×

சாத்தான்குளம் அருகே அடகு வைத்த நகையை மீட்டு தராததால் தந்தையை வெட்டிக் கொன்ற மகள் கைது

சாத்தான்குளம் : உடன்குடி அருகேயுள்ள ஞானியார்குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டி (63), விவசாயி. இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு அமுதா (35)  உள்பட 6 மகள்கள் மற்றும் 4 மகன்கள் என 10 குழந்தைகள். இதில் 2 மகன்கள் இறந்து விட்டனர். அமுதா மற்றும் அவரது தங்கைக்கு திருமணமாகவில்லை. மற்றவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். ஆறுமுகப்பாண்டி, மகள் அமுதாவின் ஒன்றே கால் பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரத்தில் தியாகு  என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். தந்தைக்கு உதவியாக அமுதா தோட்டத்தில் தங்கியிருந்து பணிகளில் ஈடுபட்டு வந்தார். வங்கியில் அடமானம் வைத்த நகையை மீட்டுத் தருமாறு அமுதா, தந்தையிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஆனால் கடந்த 5 மாதமாக ஆறுமுகப்பாண்டி, நகையை மீட்க முயற்சி எடுக்காமல் தாமதம் செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மதியம் தந்தையும், மகளும் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடகு நகை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அமுதா, தந்தையின் மொபட் சாவியை எடுத்து வைத்துக் கொண்டு நகையை திருப்பி தந்து விட்டு சாவியை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். ஆனால்  மகளின் வார்த்தையை விளையாட்டாக கருதிய ஆறுமுகப்பாண்டி, மகளுக்கு தெரியாமல் மொபட் சாவியை எடுத்துச் சென்று விட்டார். பின்னர் தோட்டத்திற்கு திரும்பிய  தந்தை ஆறுமுகப்பாண்டியிடம் நகை தொடர்பாக கேட்டு அமுதா வாக்குவாதம் செய்தார். மேலும் ஆவேசத்தில் அமுதா, தந்தை என்றும் பாராமல் அரிவாளால் ஆறுமுகப்பாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு தலையில் பலத்த வெட்டு விழுந்தது. உடனடியாக அவர், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி  நேற்று காலை உயிரிழந்தார்.இதுகுறித்து ஆறுமுகப்பாண்டி மனைவி வாசுகி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கொலை முயற்சி வழக்கு பதிந்து  அமுதாவை கைது  செய்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அமுதா அடைக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகப்பாண்டி உயிரிழந்து விட்டதால் அமுதா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அடகு நகை பிரச்னையில் தந்தையை மகளே வெட்டிக் கொன்ற சம்பவம், சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post சாத்தான்குளம் அருகே அடகு வைத்த நகையை மீட்டு தராததால் தந்தையை வெட்டிக் கொன்ற மகள் கைது appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Arumukhapandy ,Gnaniyarkudiyuru ,Ebenkudi ,Vasuki ,Amuda ,
× RELATED சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது