×

இங்கிலாந்தில் மரணமடைந்த ராணி எலிசபெத்துக்கு உலகம் முழுவதும் அஞ்சலி: 10 நாட்களுக்கு பின் உடல் அடக்கம்; பிரமாண்டமான இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு

லண்டன்: இங்கிலாந்தில் மரணமடைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. லண்டனில் 96 பீரங்கி குண்டுகள் முழங்க ராணிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்தியா சார்பாக நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் பாரம்பரியமிக்க மன்னர் குடும்பத்தின் மகாராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். இவர் ராணியாக முடிசூடி, 70 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விழா, கடந்த பிப்ரவரியில் லண்டன் பக்கிம்ஹாம் அரண்மனையில் மிகக் கோலாகலமாக நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே ராணி எலிசபெத், வயது முதுமையால் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக எழுந்து நிற்கவும், நடக்கவும் சிரமப்பட்ட அவர் சமீபகாலமாக கைத்தடியை உபயோகித்து வந்தார். அதோடு, மருத்துவ சிகிச்சைக்காக பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு, ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல் நிலை மோசமடைந்ததாக அரச குடும்பத்து மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான 3ம் சார்லஸ் (73) உள்ளிட்ட மன்னர் குடும்பத்தினர் பல்மோரல் கோட்டைக்கு விரைந்தனர். அடுத்த சில மணி நேரத்திலேயே எலிசபெத் மறைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 96. இங்கிலாந்து மன்னர் பரம்பரையில் நீண்ட காலம் மகாராணியாக ஆட்சி செய்தவர் என்ற பெருமைக்குரியவர் எலிசபெத். அவரது மறைவால் ஒட்டுமொத்த இங்கிலாந்து நாடும் சோகத்தில் மூழ்கி உள்ளது. இங்கிலாந்து அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. ராணிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பக்கிம்ஹாம் அரண்மனை முன்பாக நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று மலர் கொத்துக்களை வைத்து மரியாதை செலுத்தினர். அடுத்த 10 நாட்களுக்கு நடக்கும் ராணியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் முறைப்படி நேற்று தொடங்கின. 10 நாட்களுக்கு பிறகு அவர் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. ராணியின் நினைவாக இங்கிலாந்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று மணி ஒலிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. அதே போல், லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் ஹைடி பூங்காவில் ராணியின் வயதுப்படி, 96 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. ராணியின் மறைவைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய மன்னராக 3ம் சார்லஸ் உடனடியாக பதவியேற்றார். துக்க நிகழ்ச்சிகள் தொடங்கியதைத் தொடர்ந்து முறைப்படி லண்டன் திரும்பிய அவர், மன்னராக முதல் முறையாக இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். அதில், சார்லஸ் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இரங்கல் உரை வாசித்தனர். அடுத்த 10 நாட்களுக்கு இங்கிலாந்து அரச குடும்ப பாரம்பரியத்தின்படி பல்வேறு சம்பிரதாயங்கள் நடக்க உள்ளன. லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு ராணியின் உடல் கொண்டு வரப்படும். அதைத் தொடர்ந்து வரும் 19ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலய கல்லறையில் ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும், இது அதிகாரப்பூர்வமாக பின்னர் உறுதி செய்யப்படும். இதற்கிடையே, ராணியின் மறைவுக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உட்பட பல்வேறு நாட்டு உலக தலைவர்கள் ராணி எலிசபெத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு நாடுகள் அரசு சார்பாக துக்க தினம் கடைபிடித்து வருகின்றன. அந்நாடுகளின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. புரதான சின்னங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டு ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தியா சார்பாக நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என நேற்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, நாளை ஒருநாள் நாடு முழுவதும் மூவர்ண தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். நாளை அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.* மோடி, பைடன் இரங்கல்எலிசபெத் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் இரங்கல் பதிவில், ‘சமகாலத்தில் வாழ்ந்த வலிமையான தலைவரான 2ம் எலிசபெத் ராணி, என்றென்றும் நமது நினைவுகளில் நிலைத்திருப்பார். தேசத்திற்கும், மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைவராக திகழ்ந்தவர். பொது வாழ்வில் கண்ணியத்தையும், நேர்மையையும் கடைபிடித்தவர். அவருடைய மறைவால் வேதனை அடைந்தேன். கடந்த 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் என்னுடைய இங்கிலாந்து பயணங்களின்போது எலிசபெத் ராணியை சந்தித்த அனுபவங்களையும், அவருடைய வரவேற்பையும், அன்பையும் ஒருபோதும் மறக்க முடியாது. எங்களது சந்திப்பில் அவருடைய திருமணத்திற்கு மகாத்மா காந்தி பரிசாக வழங்கிய கைக்குட்டையை என்னிடம் காண்பித்தார்,’ என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘புத்திசாலித்தனம், கருணையால் எங்களை கவர்ந்தவர் எலிசபெத். 9/11 தாக்குதலுக்குப் பிறகு எங்கள் இருண்ட நாட்களில் அவர் அமெரிக்காவுக்கு தோள் கொடுத்தார்,’ என்றார்….

The post இங்கிலாந்தில் மரணமடைந்த ராணி எலிசபெத்துக்கு உலகம் முழுவதும் அஞ்சலி: 10 நாட்களுக்கு பின் உடல் அடக்கம்; பிரமாண்டமான இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Queen Elizabeth ,England ,LONDON ,Queen Elizabeth II ,
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்