×

சிவராத்திரியின் தத்துவம்


சிவன் என்றால், முழுமையானது, மங்கலகரமானது என்று பொருள். சிவன் என்ற சொல்லிற்கு “எது இல்லாததோ அது” என்று அர்த்தம். சிவ ராத்திரி என்பது மங்கள ராத்திரி என்று வரும்.சர்வ மங்களங்களையும் உயிர்களுக்கு அருளும் நாள் சிவராத்திரி. சிவனைக் குறித்து முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமர் கடவுள் என பல படியாக சங்கநூல்களில் வரும். எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதால் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் சித்தரிக்கப்படுவதால், பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார். பித்தா பிறைசூடி என்பது தேவாரம்.

சக்தியாகிய உமை அம்மை, சிவமாகிய மங்களமருளும் ஈசனை நோக்கி தவமிருந்த ராத்திரி சிவராத்திரி. சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள். எட்டு வகை விரதங்களில் மகத்தான தலையாய விரதம் சிவராத்திரி.

சிவராத்திரியில் மூன்று செய்திகள் இருக்கின்றன. ஒன்று இரவு. இன்னொன்று தேய்பிறை இரவு. மூன்றாவது தேய்பிறை சதுர்த்தசி என்பதால் அமாவாசைக்கு நெருக்கமான இரவு. (மகா சிவராத்திரி விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.)இந்த இருட்டில் இருந்து சிவமாகிய மங்கலத்தை அருட் பெரும் ஜோதியாகிய வெளிச்சத்தை நோக்கி உயிர்களின் முயற்சி நடக்கிறது. அதற்கான பிரார்த்தனை விரதம் தான் சிவராத்திரி விரதம்.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மாலை முதல் மறுநாள் காலை வரை தொடர்ந்து ஒவ்வொரு ஜாமத்தில் சிவபெருமானுக்கு பழங்கள், வில்வ இலை, இனிப்புகள் மற்றும் பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, ருத்ராட்சம் உள்ளிட்ட பொருட்களால் சிவ பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படும். ஒவ்வொரு ஜாமம் பூஜை முடிந்ததும் அலங்காரம் செய்யப்படும். பின்னர் மீண்டும் அடுத்த ஜாம அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.

இருட்டு என்பது அறியாமையைக் குறிக்கும். அஞ்ஞானத்தைக் குறிக்கும். மயக்கத்தைக் குறிக்கும். அயர்வைக் குறிக்கும். தீர்மானமில்லாத தன்மையைக் குறிக்கும். குழப்பமான சிந்தனைகளைக் குறிக்கும். தூக்கத்தைக் குறிக்கும். துக்கத்தைக் குறிக்கும். அதனால்தான் துக்கத்தின் அடையாளமாக கறுப்புத் துணியை வெட்டி ஆடையிலே குத்திக்கொள்கிறோம்.

இந்த துக்கம் நீங்கவும், அயர்வு நீங்கவும், அறியாமை அகலவும், துணிவு பிறக்கவும், தொல்லைகள் தொலையவும் , நன்மைகள் விளையவும், பிரார்த்தனை செய்கின்ற ராத்திரி சிவராத்திரி.உயிர்கள் தாயின் கருவறையில் இடர்ப்படுகின்றன. கரு என்பது கருமையைக் குறிப்பது போலவே உயிர்களையும் குறிக்கும்.அந்தக் கரு ஒரு தாயின் கருப்பையில் போராடுகிறது. அந்த போராட்டத்தின் விளைவாக அதன் பிறப்புக்கு ஒரு வெளிச்சம் கிடைக்கிறது. தாயின் கருவறை எத்தனை புனிதமானதோ, அத்தனை புனிதமானது தெய்வத்தின் கருவறை.

அதனால்தான் ஆகம விதிகளில் தெய்வத்தின் கருவறைகளை வெளிச்சம் இல்லாத, காற்று இல்லாத, குறுகிய ஒரு இடத்தில் வைத்தார்கள்.
அந்தக் கருவறையை, இந்தக் கருவறையில் இருந்து பிறந்தவர்கள் நினைக்கும் பொழுதுதான், இன்னொரு கருவறையில் சேராத ஒரு ஞானம் பிறக்கும். இருட்டில் இருக்கின்ற பொழுது ஏதேனும் ஒரு சிறிய வெளிச்சம் கிடைத்தாலும் அதை நோக்கி நம்முடைய சிந்தை திரும்பும். சிவராத்திரி ஆகிய அந்த இருட்டில், நாம் செய்கிற பிரார்த்தனையால், வெளிச்சமாகிய சிவனை நோக்கி சிந்தை திரும்பும். சிக்கல்கள் அகன்று ஆன்மாக்களாகிய சீவர்களுக்கு சிவமருள் என்னும் வெளிச்சம் கிடைக்கும்.இந்த தத்துவத்தை நோக்கிய ஆன்மீகப்பயணம் தான் சிவராத்திரி.

பாரதிநாதன்

Tags :
× RELATED வானில் ஓர் உரையாடல்