×

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்: குரங்கு, அணில், காகம் வழிபட்டு பாவ விமோச்சனம் பெற்ற திருத்தலம்

* முற்பிறவியில் செய்த வினை தீர்க்கும் வாலீஸ்வரர் * புத்திரபாக்கியம் அருளும் இறையார் வளையம்மை *திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுக்கா காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் காஞ்சீபுரத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் குரங்கணில் முட்டம் வாலீஸ்வரன் திருத்தலம் அமைந்துள்ளது. அதேபோல் காஞ்சிபுரத்திலிருந்து பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மீ தொலைவில் தூசி என்கிற கிராமத்திலிருந்து பிரியும்  பாதையில் 2 கி.மி. சென்றால் கிராமத்தின் எல்லையில் குரங்கணில் முட்டம் வாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நாயகனான வாலீஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். 16வது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர், சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது, எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தார். அவரிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. சிவன் அவரது பதவியை பறித்தார்.தன் பதவியை இழந்த எமதர்மன், சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். சிவன், பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறுவாய், என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன், முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார். கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன், தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், ‘தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாப விமோசனம் தருவதாகவும், அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும்’ கூறினார். இந்திரன், அணில் வடிவில் பூலோகம் வந்தார். இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது, சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன், இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன், இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே, சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் ‘குரங்கு அணில் முட்டம்’ என்றானது.கோயில் முன்மண்டப சுவர்களில் குரங்கு, அணில், காகம் மூவரும் வழிபட்ட சிற்பங்கள் காணமுடிகிறது. கோயில் உட்பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்த மாதர்கள், நால்வர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம். இங்குள்ள அம்பாள் பெயர் ‘இறையார் வளையம்மை. தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி அருள் பாலிக்கிறார். வாலி, இந்திரன், எமன் ஆகியோர் சிவனை வணங்கும் முன்பு அம்பாளை வணங்கினார்களாம். அவர்களுக்கு அருள் செய்யும்படி சிவனிடம் அம்பாள் பரிந்துரை செய்தாராம். எனவே, அம்பாளுக்கு இப்பெயர் வந்ததாம். அதாவது, தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்துச் செல்பவள் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கின்றனர். குரங்கணில் முட்டம் வாலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருஞான சம்பந்தர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியிருக்கிறார். அம்பாள் கைகளில் வளையல் அணிந்து, மகிழ்ந்த முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் அம்பாளுக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர். சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமதர்மன், தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினார். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க, நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார். வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமதர்மன் முட்டம் எனும் காகம் வடிவிலும் வந்து வணங்கி வழிபட்டு முற்பிறவி வினை தீர்ந்து பேறு பெற்ற தலமாக வாலீஸ்வரர் திருத்தலமாக விளங்கி வருகிறது. முக்தி கிடைக்கும் தலம்திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை, ‘குரங்கணின் முட்டம்’ என்றும், ‘பிறவா வகை வீடு’ (முக்தி கிடைக்கும் தலம்) என்றும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள முக்தி நிச்சயம் என்கிறார்கள். ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும் என்கின்றனர். இக்கோயிலுக்கு தரிசிக்க வந்தால் வடக்கே சுமார் அரை கி.மி. தொலைவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்திய குடைவரைக் கோவிலை ரசிக்கலாம். கல்வெட்டில் இத்தலம் ‘காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் திருக்குரங்கணில் முட்ட முடைய நாயனார் என்றும், கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிக்கப்படுகிறார். சகம் 1451-ல் பூஜைக்காக கிருஷ்ணதேவராயர் பல்லவபுரம் கிராமத்தை இக்கோயிலுக்கு அளித்ததாக குறிப்பு உள்ளது. பறிக்காத மலர்களால் பூஜிக்கப்பட்டவர் தேவாரப் பாடல்கள்: திருஞானசம்பந்தர் – விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங் கழுநீர்குவளைம்மல ரக்கயல் பாயுங். சிவனை வணங்கியபோது அவருக்கு பூஜை செய்வதற்கு கையால் மலர்களை பறிக்காமல் மரத்தை உலுக்கி பூஜித்தாராம். எனவே, சிவனுக்கு ‘கொய்யா மலர் நாதர்’ (பறிக்காத மலரால் பூஜிக்கப்பட்டவர்) என்ற பெயரும் உண்டு. இவருக்கு விசேஷமாக கரும்புச்சாறு அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் என்றும் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவரை  வழிபட்டு ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும் என்கின்றனர். தொண்டை மண்டலத்திலே தேவார பாடல் பெற்ற 32 திருத்தலங்களில் 6 வது தலமாக விளங்குவது இத்தலம்.இன்று கும்பாபிஷேகம்முக்தி கிடைக்கும் இக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (8ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, ஸ்பரிசாகுதி, மகா பூர்ணஹூதி, தீபாரதனைகள் தொடர்ந்து காலை 10:40 மணிக்கு மேல் 12 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் பரிவார மூர்த்திகள், விமானம், மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனை அடுத்து 12 மணிக்கு மேல் மூலவர் வாலீஸ்வரருக்கு மகா அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெறுகிறது. காலை 10:40 மணிக்கு மேல் 12 மணிக்குள்ளாக இறையார் வளையம்மை உடனுறை வாலீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவினையொட்டி நேற்றுமுன்தினம் தேதி காலை கணபதி ஓமம், நவகிரக ஓமம், கோ பூஜை, பிரவேச பலி, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை நடைபெற்றது. நேற்று 7ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனைகளும், மாலை அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் யாக கால பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை நடைபெற்றது. …

The post திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்: குரங்கு, அணில், காகம் வழிபட்டு பாவ விமோச்சனம் பெற்ற திருத்தலம் appeared first on Dinakaran.

Tags : Seiyar, Thiruvannamalai district ,Valeeswarar ,Lord ,Brangammai ,Thirunanasambandar ,Seyar, Tiruvannamalai district ,
× RELATED கும்பாபிஷேகம் பண்ணும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே; ஏன்?