×

பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்

நான் என் கணவரைப் பிரிந்து மூன்று வருடங்களாக தனியாக வாழ்ந்துவருகிறேன். காலம் முழுக்க பிரிந்துதான் வாழ வேண்டுமா? நாங்கள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - முருகேஸ்வரி, மதுரை

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு ஆகிய ஐந்து கிரகங்களின் இணைவு பிரச்சினையைத் தோற்றுவித்திருக்கிறது. நீங்கள் கணவரைப் பிரிந்து வாழ்வதற்கான காரணத்தை தெரிந்து வைத்திருப்பீர்கள். தேவையற்ற தொடர்பு களும் வீணான நட்பும் உங்கள் குடும்ப வாழ்வில் பிரச்சினையைத் தந்திருக்கிறது. கூடாநட்பு கேடில் விளையும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகளையும் நீங்கள் காது கொடுத்து கேட்பது இல்லை. ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் கேது உங்கள் மனதை சஞ்சலத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. அலைபாயும் மனதினை கட்டுப் படுத்தினால் மட்டுமே வாழ்வு சிறப்பாக அமையும். உங்கள் ஜாதக பலத்தின்படி 23.11.2021க்கு மேல் 13.02.2022க்குள் நடக்கின்ற சம்பவம் உங்கள் மனதினை பக்குவப்படுத்தும். உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது கணவர் ஒருவரால் மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து அவரிடம் மனம் திறந்து மன்னிப்பு கேளுங்கள். வியாழக்கிழமை தோறும் நவகிரக சந்நதியில் வடக்கு நோக்கி வீற்றிருக்கும் குருவிற்கு நெய்விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். வரும் சித்திரைக்குள் கணவருடன் இணைந்து ஒன்றாக குடும்பம் நடத்துவீர்கள்.

?நான் ரயில்வே துறையில் பணியாற்றி தற்போதுதான் ஓய்வு பெற்றுள்ளேன். என் கணவர்  எனக்குத் தெரியாமல் பலரிடம் கடன் வாங்கி ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்து பெரும் தொகையை இழந்து விட்டார். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு கடனாளி ஆகிவிட்டார். என்னால் முடிந்தவரை கடனை அடைத்து வருகிறேன். இருப்பினும் முழுமையாக அடைக்க இயலவில்லை. பணி ஓய்விற்குப் பிறகு வரும் முழு
தொகையும் கடனை அடைக்க சென்றுவிட்டால் எதிர்காலத்திற்கு என்ன செய்வது? என் துன்பம் தீரவழி சொல்லுங்கள்.
- சென்னை வாசகி.

சதயம் நட்சத்திரம், கும்பராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் இருவரின் ஜாதகத்திலும் சனி வக்ரம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்கிறார். உங்கள் இருவரின் ஜாதகத்திலும் வக்ரம் பெற்ற சனியின் தொடர்பு ஏழாம் பாவகத்தோடு இணைந்துள்ளது. நீங்கள் அடைந்து வரும் இந்த துன்பத்திற்கு உங்கள் கணவரை மட்டும் குற்றம் சொல்ல இயலாது. அவருடைய நடவடிக்கைகளை சரிவர கண்காணித்து ஆரம்பத்திலேயே தடுக்காமல் விட்டுவிட்டு தற்போது தடுமாறி வருகிறீர்கள். இங்கே உங்களுடைய விதியும் சேர்ந்துதான் இது போன்றதொரு சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது. உங்களுடைய ஜாதக பலத்தின்படி தற்போது நடந்து வரும் நேரம் அத்தனை சிறப்பாக இல்லை. என்றாலும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது நடந்து வரும் நேரம் சற்று சாதகமாக உள்ளது. அவரது ஜாதக பலத்தின்படி 22.12.2021ற்குப் பின் கடன் சுமை குறையத் தொடங்கி விடும். பிரதி ஞாயிறு தோறும் ராகு காலம் முடிவடையும் வேளையில் சரபேஸ்வரர் சந்நிதியில் நான்கு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்து வாருங்கள். தொடர்ந்து  ஆறு மாத காலத்திற்கு இவ்வாறு செய்து வருவது நல்லது. வரும்
வருடத்தின் துவக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். கவலை வேண்டாம்.
“ஜ்வலந குடில கேசம் ஸூர்ய சந்தராக்நி நேத்ரம்
நிசிதகரநகாக்ரம் தூத ஹேமாத்ரி தேஹம்
    சரபமத முனீந்த்ரை: ஸேவ்யமாநம் ஸிதாங்கம் ப்ரணதபயவிநாசம் பாவயேத் பக்ஷிராஜம்.”

?என் மூத்த மகன் மிகத் திறமையானவன். எல்லோரும் பாராட்டும் அளவிற்கு புத்திசாலி. அவனுடன் படித்தவர்களில் பெரும்பாலானோருக்கு அரசுப் பணி கிடைத்துவிட்டது. இவன் பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்வு அறைக்குள் சென்றவுடன் பதட்டம் வந்துவிடுகிறது, சரியாக யோசிக்க முடியவில்லை என்கிறான். தற்போது விரக்தியான மனநிலையில் இருக்கிறான். அவனது எதிர்காலம் சிறக்க ஒரு வழி காட்டுங்கள்.
- நாராயணன், ஸ்ரீரங்கம்.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஞாபகசக்தியைத் தரும் குருவும் புத்திகாரகன் புதனும் வக்ரம் பெற்றநிலையில் சஞ்சரிக்கிறார்கள். மேலும், உத்யோக ஸ்தான அதிபதி சுக்கிரன் மூன்றில் அமர்ந்திருப்பது சற்றே பலவீனமான நிலை ஆகும். என்றாலும் சுக்கிரனின் ஆட்சி பலமும், சூரியனின் இணைவும் நிரந்தர உத்யோகத்தைப் பெற்றுத் தரும். விடா முயற்சியுடன் தொடர்ந்து தேர்வு எழுதிவரச் சொல்லுங்கள். சிறிதளவு ஊறவைத்த கொண்டைகடலையை ஒருநாளும், ஊறவைத்த பச்சைப்பயறு ஒருநாளும் என ஒரு நாள்மாற்றி ஒருநாள் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரச் சொல்லுங்கள். இரண்டு துளசித் தழைகளை மென்று தின்பதும் நல்லது. கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி சக்கரத்தாழ்வாரை தினமும் வணங்கி வரச் சொல்லுங்கள். புதன்கிழமை தோறும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள சுதர்ஸனர் சந்
நதியில் விளக்கேற்றி வழிபடுவதும் நல்லது. 13.06.2022 வாக்கில் உங்கள் மகனுக்கு நிரந்தர உத்யோகம் என்பது கிடைத்துவிடும்.
 “ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
தந்ந: சக்ர:  ப்ரசோதயாத்”

?கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் என் மகன் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகி வருகிறான். பலமுறை அறிவுரை கூறியும் அவன் கேட்பதில்லை. அந்தப் பெண்ணைப்பற்றி விசாரித்துப் பார்த்ததில் அவரது தாய் மற்றும் சகோதரியின் நடத்தை சரியில்லை என்பது தெரிய வருகிறது. அவர்களிடமிருந்து என் மகனை மீட்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
- தமிழ்செல்வி, திருமுல்லைவாயில்.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னிராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி துவங்கி உள்ளது. அவருடைய ஜாதகத்தை ஆராயும்போது உங்களுடைய பயம் நியாயமானதாகவே தோன்றுகிறது. காதல் திருமணம் இவருக்கு சரிவராது என்பது மட்டுமல்ல, அந்தப் பெண்ணுடனான தொடர்பும் இவருக்கு கடுமையான பாதிப்பினைத் தரக்கூடும். அந்தப் பெண்ணின் தரப்பிலிருந்து உங்கள் மகனுக்கு பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும். நிதானமாக எடுத்துச் சொல்லுங்கள். லாக்டவுன் முடிந்து கல்லூரிக்கு தினமும் சென்றுவர வேண்டிய சூழல் உண்டாகும்போது தவறாமல் அவரைக் கண்காணிக்க வேண்டியது அவசியம். 24 வயது வரை அவரைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பெற்றோராகிய உங்களுக்கு இருக்கிறது. தற்போது இளங்கலை படிப்பு முடிந்ததும் மேற்படிப்பிற்கு தொலைதூரத்தில் உள்ள ஊருக்கு அனுப்புங்கள். நினைத்தவுடன் ஊருக்கு வர இயலாத அளவிற்கு விதிமுறைகள் கடுமையான உள்ள கல்லூரியாக இருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து அவரது ஆர்வம் பி.எச்.டி. போன்ற ஆராய்ச்சி படிப்பில் செல்லும். 25வது வயது முதல் அவரது எதிர்காலம் குறித்த கவலை தேவையில்லை. பிரதி ஞாயிறு தோறும் ராகு கால வேளையில் அருகிலுள்ள ஆலயத்தில் அமைந்துள்ள துர்கையம்மன் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வர உங்கள் மகனின் நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள்.


Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்