×

ஸ்ரீ கிருஷ்ண அமுதம்- பகவத் கீதை உரை

பகவத் கீதை - மனித தர்மங்களின் விளக்கம்கடவுள் அருள் என்பது அவர வருக்கு ஏற்படும் அனுபவத்தின் வாயிலாக உணரப்படுவது.பலருக்கு இறைவன் நேரடியாகத் தோற்றமளித்து அருள்பாலிக்கும் அற்புதங்களும் நிகழ்வதுண்டு. மனித உருவில் இறைவன் வந்து துயருற்ற மக்களுக்கு உதவிடும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அசரீரியாகப் பலருக்கு இறைவனின் அருளாசி ஒலிக்க, அதற்கேற்பத் தன் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்துக் கொண்ட பக்தர்களும் உண்டு.

சிந்தித்துப் பார்ப்போமானால், அடிப்படையில் மனச் சலனமற்ற மக்களே இதுபோன்ற அற்புதங்களால் ஆட்கொள்ளப்படுகிறார்கள் என்பது புரியும்.
பிரச்னையிலும் துன்பத்திலும் உழன்றாலும், அந்த நிலையிலும் மனதைத் தளரவிடாமல் இறைசக்தியே நம்மை மீட்கும் ஒரே பற்றுக்கோல் என்பதை பரிபூரணமாக யார் உணர்கிறார்களோ அவர்களுக்கே அற்புதங்கள் சம்பவிக்கின்றன.

அதே சமயம் தொடர்ந்து துன்பங்களில் மூழ்கியிருப்பவர்கள் அதிலிருந்து மீளவே முடியாத நிரந்தர சோகத்தில் இருக்கிறார்கள் என்றால், இவர்கள் தம்முடைய துன்பங்களுக்கெல்லாம் தாம் காரணமல்ல; பிறர்தான் என்று கருதி அந்தப் பிறரைத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
நமக்கு ஏற்படும் வெற்றி-தோல்விகள், சுக-துக்கங்கள் எல்லாமே படிப்பினைதான். சந்தோஷம் ஏற்பட்டால் துள்ளுவதும், துக்கம் ஏற்பட்டால் துவளுவதுமாகிய சராசரி மனித நிலையிலிருந்து மேலெழுந்து இரு தரப்பட்ட உணர்வுகளையும் ஒன்றேபோல் பாவித்து வாழ வேண்டியதுதான் இப்போதைய நம் தேவை.

இந்தப் படிப்பினையை ஒவ்வொருவரும் தத்தமது ஒவ்வொரு அனுபவத்தில் மூலமாகத்தான் உணர்ந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அதற்கு இந்த ஜன்மம் போதாது. ஆகவேதான், நம் முன்னோர்கள், வீட்டிலுள்ள பெரியோர்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை, அவற்றை அவர்கள் கையாண்ட முறைகளை, அதன் பலன்களை, கூட இருந்து பார்த்தோ அல்லது பிறர் சொல்லக் கேட்டோ நம்முடைய வாழ்க்கை முறைகளையும் திருத்தி
யமைத்துக் கொள்ளும் வாய்ப்புகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

ஆனால், இவை எல்லாவற்றையும் - முழு வாழ்க்கைத் தத்துவமாக-பகவான் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அந்த உரைக்குப் பெயர்தான் பகவத்கீதை.
பகவத்கீதை என்றால் பகவானால் பாடப்பட்டது என்று பொருள் கொள்ளலாம். இந்த கீதை, உபநிஷத்துக்களின் சாரம். இது மகாபாரத இதிகாசத்தின் ஓர் அங்கம். ஆனாலும் ஓர் தனி இறைநூலாகவே கொள்ளத்தக்க அம்சம். மகாபாரதத்தில் பீஷ்மபர்வம் பகுதியில் 25வது அத்தியாயம் முதல் 42வது அத்தியாயம் வரை பதினெட்டு அத்தியாயங்களில், 700 ஸ்லோகங்களாக பகவத்கீதை வைர அட்டிகையாக  ஜொலிக்கிறது.

‘பாரத: பஞ்சமோ வேத:’ என்பார்கள். அதாவது ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்கு அடுத்து ஐந்தாவது வேதமாக மகாபாரதம் கருதப்படுகிறது. நான்கு வேதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஞானகாண்டம், கர்மகாண்டம் என்று இரு பகுதிகள் உண்டு. அதேபோல ஐந்தாவது வேதமான மகாபாரதத்திலும் பகவத்கீதை ஞான காண்டமாகக் கருதப்படுகிறது.

ஞான காண்டம், தன்னை அறிதலை விளக்கும் ஒரு பகுதி. ஜீவாத்மா, பரமாத்மா, இவை தவிர உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் பற்றி தத்வார்த்தமாக அலசி ஆராயும் பகுதி. வேதங்களில் கூறப்படும் இந்தப் பகுதி உபநிஷத்து எனப்படுகிறது. ஆகவே மகாபாரதம் என்ற ஐந்தாவது வேதத்தில் பகவத் கீதை, உபநிஷத் ஆகும்.பகவத் கீதைக்கு உரை சொல்வது என்பது உரையாசிரியர்களின் ஆழ்மன புரிதலுக்கும், அவரவர்களுக்குத் தோன்றிய வகையிலான விளக்குதலுக்கும் உட்பட்டது. இப்படி எழுதப்பட்ட உரைகள் மூவாயிரத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், அவரவர் மனப்போக்குப்படி, அவரவர் புரிந்து கொண்டுள்ள தன்மைப்படி பகவத் கீதைக்கு உரை எழுதப்பட்டாலும் அதன் அடிப்படைத் தத்துவத்தை மட்டும் யாராலுமே திரித்துக் கூற இயலவில்லை. அதற்குக் காரணம், பகவத் கீதை ஒரு வாழ்க்கை நெறி, எப்படி வாழ வேண்டும், வாழ்வின் அர்த்தம் என்ன என்பன போன்றவற்றைத் தெளிவாக விளக்கும் ஒரு வாழ்க்கைப் பாடம்.

பகவத்கீதை கங்கையைப் போலப் புனிதமானது. எத்தனையோ அசுத்தங்கள் கங்கையில் கலந்தாலும் கங்கை நீரின் புனிதம் எத்தனை வருடங்கள் ஆனாலும் குறைவதில்லை. அசுத்தங்களுடனேயே ஓடிக் கொண்டிருக்கும் கங்கையை ஒரு செம்பில் பிடித்து வைத்து எத்தனையோ வருடங்
களுக்குப் பிறகு அந்தச் செம்பைத் திறந்து பார்த்தால் அது துர்நாற்றம் வீசுவதில்லை; மிகத் தெளிவாகவும், ஏன் சுவையாகவும்கூட இருக்கிறது. பகவத்கீதையும் அப்படித்தான். எத்தனையோ உரை ஆசிரியர்கள் அவரவர் மனப்போக்குப்படி உரை சொல்லியிருந்தாலும், அவை, கீதையின் அடிப்படைத் தத்துவத்தையும், நோக்கத்தையும் மேம்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.

இப்படிப்பட்ட உரையாசிரியர்களில் முதன்மையானவர்களாக மூவரைச் சொல்லலாம். அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றி ஸ்ரீ சங்கரர், விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றி ஸ்ரீ ராமானுஜர், த்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றி ஸ்ரீ மத்வர்.மொத்தத்தில் பகவத்கீதையின் பொருளை அறிவது ஒரு சுகம் என்றால், அந்த ஸ்லோகங்களை தினமும் பாராயணம் செய்ய முடியுமானால், அது பரமசுகம். அந்தப் பாடல்கள், இறைமந்திரங்கள். அவற்றை தினமும் உச்சரிப்பதால் நம் வாழ்வில் பல தர்ம நலன்கள் விளையும் என்பது உறுதி.

எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையே ஏற்றம் பெறும் என்பதை உள்ளீடாக உணர்த்துகிறது கீதை. அதே சமயம் ‘எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் வாழ்க்கையே எதற்கு?’ என்ற கேள்விக்கும் பதில் சொல்கிறது.மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இந்த கீதை, பகவான் கிருஷ்ணனால் உரைக்கப்படுகிறது. நெருக்கடி சமயத்தில்தான் பகவான் அருள் வேண்டியிருக்கிறது, இல்லையா? தனக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவமானங்கள், புறக்கணிப்புகள் இவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் மனசுக்குள்ளேயே இருக்கும்வரை, அவற்றிற்குச் சரியான பதில் சொல்ல வேண்டும், திருப்பித் தாக்க வேண்டும் என்ற வேட்கையும் கனன்றுகொண்டே இருக்கும். தனக்கு எதிரான சம்பவங்களுக்கு உடனேயே எதிர்ச் செயல் புரிவது மனித இயல்புதான்.

ஆனால் அவ்வாறு செயல்புரிய இயலாதவாறு சூழ்நிலைகளும், உடனிருப்போரும் அமைந்துவிடும்போது அந்தத் தாக்கம் மனதில் பாரத்தை ஏற்றி விடும் என்பதும் இயல்புதான். பொறுமையைக் கடைப்பிடித்து, காலம் வரும்போது அந்த பாரத்தைப் பழிவாங்கல் மூலமாக வெளியேற்றிவிடவேண்டும் என்று காத்திருப்பதும் இயல்புதான். இந்தக் காத்திருப்பு காலத்தில், பழிவாங்கப்பட வேண்டி யவர் மீதான குரோதமும், விரோதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதும் இயல்புதான்.

பழிவாங்கும் வாய்ப்பு கிட்டும்போது, அதனால் தனக்கே பாதகம் ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் கொலை என்ற மாபாதகத்தைச் செய்ய முற்படுவதும் மனித இயல்புதான். இந்தக் கொடுஞ்செயல் எண்ணத்துக்கு, சந்தர்ப்ப சூழ்நிலைகளும், உடனிருப்போரும் போடும் தூபங்களும் காரணமாக அமைகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், அவ்வாறு பழிவாங்க முயலும்போது சிலசமயம் அறிவு விழித்துக்கொள்வதுதான். இப்படிப் பழிவாங்குவதால் எதை சாதித்துவிட முடியும் என்று அறிவு கேட்கும்போது பதில் சொல்ல மனதால் இயலுவதில்லை. பழிக்குப் பழி என்ற உணர்வில் இரு தரப்பிலும் சேதம்தான் மிச்சம் என்ற உண்மை தெரியவரும்போதுதான் அந்தப் பகை உணர்வு எவ்வளவு மோசமானது என்பது புரிகிறது.

இந்தப் புரிதல் தனிமனிதரிடையேயோ அல்லது இனத்தாரிடையேயோ, இரு சமூகத்தாரிடையேயோ ஏற்படும் பகைமைக்குப் பொருந்தலாம்; ஆனால் போர் என்று வந்துவிட்டால், ஏதேனும் உரிமைக்கான போராகவும் அது அமைந்து விட்டால் அல்லது ஆக்கிரமிப்புக்கும், ஆளுதலுக்குமான போர் என்று ஆகிவிட்டால், அங்கே பழி உணர்வுக்கு முதலிடம் கொடுப்பதே பொருத்தமானதாக இருக்கும். இந்த கட்டத்துக்கு வந்துவிட்ட பிறகு, வேண்டியவர்-வேண்டாதவர், உறவினர்-உறவு அல்லாதவர் என்ற பாகுபாட்டு சஞ்சலத்துக்கு மனதை ஆட்படுத்தக்கூடாது.

சமாதானத்துக்கோ, சமரசத்துக்கோ ஒத்துவராத நிலையில், நீயா-நானா என்று பார்த்துவிடும் போர்தான் இறுதியானது என்ற உச்சகட்டத்துக்கு சூழ்நிலையும், மனதும் தயாராகிவிடும்போது, எதிரி உயிரைப் பலி வாங்குவது அல்லது தன்உயிரைத் தியாகம் செய்வது என்பதுதான் அந்தப் போரின் தர்மமாகிவிடும். இதற்குத் தயங்குவதோ, பாச உறவுகளைக் காரணம் காட்டிப் போரிலிருந்து விலக முயற்சிப்பதோ கூடாது என்பதும் அதே போர் தர்மம்தான்!அர்ஜுனனின் இத்தகைய மனக் குழப்பத்துக்கு விடை தரும் சாக்கில் பல மனித தர்மங்களையும் பகவான் கிருஷ்ணன்
விளக்கிப் புரியவைக்கிறார்.

- பகவத் கீதையின் சாராம்சம்  இதுதான். குருக்ஷேத்திர யுத்தத்துக்கான காரணத்தை ‘சொத்துக்கான சண்டை’ என்று வெகு சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால், சகோதரர்களிடையே ஏற்பட்ட அந்தத் தகராறு சூதாட்ட வெறியால் வளர்ந்தது என்பதுதான் அடிப்படை உண்மை.  ஆகவே சூதாட்டம் என்பது எவ்வளவு பெரிய கொடிய, அநீதியான பழக்கம் என்பது புரிகிறது.விட்டதை மீட்கும் வேட்கையை சூதாட்டம் வளர்க்கிறது. ஆரம்பத்தில் நிறைய அபகரித்து விட வேண்டும் என்ற வேட்கையுடன் துவங்கும் இந்த ஆட்டத்தில் இழப்பு எற்படு மானால் அதனை மீட்க முயற்சிப்பதும், அதற்கு மாறாகப் பொருள் ஈட்ட முடிகிறது என்றால், மேலும் அதனைப் பெருக்கிக் கொள்ளவும் சூதாட்டம் மனதைத்
தூண்டுகிறது.

மேலே சொன்ன முதல் கட்டத்தில் பாண்டவர்களும், இரண்டாம் கட்டத்தில் கௌரவர்களும் உணர்ச்சி மேலிட சகுனித் தீயால் மேலும் மேலும் வன்மம் வளர்த்து சூதாட்டப் போரில் ஈடுபட்டார்கள். இழந்தவரை போதும்; இருப்பதைக் காத்துக் கொள்வோம் என்று பாண்டவர்கள் நினைத்
திருந்தாலும் சரி, கிடைத்தவரை போதும்; இனிமேல் வேண்டாம் என்று கௌரவர்கள் நினைத்திருந்தாலும் சரி, மகாபாரதப் போர் மூண்டிருக்காது.
தோல்வியே ஒரு போதை. குதிரைப்பந்தயம், லாட்டரிச்சீட்டு மற்றும் பிற சூதாட்டங்களில் ஆரம்பத்தில் ஈடுபடுபவர்கள் அதில் வெற்றி பெற்றுவிட வேண்டும், நிறைய பொருள் குவிக்க வேண்டும் என்ற பேராசை மிகுந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆனால் நாளாவட்டத்தில் அடுத்தடுத்துத் தோல்வியே ஏற்படுமானால் அந்தத் தோல்வியிலேயே சுகம் காண்பவர்களாகவும் அவர்கள் மாறிவிடுகிறார்கள்! கழிவிரக்கம், சுயபரிதாபம் என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு மேலும் மேலும் தோல்வியையே போதைப் பொருளாக அனுபவித்து வருகிறார்கள். திடீரென்று வெற்றி பெற்று விட்டாலும், அதை எடுத்துக்கொண்டு வீடு போய்ச் சேரலாம், அதோடு இந்த சூதாட்டத்திற்கு விடை கொடுத்து விடலாம் என்ற அமைதி வந்துவிடாது. அவ்வாறு கிட்டிய மிகச்சிறிய அதிர்ஷ்டத்தையும் வைத்து மீண்டும் சூதாடத்தான் மனம் விழைகிறது. அதாவது இந்தத் தொகையை வைத்து ஆடுவதால், இதற்கு முன் இழந்ததையெல்லாம் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை காரணமாக அல்ல; மனத்தின் அடித்தளத்தில் தோல்விச் சுவை கண்டதன் தொடர்ச்சியாக இந்த சிறு லாபத்தையும் மீண்டும் இழந்துவிட ‘ஆசைப்படும்' போதையினால்தான்!

அந்த வகையில் மேலும் மேலும் இழப்பையே அனுபவித்து வந்த தருமன், தோல்வி போதையில் சுகம் காண ஆரம்பித்தான் என்றே சொல்லவேண்டும். நாடு, பொருள், சொத்து என்று எல்லாவற்றையும் இழந்த பின்னரும் தோல்வியில் கண்ட சுகம், அவனை தம்பியரையும் இழக்கத் வைத்தது; ஏன், மனைவியையும் இழக்கும் துணிவைக் கொடுத்தது.  

மனைவியை இழந்ததில் அவன்தான் எவ்வளவு அவமானத்தை அனுபவித்தான்! துகிலுரியப்பட்ட கோலத்தில், எதிரிகள் எல்லாம் கைகொட்டிச் சிரிக்க, வலுமிகுந்த தம்பிகளும் செய்வதறியாது தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு கூனிக்குறுகி அமர்ந்திருக்க, தருமன் பட்ட வேதனை அவனுடைய தோல்விச் சுகத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.

எல்லாவற்றையும் இழந்து, நாட்டைவிட்டு வெளியேறி, தலைமறைவாகி, உருமாற்றம் கொண்டு, அந்த அஞ்ஞாத வாசத்தினாலேயே ஞானோதயம் பெற்றான் தருமன். துரியோதனனுக்கு சகுனி உதவியது போல் தர்மனுக்குக் கிருஷ்ணன் உதவினான். எப்படி தீயவெறிக்கு சகுனி எண்ணெய் வார்த்தானோ, அதுபோல தருமநெறி துளிர்க்க கிருஷ்ணன் நீர் வார்த்தான்.

இப்படி போர் புரிவது என்று தீர்மானமான பிறகு, போர்க்களத்துக்கு வந்துவிட்ட பிறகு, அர்ஜுனன் மனம் தடுமாறுகிறான். அவனை நேர்ப்படுத்த கிருஷ்ணன் கீதோபதேசம் செய்கிறான். சிலருக்கு, லட்சக்கணக்கான பேர் மோதிக் கொள்ளக் கூடிய ஒரு போர்க்களத்தில் அவ்வாறு கீதோபதேசம் செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழலாம்.

இந்த மகாபாரத குருக்ஷேத்திரப் போரில் இரு தரப்பிலும் ஏராளமான படைகள், யுத்தம் ஆரம்பிப்பதற்காகக் காத்திருக்கின்றன.
அப்போது அர்ஜுனன் மனம் சோர்ந்துவிட அவனுக்கு உபதேசம் செய்து தேற்றுகிறான், கிருஷ்ணன். ஆனால் வெகுநேரம் நீடித்திருக்கக் கூடிய இந்த உபதேச அவகாசத்தில் துரியோதனப் படைகளோ அல்லது பாண்டவப் படைகளோ எப்படி பொறுமை காத்தன? இது சாத்தியம்தானா?
-இந்தக் கேள்விக்கு, சுவாமி சின்மயானந்தர் வெகு தெளிவான விளக்கம் அளித்திருக்கிறார்:

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சுய ஆட்சியை அளித்துவிட்டு பிரிட்டிஷார் தம் நாட்டுக்குத் திரும்பினர். இரு நாட்டிடமும் தனித்தனியே அவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான போர் ஆயுதங்கள் இருந்தன. இதே சமயம், ‘காஷ்மீர் யாருக்கு?' என்ற பிரச்னை எழுந்தது. இதனால் காஷ்மீரை அடைய, இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பினரும் போர் முஸ்தீபோடு அணி வகுத்தனர்.

அப்போது ‘நாங்கள் முடிவு தெரிவிக்கும்வரை போர் மேற்கொள்வதை ஒத்திப் போடுங்கள்', என்று ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து ஓர் ஆணை அறிவிப்பு வந்தது. உடனே இரு நாடுகளும் போர் சிந்தனையைக் கொஞ்சம் தள்ளிப் போட்டன. ஆனால் இரு படையினரும் போர்க்களத்திலிருந்து வாபஸ் ஆகவில்லை. ஐ.நா. சபை தன் முடிவைச் சொல்லட்டும், அதன் பிறகு போரிடுவதா, திரும்பச் செல்வதா என்று தீர்மானிக்கலாம் என்ற யோசனையில் ஒருவரை ஒருவர் எதிர்நோக்கியபடி அப்படியே நின்றுவிட்டனர்.

இப்படி ஒருநாள், இருநாள் இல்லை, பல வாரங்கள் இரு தரப்பிலும் ஒரு குண்டுகூட வெடிக்காமல், ஆனால் எந்தக் கணமும் போரிடத் தயார் நிலையில், ஐ.நா. முடிவுக்காகக் காத்திருந்தார்கள். போர்க்களத்துக்கு வந்த பிறகும், போரிடாமல் இப்படிக் காத்திருந்தது எப்படி சாத்தியமாயிற்று? போரின் நியாயத்தை முடிவு செய்ய, இரு தரப்பிற்கும் பொதுவான ஒரு மேலிடம் குறுக்கிட்டிருக்கிறது. அதன் முடிவு தெரிந்த பிறகு போரிடுவதா, வேண்டாமா என்று முடிவு செய்யலாம், என்று இந்திய-பாகிஸ்தானிய வீரர்கள், எதிரெதிரே அணிவகுத்து நின்றார்கள்!

குருக்ஷேத்திர களத்தில் நடந்ததும் இதுபோன்றதுதான். பாண்டவர்களும், கௌரவர்களும் தத்தமது படைகளுடன் எதிரெதிர் அணிகளாக  நிற்கிறார்கள். அப்போது தேரை ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்துகிறான் கிருஷ்ணன். எதிரணியிலுள்ள தன் உறவினர்களைப் பார்த்து மனங்கலங்கி,போர் புரியமாட்டேன் என்று சொல்லி வில்லைக் கீழே போட்டுவிட்ட அர்ஜுனனைப் பார்த்து உபதேசம் செய்கிறான் கிருஷ்ணன்.

இது வ்விருவருக்குமிடையே நடந்த உரையாடல்தான். ஆனால் தொலைவிலிருந்து இதை கவனிக்கும் இரு தரப்புப் படையினரும் என்ன நினைக்கிறார்கள்?‘ அர்ஜுனன் வில்லைக் கீழே போட்டுவிட்டான். கிருஷ்ணன் அவனுக்கு ஏதோ அறிவுரை சொல்கிறான். ஒருவேளை யுத்தமே மேற்கொள்ளாமல் பாண்டவர்கள் பின்வாங்கிச் சென்றுவிடலாம். கத்தியின்றி, ரத்தமின்றி நாம் பாண்டவர்களுக்குப் பங்கே கொடுக்க வேண்டாத வகையில் முழு ராஜ்ஜியத்தையும் நம் உடைமையாக்கிக் கொள்ளலாம்' என்று கௌரவர்கள் நினைக்கிறார்கள்.

‘எத்தகைய உத்திகளால் எதிரிகளை வீழ்த்தலாம் என்று கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு சொல்லிக் கொடுக்கிறான். சிறிது நேரம் போகட்டும், அந்த உத்திகளை வைத்து அர்ஜுனன், வில்லெடுத்து, அம்புகள் தொடுப்பான். அதே உத்திகளைப் பின்பற்றி நாமும் போரிட்டு வெற்றி வாகை சூட வேண்டும்,' என்று பாண்டவப் படைகள் நினைக்கின்றன.

இப்படி இவர்கள் காத்திருக்க, கீதோபதேசம் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல், தர்மத்தைப் போற்றும் கிருஷ்ணனின் அவதார மகிமையை உணர்ந்த இரு தரப்புப் பெரியவர்களும், அவன் முடிவெடுக்கும்வரை போரை ஆரம்பிக்க வேண்டாம் என்று காத்திருக்கிறார்கள். இந்தியாவும், பாகிஸ்தானும், ஐ.நா. சபை முடிவுக்காகக் காத்திருந்தது போலத்தான், பாண்டவர்களும், கௌரவர்களும், கிருஷ்ணனின் கீதோபதேசம் முடிவதற்காகக் காத்திருந்தார்கள் என்று சொல்லலாம். ஆக, குருக்ஷேத்திர போர்க்களத்தில் கீதோபதேசம் நிகழ்ந்திருக்க நிச்சயமாக சாத்தியமிருக்கிறது!

பகவத் கீதையை ஞான விளக்கம் என்றே சொல்ல வேண்டும். இதில் ஒரு வேடிக்கை பாருங்கள் - அறிவுக் குருடர்களுக்கு ஞான வெளிச்சத்தைக் காட்டும் வழிகாட்டிதான் பகவத் கீதை. இந்த உரையையும், இதற்கு முன்னால் மேற்கொள்ளப்படும் போர் முஸ்தீபுகளையும், தனக்கு விளக்கிச் சொல்லுமாறு, பார்வையை இழந்த திருதராஷ்டிரன், தன் அமைச்சன் சஞ்சயனிடம் கேட்கிறான்! ஆக, பார்வையற்ற ஒருவன் ஆரம்பித்து வைத்த காட்சி விளக்கம்தான், பகவத் கீதையாக, ஞானஒளி வெளிச்சமாக, நீட்சி பெற்றிருக்கிறது!   

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

Tags :
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்