×

தந்தையும் மகனும் உருவாக்கிய பேலூர் கலைக்கோயில்!

கர்நாடக தேசம் ஹொய்சல அரசர்களால் ஆளப்பட்ட காலம் அது. விஷ்ணுவர்த்தனர் என்பவர் பேரரசராக இருந்து, நல்ல முறையில் ஆட்சி செலுத்தி வந்தார்; கலைகளையும் கலைஞர்களையும் நன்கு ஆதரித்து, கலைகள் செழித்து வளரும்படியாக ஆட்சி செலுத்தி வந்தார். தற்போது ஹளபேடு என அழைக்கப்படும் நகரம், அப்போது துவாரபுரி என்ற பெயரில் தலைநகராக இருந்தது.

அங்கிருந்து சற்று தொலைவில் தற்போது பேலூர் எனப்படும் ஊர், அப்போது வேலாபுரி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கலைகளில் ஆர்வம் கொண்ட அரசர், பேலூரில் ஸ்ரீ ‘விஜயநாராயணர் ஆலயம்’என்ற பெயரில் பெரும் கோயில் ஒன்றைக் கட்டத் தீர்மானித்தார். அக்கோயிலின் அருகிலே தன் மனைவி சாந்தளாதேவியின் எண்ணப்படி, சௌமிய நாராயணர் ஆலயம் ஒன்றையும் அமைக்கத் திட்டமிட்டார், மன்னர்.

திட்டமெல்லாம் சரி! மன்னர் விரும்பியபடி அந்த ஆலயங்கள் கலைநயத்துடன் திகழ வேண்டுமே! அதற்கு ஏற்றாற்போல், ஜக்கணாசாரியார் என்ற பெரியவர்; தலைசிறந்த சிற்பி அகப்பட்டார். அவரைப்பற்றிய தகவல்களை அறிந்த அரசர், பேரும்புகழும் பெற்ற அந்தச் சிற்பியை அழைத்து, அவரிடம் ஆலயங்கள் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தார்.

 ஜக்கணாசாரியார் பேலூரில் இருந்து 350-கி.மீ. தொலைவிலிருந்து, இரண்டு வயது மகனையும் மனைவியையும் விட்டுப்பிரிந்து,தொழில் நிமித்தமாகப் பேலூர் வந்தவர்; அவர்களைப் பிரிந்திருக்கும் கவலையை மறக்கத் தீவிரமாகச் சிற்பத்தொழிலில் முனைந்தார். அவருக்கு ஐநூறு உதவியாளர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்டவரிடம் தான், மன்னர் விஷ்ணுவர்த்தனர் கட்டத் தீர்மானித்திருந்த இரு ஆலயங்களையும் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தார்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆயின. ஆலயங்கள் நல்ல முறையில் உருவாகிக் கொண்டிருந்தன. சௌமிய நாராயணரின் மூல விக்கிரகத்தை உருவாக்கும் பொறுப்பை, ஜக்கணாசாரியாரே மேற்கொண்டார்.  மூலவர் வடிவங்களை உருவாக்குவதில் தனிச்சிறப்பு பெற்ற ஜக்கணாசாரியாரே நம் ஊரிலும் மூலவர் வடிவத்தை உருவாக்குகிறார்” என்று மக்களெல்லாம் மகிழ்ந்தார்கள்.

 ஒருவருட காலம் அரும்பாடுபட்டு,சௌமிய நாராயண மூலவர் வடிவத்தை உருவாக்கி முடித்தார். மன்னர் முதல் சாதாரண மக்கள்வரை, அனைவரும் வந்து பார்த்துப் பரவசமடைந்தார்கள். ‘‘இவ்வளவு அற்புதமான தெய்வவடிவை, இதுவரை யாரும் உருவாக்கியதில்லை; இனிமேலும் உருவாக்கப் போவதில்லை” என்று,கலை நுணுக்கம் தெரிந்தவர்கள், வாய்விட்டுச் சொல்லிப் பாராட்டினார்கள்.

பெருமாள் திருமேனியைக் கருவறையில் பிரதிஷ்டை செய்ய, நல்ல நாள் தீர்மானித்தார்கள்.  பெரிய அளவில் விழாவாகவே கொண்டாட
ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பல இடங்களிலும் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்துகுவிந்தார்கள்.  மூலவர் பிரதிஷ்டைக்கு,இன்னும் ஐந்தே நாட்கள் இருந்தன.

ஏராளமானோர் வந்து வரிசையில் நின்று, ஜக்கணாசாரியார் உருவாக்கிய, பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய  மூலவர் திருமேனியைத் தரிசித்தார்கள். அப்போது வரிசையில் வந்த வாலிபன் ஒருவனும் விக்கிரத்தைப் பார்த்தான்;  அவன் மடியில் சிலை செதுக்கும் சிற்றுளியும் சுத்தியலும் இருந்தன. அந்த வாலிபன் விக்கிரகத்தை உற்று உற்றுப் பார்த்ததைப் பார்த்தவர்கள்,அவன் மடியிலிருந்த உளியையும் சுத்தியலையும், அவன் முகத்தில் இருந்த களையையும் கண்டு, ‘‘இவன் ஒரு பெரும் சிற்பியாக இருப்பான் போலிருக்கிறது” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

ஆனால், அதையெல்லாம் கவனிக்காத வாலிபனோ, “இந்த விக்கிரகத்தை உருவாக்கியது யார்?'' என அங்கிருந்த பாதுகாவலரிடம் கேட்டான்.
“தலைமைச் சிற்பி ஜக்கணாசாரியார் தான், இந்த விக்கிரகத்தை உருவாக்கினார்” எனப் பதில் சொன்னார். பாதுகாவலர். அதைக் கேட்டதும் வாலிபன், சற்று நேரம் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தான்; ஒருசில விநாடிகளில், ‘‘இந்த விக்கிரகம் ஆலயத்தின் உள்ளே வைக்கத் தகுதியானது அல்ல. இதில் குறை இருக்கிறது. உங்கள் தலைமைச்  சிற்பியை வரவழையுங்கள்.

உடனே,  இங்கு” என்று பெருங்குரல் எடுத்துக் கூவினான் வாலிபன். “இந்தப் பையனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதுபோல் இருக்கிறது. இல்லாவிட்டால்சிற்பிகளிலேயே தலைசிறந்த ஜக்கணாசாரியார்  செய்த கலைப்பொக்கிஷத்தைப் போய், குற்றம் சொல்வானா?” என்றார்கள் சிலர்.
இன்னும் சிலர், வாலிபனை ஏளனம் செய்தார்கள். ஆனால், வாலிபன்  மட்டும் எதையும் பொருட்படுத்தாமல், தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது தற்செயலாக அந்தப் பக்கம் வந்த ஜக்கணாசாரியார், வாலிபனின் கூவலைக் கேட்டார்; உடனே,  அவனை  நெருங்கி, “தம்பி!  இந்த விக்கிரகத்தில் என்ன குறை?” எனக் கேட்டார்.

அவரை வணங்கிய வாலிபன், “ஐயா! மன்னியுங்கள்! அரசாங்க முக்கியஸ்தர்களையும் இங்கே வரவழையுங்கள்!  அவர்கள் முன்பாகவே, இந்த விக்கிரகத்தில் உள்ள குறையைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் நான்” எனப் பணிவோடு சொன்னான்.அவனது தைரியத்தையும் தன்னம்பிக்கையையும்  கண்டு வியந்த ஜக்கணாசாரியார், “கவலைப்படாதே! மன்னரையே இங்கு வரவழைக்கிறேன். நீ தைரியமாக உன் கருத்தைத் தெரிவிக்கலாம்” என்றார். சற்று நேரத்தில் மன்னரும் அரசாங்க முக்கியஸ்தர்களும் அங்கு வந்தார்கள். விவரம் அறிந்து பொதுமக்களும் அதிக அளவில் அங்கே குவிந்து விட்டார்கள்.

அனைவர் முன்னிலையிலும் மெள்...ளமாக விக்கிரகத்தை நெருங்கிய வாலிபன், தன் இடுப்பிலிருந்த உளியை எடுத்து விக்கிரகத்தின் அடிவயிற்றில் வைத்து, சுத்தியலால் பக்குவமாக ஒரு தட்டு தட்டினான். தட்டிய இடத்திலிருந்து  ஒரு சில்லு உடைந்து கீழே விழ, விக்கிரகத்தில் ஒரு சிறு பள்ளம் உண்டானது. விக்கிரகத்தைப் பிடித்து, மெள்...ளச்  சாய்த்தான் வாலிபன். விக்கிரகத்தின் துவாரத்திலிருந்து சிறிதளவு மணல் கீழே விழுந்தது; அதைத் தொடர்ந்து ஒரு தேரையும் தாவி, வெளியில் குதித்தது.

அதைக்கண்டு ஜக்கணாசாரியார் பிரமித்தார்; திகைத்தார்; ‘‘எவ்...வளவு ஆண்டுகள் காலம் பயிற்சி பெற்றேன்; எத்தனை பாராட்டுகள்; இவ்வளவு இருந்தும் இந்தத் தவறு  நேர்ந்து விட்டதே!” என்று வருந்தினார். மன்னருக்கோ, ‘‘விக்கிரகப் பிரதிஷ்டைக்கு, இன்னும் நான்கு நாட்கள்தானே இருக்கின்றன! அதற்குள் வேறொரு விக்கிரகம் தயாரிப்பது நடக்கக்கூடிய செயலா?” என வருந்தினார்.

மன்னரின் முகக்குறிப்பில் இருந்து, அவர் மனதைப் புரிந்து கொண்ட வாலிபன், ‘‘கவலை வேண்டாம் மன்னா! உங்கள் மனம் புரிகின்றது. விக்கிரகத்திற்கெனத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பாறைகளை காண்பியுங்கள் என்னிடம்! அவற்றிலிருந்து குற்றமில்லாத ஒரு பாறையைத் தேர்ந்தெடுத்து, நானே உங்கள் விருப்பப்படி விக்கிரகத்தைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் உருவாக்கித் தருகிறேன்” என்றான்.

வாலிபனின் வார்த்தைகளைத் தலைமைச் சிற்பியான ஜக்கணாசாரியார் நம்பவில்லை; மன்னரும் நம்பவில்லை; ‘‘நான்கு நாட்களுக்குள்  செய்கிறேன்  என்கிறானே இவன்! வாலிப வேகத்தில் சொல்கிறான் போலும்” என்று எண்ணினார்கள். இருந்தாலும், ‘‘இவன் சொல்லியபடி விக்கிரகத்திற்கான பாறைகளை இவனிடம் ஒப்படைத்துப் பார்க்கலாம்”  என எண்ணி, ஜக்கணாசாரியாரும் மன்னரும் வாலிபன் கேட்டவைகளை அவனிடம் ஒப்படைத்தார்கள். வாலிபனும் அவற்றைப் பெற்றுத் தனியிடத்தில், விக்கிரகம் உருவாக்கும் வேலையைத் தொடங்கினான்.

இரவு பகலாக வேலை நடந்தது. நான்காவது நாள்  அதிகாலையில் மன்னரும் தலைமைச் சிற்பி ஜக்கணாசாரியாரும் வந்தார்கள்; வந்தவர்கள், வாலிபன் உருவாக்கி முடித்திருந்த ‘சௌமிய நாராயணர்’ விக்கிரகத்தைப் பார்த்தார்கள்; பிரமிப்பில் ஆழ்ந்தார்கள். காரணம்?வாலிபன் உருவாக்கியிருந்த விக்கிரகம், ஜக்கணாசாரியார் முன்பு உருவாக்கியிருந்த விக்கிரகத்தை விடப் பன்மடங்கு சிறந்ததாக இருந்தது. அதற்குள் கும்பல் கூடிவிட, புது விக்கிரகத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

ஜக்கணாசாரியார், வாலிபனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார்; ‘‘அப்பா! நீ என் கௌரவத்தை  மட்டுமல்ல; இந்த நாட்டின் கௌரவத்தையே காப்பாற்றி விட்டாய். மகாசிற்பி நீ! மகாசிற்பி நீதான்! இனிமேல் நான், உனக்கு உதவியாளனாக, அதாவது நீ ஏவியதைச்செய்யும் வேலைக்காரனாக இருப்பேன். அது எனக்குப் பெருமையே” என்றார்.

அதைக் கேட்ட வாலிபன் பதறினான்; ‘‘அப்பா! அப்படிச்  சொல்லாதீர்கள்! நான் உங்கள் மகன்; என்றென்றைக்கும் உங்களுக்குத் தொண்டு செய்யக் கடமை பட்டவன்; என்னிடம் உள்ள இந்த வித்தைகள் அனைத்தும், உங்கள் அருளால் கிடைத்தவையே! இதோ! பாருங்கள்! எனக்கு ஒருவயதானபோது, ஆண்டுநிறைவு விழா வைபவத்தின்போது, நீங்கள் என் கழுத்தில் அணிவித்ததங்கச் சங்கிலி! பாருங்கள்!” எனக் கூறி, தன் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியைக் காட்டி, தந்தையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.

ஒருவிநாடி நேரம்! மகன் காட்டிய தங்கச்சங்கிலியையும் அவனையும் பார்த்து, பல ஆண்டுகளுக்கு முன்னால்  நம்மைவிட்டு  பிரிந்த மகன்தான் இவன் என்பதை உணர்ந்து கொண்டார் , ஜக்கணாசாரியார்; உணர்ச்சிப் பெருக்கில் பாசத்தோடு, ‘‘மகனே!” எனக்கூவி,  மகனைக் கட்டித் தழுவினார். பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆரவாரம் செய்தது.

மன்னரோ ஜக்கணாசாரியாரிடம், ‘‘சுவாமி! இப்படிப்பட்ட உயர்ந்த சிற்பியை மகனாகப் பெற்ற நீங்கள், புண்ணியசாலி! உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மாடு பிறக்கும்போதே இருக்கும் காது, வலிமையாக இருப்பதில்லை. ஆனால், அதன்பிறகு முளைக்கும் கொம்பு, மிகவும் வலிமை உள்ளதாக இருக்கும். அதுபோல, உங்கள் மகன் உங்களை விடத் திறமைசாலியாக இருக்கிறான்” என்று மனமாறப் பாராட்டிக் கைகளைக் குவித்து வணங்கினார்.

அடியார்களின் வாழ்த்தொலி, ஆகாயத்தில் எதிரொலித்தது.தந்தையும் மகனுமாக உருவாக்கிய, வியப்பூட்டும் கலைநயம் மிக்க தெய்வீகப் படைப்புகளைக் கர்நாடகத்தில் உள்ள பேலூரில் இன்றும் தரிசிக்கலாம்!தம்மில் தம் மக்கள் அறிவுடைமைமாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது- நம்மைவிட நம் குழந்தைகள் அறிவாளிகளாக இருப்பது, உலகத்து உயிர்களுக்கெல்லாம் இனிமை தரும் - எனும் திருக்குறளுக்கு இலக்கணமான வரலாறு இது.

Tags : Belur Art Temple ,
× RELATED ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்