாசிப்பவர்கள் கதம்ப மரத்தை வெட்டக்கூடாது. இசைக்கருவிகள், நாட்டியம், சங்கீதக்
கச்சேரி, பாடகர்களை நிந்திக்கக்கூடாது. காளி எனும் சொல்லை உச்சரிக்கக்கூடாது என்பது விதிகளாகும்.

இந்த மாதங்கியின் யந்திரம் பிந்து, முக்கோணம், ஐங்கோணம், எட்டிதழ், பதினாறிதழ், பூபுரங்கள் மூன்று என அமைந்திருக்கிறது. ப்ரபஞ்சஸார தந்த்ரம் போன்ற தேவி உபாசனை நூல்களில் மாதங்கியின் பூஜைமுறைகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.இந்த மாதங்கியைப்பற்றி அபிராமிபட்டர், தனது அபிராமி அந்தாதியின் எழுபதாவது
பாடலில்,
கண் களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில்
பண்களிக்கும் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமுமாகி
மதங்கர் குலப்
பெண்களிற் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே!

என்று போற்றுகிறார். மகாகவி காளிதாஸர், மாதங்கி உபாசனையால் பல அற்புத சக்திகளைப் பெற்றார். அவர் இந்த மாதங்கியைப் போற்றி  ‘ச்யாமளா தண்டகம்’ எனும் அதியற்புத துதியைப் பாடியுள்ளார். அதில் இந்த மாதங்கியே சர்வ தீர்த்தம், சர்வ மந்த்ரம், சர்வ தந்த்ரம், சர்வ சக்தி, சர்வ பீடம், சர்வ தத்வம், சர்வ வித்யை, சர்வ யோகம், சர்வ நாதம், சர்வ சப்தம், சர்வ ஸ்லோகம். சர்வ தீக்ஷை முதலான சர்வ ஸ்வரூபிணியாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவளாகவும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.லலிதா திரிபுரசுந்தரி வாசம் புரிந்தருளும் நகர ஸாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த மாதங்கியுடையதே. லலிதா திரிபுரசுந்தரியிடம் இருந்து முத்ராதிகாரம் எனும் ‘POWER OF ATTORNEY’ பெற்றவள்! அதனால் லலிதையின் மந்த்ரிணீ என அழைக்கப்படுகிறாள். மந்திரியின் தயவு இருந்தால் ராஜாவின் அன்புக்குப் பாத்திரமாவதைப் போல மாதங்கியின் தயவை நாடியவன், லலிதையின் அருளை அடைவான் என்கிறது தந்த்ர சாஸ்திரம். இவளால் செயல்படுத்த முடியாதது என்று எதுவுமே இல்லை. எப்போதும் எல்லாவற்றையும் பெறக்கூடிய வாக்கு வல்லமை, சக்தி, பிறரைத் தன் வசமாக்கிக் கொள்ளும் தன்மை, பயமற்ற நிலை, மனதில் பதற்றப்படாத நிலை, எடுத்த செயலை சிரமம் இல்லாமல் நடத்தி முடிக்கும் தன்மை, பின்வரக்கூடிய இடையூறுகளை முன்னதாகவே யோசித்து அதனைச் சரிப்படுத்தும் வல்லமை போன்றவை இந்த மாதங்கி உபாசனையால் ஏற்படும் பலன்கள். லலிதையின் மந்திரிணியாக, பூரண மகாசக்தியாக, மதுரையம்பதியில் பிரகாசிக்கும் மீனாட்சி, மாதங்கியின் வடிவம் என்பது உபாசனையின் ரகசியம். மிகவும் லலிதமாக உள்ள இவளுடன் கீரிப்பிள்ளையையும் காணலாம். குலம் என்ற குண்டலினி சக்தி பாம்பின் வடிவமாகக் கூறப் படுகிறது.

அந்த சக்தியை யோக சக்தியால் தட்டி எழுப்ப வேண்டும். குலம் பாம்பு என்றால், நகுலம் என்பது பாம்புக்கு விரோதியான கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டால் சோம்பிக் கிடக்கின்ற பாம்பும் உத்வேகம் கொண்டு கிளம்பத்தானே வேண்டும்? ஆகவே, குண்டலினி சக்தி விழித்தெழச் செய்யவே இவள் கீரியை வைத்துள்ளதாக தேவி  உபாசனையில் சொல்லப்பட்டுள்ளது.பொருள் இருந்தாலும் அதைத் தக்க வைக்க அறிவு வேண்டுமே! அறிவு இல்லாமல் பொருள் இருந்தால் அனர்த்தம்தான் விளையும். இவள் ஹயக்ரீவரையே குருவாய் அடைந்தவள். பிரம்மாவின் சிருஷ்டித் தொழிலுக்கு உதவுபவள். உயர்விலும் உயர்வானவள் என்பதை உணர்த்தும் உத்திஷ்ட புருஷி என்ற பெயரும் இவளுக்கு உண்டு. இவளே உச்சிஷ்ட சாண்டாலீ என்றும் வணங்கப்படுகிறாள்.சக்தியின் வெளிப்பாடாக, நம்முள் சப்தம் நான்கு வகைகளாக உற்பத்தியாகி வெளிப்படுகிறது. அவை பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரீ எனப்படும். மூலாதாரத்தில் எழும் முதல் சலனம் (பரா), கருக்கொண்டுஉருவாகி (பஸ்யந்தி), மணிபூரகத்தில் தோன்றி (மத்யமா), அனாஹத சக்கரத்தில் உயர்ந்து வார்த்தையாகி (வைகரீ) வெளிப்படுகிறது. அந்த வாக்கு வன்மைதான் மாதங்கி!மாதங்கி உபாசனை, கல்வி கேள்விகளில் அதி சீக்கிரத்தில் தேர்ச்சியை அருள்கிறது. விசேஷமான இன்பக் கலைகளிலும் நுண்கலைகளிலும் இன்னிசைக் கலைகளிலும் உபாசகன் வெற்றியை வெகு எளிதில் அடைகிறான்.

வாக்வாதினி, நகுலீ என இவளுக்கு இரு தோழிகள். வாக்வாதினி தேவி நம்மை நன்றாகப் பேச வைக்கும் சக்தி. இவளின் அருளால் பக்தன் இனிமையான பேச்சை வாரிவாரி வழங்குவான். பெரிய சாஸ்திர விஷயங்களையும் சாதாரண மக்களுக்கு சுலபமாகப் புரியும் வகையில், அலுப்புத் தட்டாமல் பேசுவது இவளின் தயவால்தான். குருவிடம் சந்தேகங்களை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வதே வாக்வாதினி என்ற வார்த்தையின் அர்த்தம். அவள் மூல மந்திரத்தில் உள்ள ‘வத வத’ என்பது, குருவை அடிக்கடி சென்று தரிசிப்பதன் அவசியத்தைக் குறிக்கும். குருநாதர்கள் பல அரிய விஷயங்களைப் பலமுறை கோரினால் அன்றி உபதேசிக்க மாட்டார்கள். சில விஷயங்கள் பலமுறை கேட்டால்தான் மனதில் பதியும். நகுலீயின் சக்தி எதிரிகளின் வாக்கை அடைத்து, பிறரை விட ஆயிரம் மடங்கு இனிமையாக, தெளிவாகப் பேசி, தன் வயமாக்குவதே. ஞானம் பெற்றாலும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உண்டு. அத்தவறுகள் விஷம் போன்றவை. நகுலம் எனில் கீரிப்பிள்ளை. தவறுகள் என்ற விஷத்தால் பாதிக்கப்படாமல் இருக்க இவள் தயவு அவசியம்.

நாம் பேசும் வார்த்தை இனிமையாக இருந்தால் அதை சங்கீதம் என்பதுண்டு. ஸுக்ஷும்னா நாடி இருக்கும் முதுகெலும்பிற்கு வீணா தண்டம் என்று பெயருண்டு. எனவே மாதங்கி, ஸங்கீத மாத்ருகா எனப் புகழப்படுகிறாள். இனிமையான பேச்சு, கிளியை நினைவுறுத்தும். எனவே, அதை தேவி தன் கைகளில் ஏந்தியுள்ளாள். இந்த தேவியை அறுபத்தி நான்கு முக்கியமான யோகினிகள் எப்போதும் பூஜித்துக் கொண்டும் பணிவிடை செய்துகொண்டும் இருப்பர்.இந்த மாதங்கியைக் குறித்து சியாமளா தண்டகம், சியாமளா நவரத்னமாலை, சியாமளா ஆவரணம், சியாமளா அஷ்டோத்திரம், சியாமளா கவசம், ராஜமாதங்கி மந்த்ரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், மாதங்கி ஹ்ருதயம், மாதங்கி ஸஹஸ்ரநாமம், ஸ்யாமளா ஸஹஸ்ரநாமம் என பல்வேறு துதிகள் உண்டு. கீழ்க்காணும் பதினாறு நாமங்களால் அன்னை மாதங்கியை அர்ச்சித்து அனைத்து நலன்களையும், விரைவாகப் பெறலாம்.

சங்கீதயோகினி, ச்யாமா, மந்த்ரநாயிகா, ச்யாமளா, மந்த்ரிணீ, ஸசிவேசானீ, ப்ரதானேஸ்வரி, ஸுகப்பிரியா, வீணாவதி, வைணிகீ, முத்ரிணீ, ப்ரியகப்ரியா, நீபப்ரியா, கதம்பேசீ, கதம்பவனவாஸினி, ஸதாமதா.
மேற்கூறியவாறு இவளை சஞ்சலமின்றி அர்ச்சிப்பவர்களின் இல்லங்களில் லட்சுமி தேவி நித்யவாசம் செய்வாள். ருதுவாகாத பெண்கள் இவள் ஆராதனையால் ருதுவாவார்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்றுசேர்வர். சோம்பல், பயம், துக்கம் இம்மூன்றும் இவளை ஆராதிப்பவர்களுக்குக் கிடையாது. மாதங்கி உபாசனையைச் செய்தால் வெகு சீக்கிரத்தில் உலகத்திலேயே மிகச் சிறந்தவராக விளங்கலாம். உலகைத் தன் வசம் கொள்ளலாம். மாதங்கியே சர்வ சங்கரி அல்லவா? மாதங்கியின் அருளால் செயல்படுத்த முடியாததென்று எதுவுமே இல்லை. எப்போழுதும் எல்லாவற்றையும் பெறக்கூடிய வாக்வல்லமை, பிறரைத் தன் வயமாக்கும் சக்தி, பயமற்ற நிலை, பதற்றமில்லாமல் செயல்படும் தன்மை, நன்கு ஆராய்ந்து செயல்படும் குணம், தவறாக நிகழ்ந்த எதையும் சரி செய்யும் ஆற்றல், எதிராளியை மடக்கி, தன்னை முன்னிறுத்துதல் போன்ற பல நன்மைகளை உபாசகன் பெறலாம்.எல்லா பாக்கியங்களையும் பெற மல்லிகை, ஜாதிமல்லி ஆகிய மலர்களால் இத்தேவியை அர்ச்சிக்க வேண்டும். அரசபோகங்களை வேண்டுவோர் வில்வதளங்களாலும் விசேஷமாக தாமரை மலர்களாலும் பூஜிக்க வேண்டும். சொல்வன்மை, கவிபாடும் திறமை வேண்டுவோர் செம்பருத்திப்பூக்களால் இத்
தேவியை ஆராதனை புரியவேண்டும். செல்வ வளம் சிறக்க கருங்குவளை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

இந்த ராஜசியாமளாவின் அழகான திருவுருவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் காயத்ரி மண்டபத்திற்கு வலப்புறத்தில் தரிசித்து மகிழலாம்; புதுக்கோட்டை புவனேஸ்வரியின் கருவறையின் முன்னும், சென்னை ஆதம்பாக்கம் புவனேஸ்வரி ஆலயக் கருவறை முன்னும் மாதங்கியின் நின்றகோல திருவுருவங்களைத் தரிசிக்கலாம்.மிதமிஞ்சிய செல்வத்தையும் ஞானத்தையும் நல்ல புகழையும் முக்தியையும் தரவல்ல மதங்கமுனிவரின் மகளான மாதங்கி அனவரதமும் அடியவர்களைக் காக்கட்டும்.
- மகேஸ்வரி

Tags : Rajamathangi ,
× RELATED கவித்துவம் அருளும் ராஜமாதங்கி