ஜெயதேவர் பூஜித்த ராதா மாதவன்!

சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். கி.பி. 1670 ஆம் ஆண்டில், வட இந்தியாவில், ஸ்திரமாக

நின்றுவிட்ட முகலாய சாம்ராஜ்ஜியத்தை, ஔரங்கசீப் கோலோச்சிய காலம் அது. கண்ணன் கழலை பாடினால் கல்லும் உருகும் என்பது பக்தியில் திளைக்கும் முக்தர்கள் கண்ட நிஜம். ஆனால் அவுரங்கசீப்பை கண்ணனின் கருணை ஆட்கொள்ளாதது வியப்பு தான். கண்ணன் ஆடிப் பாடி ஓடி பல லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தையும், அதில் இருக்கும் கண்ணன் கோவில்களையும் , அழிக்க கட்டளையிட்டான் ஔரங்கசீப். இந்தக் கொடூரமான கட்டளையை விதிக்க அவனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ?. அதை அந்த மாயவன்தான் அறிவான்.

ஔரங்கசீப்பின் இந்தக் கொடூர கட்டளை, பிருந்தாவனத்தை எட்டியது. உலகிற்கே காவலாக இருக்கும் தெய்வத்தை, காக்க என்ன செய்வது என்று விளங்காமல் அங்கிருந்த பக்தர்கள் திண்டாடினார்கள். அவர்களுக்கு அப்போது கண்ணன் அருளால், தெரிந்த ஒரே வழி, பிருந்தாவனத்துக் கோவில்களில் இருக்கும் கிருஷ்ண விக்ரகத்தை ஜெய்ப்பூருக்கு அதாவது, ராஜபுத்திரர்களின் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வது தான். அதன்படியே, பிருந்தாவனத்தில் இருந்த பல கிருஷ்ணன் கோவிலின் மூர்த்தங்கள் ஜெய்ப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டில் நடக்கும் இந்த அமளி துமளியை சாக்காக வைத்துக் கொண்டு, பிருந்தாவனத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து சேர்ந்தான், நமது கதையின் நாயகன் ராதாமாதவன்.

ராதா மாதவன்! ஆஹா! பெயரே இவ்வளவு இனிமையாக இருக்கும்போது, அந்த அண்ணலின் திருமேனியை தனியாக வர்ணிக்க வேண்டுமா என்ன? விஸ்வாமித்திரர் தனது யாகத்தை காக்க வேண்டி ராமனைத் தருமாறு தசரதனைக் கேட்கிறார். அதை எப்படிக் கேட்கிறார் பாருங்கள்.‘‘நின் சிறுவர் நால்வரில் கரிய செம்மலை தருதி” என்று கேட்டாராம் விஸ்வாமித்திரர்.

ராமனைத் தா என்று கேட்கவில்லை கரிய செம்மலைத் தா என்று கேட்கிறார். கருணையையும் அருளையும் மழையாகப் பொழியும் கார்மேகம் அல்லவா அந்த மாயவன்?. அவன் நிஜ உருவைப்போல, இந்த சிலை உருவமும், அடர் கருப்பு நிறம் தான். இரண்டு கைகள். குழல் ஊதும் மோகன ரூபம். ஒரு காலை ஊன்றி, மற்றொரு காலை ஒய்யாரமாக மாற்றி வைத்தபடி நிற்கும் அற்புதத் தோற்றம். ராதை இல்லாத கண்ணனா? என்று கேட்கத் தேவையே இல்லை என்பது போல, கூடவே ராதா ராணியும் இருக்கிறாள். அவளது திருமேனி செம்பால் ஆனது. சரி இவனது வரலாற்றை சற்று விஸ்தாரமாகப் பார்ப்போமா?

அஷ்டபதி என்று பக்தர்களால் அன்போடு போற்றப்படும் ‘‘கீத கோவிந்தம்” என்னும் தெய்வீகக் காவியம் இருக்கிறது இல்லையா? அதைப் படைத்த ஜெயதேவர் என்ற மகான், தனது கர மலரால் நித்தம் நித்தம் புத்தம் புதிய மலர்களால் அலங்கரித்து, பக்தி வழிய வழிய பூஜித்த மூர்த்திதான் இந்த ராதா மாதவன்.

இந்த ராதாமாதவன், தனது பக்தர்கள் படும் கஷ்டத்தை ஒருநாளும் பொறுப்பது இல்லையாம். ஆம், ஒருமுறை ஜெயதேவர் பூஜைகளை

எல்லாம் முடித்துவிட்டு, வீட்டின் கூரையை, திருத்திக்கொண்டிருந்தார். கடமையில் கண்ணாக இருந்த ஜெயதேவர், தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துத் தருவது அவரது மனைவி பத்மாவதி என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆகவே, கவலை இல்லாமல், கீழிருந்து கூரையில் இருந்த அவருக்குத் தரப்படும் மூங்கிலையும் வைக்கோலையும் கயிறுகளையும் வேகவேகமாக வாங்கிக் கூரையை திருத்தி முடித்தார். வேலை முடிந்தவுடன் கீழே வந்தவர், பத்மாவதி அம்மையாரைத் தேடினார்.

ஆனால், அம்மையாரைக் காணவில்லை. ‘‘பத்மாவதி பத்மாவதி” என்று அழைத்தார் ஜெயதேவர். ‘‘இதோ வந்துவிட்டேன் சுவாமி” என்று சமையலறையில் இருந்து சத்தம் வந்தது. ஜெயதேவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. இவ்வளவு நேரம் நமக்கு உதவி செய்தவள், அதற்குள் எப்படி சமையலறைக்கு சென்றாள்? என்று குழம்பினார். அப்போது பத்மாவதி அம்மையார் முந்தியில் கைகளை துடைத்துக் கொண்டு வருவதைக் கண்ட ஜெயதேவருக்கு, அம்மையார் சமைத்துக் கொண்டிருந்தார் என்பது புரிந்தது. இருந்தாலும் உள்ளத்தின் ஓரத்தில் இருந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக ‘‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று வினவினார்.

‘‘மதியத்திற்கான உணவு தயார் செய்து கொண்டிருந்தேன், சுவாமி” என்று அன்போடு சொன்னார் பத்மாவதி தேவியார்.

‘‘அப்போது, நான் கூரையைத் திருத்தும்போது, எனக்கு உதவியது...”‘‘நீங்கள் கூரையைத் திருத்தும் சங்கதியே நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் சுவாமி. சொல்லியிருந்தால் உதவி செய்திருப்பேன்” என்ற பத்மாவதி அம்மையாரின் பதில் அவரை மேலும் குழப்பியது. குழம்பியபடியே பூஜை அறைக்கு நடந்தார். அங்கே அவர் பூஜிக்கும் ராதாமாதவன் அழகாக தரிசனம் தந்துகொண்டிருந்தான்.

முகமெல்லாம் வியர்த்து வழிய, காலை நேர பூஜையின்போது, சாற்றி இருந்த பட்டாடைகளும் பலவகை அணிகளும் கலைந்திருக்க, ஓயாமல் கயிறையும் மூங்கிலையும் அறுத்துத் தந்ததால் கைகள் சிவந்திருக்க, காட்சி தந்தது ராதாமாதவனின் விக்ரகம். நொடியில் ஜெயதேவருக்கு கூரையைத் திருத்த தனக்கு உதவியது சாட்சாத் அந்த ராதாமாதவன்தான் என்று விளங்கியது. உடனே, அவனது காலில் விழுந்து அரண்டு புரண்டு வேதனைப்பட்டார். மாதவனின் கை நொந்ததோ! சிங்கார செம்பாதம் நொந்ததோ என்று திண்டாடினார்.

இந்தச் செவிவழிக் கதையை கேட்டு உள்ளம் குழைகிறது இல்லையா? தனது பக்தன் படும் பாட்டைக் கண்டு தான் வலியச் சென்று உதவிய அந்தச் செம்மலை கண்ணாரக் காண மனம் ஏங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வளவு மகிமை வாய்ந்த இந்த கிருஷ்ணனின் திருமேனி ஔரங்கசீப்பின் படையெடுப்பின் காரணமாக பிருந்தாவனத்தில் இருந்து ஜெய்ப்பூருக்குக் கொண்டு வரப்பட்டது.

 ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில், ஆரவல்லி மலைத்தொடரின், பள்ளத்தாக்கில் அழகான காடுகள் பல உள்ளது. அங்கே பூத்துக் குலுங்கும் வண்ண மலர் சோலைகள் பல உண்டு. இவை அனைத்தும் பரந்தாமன் லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தைப் போன்றிருக்கும். இதன் எழிலில் மயங்கிய மகாராஜா, சவாய் ஜெய் சிங், இந்தக் காடுகளை திருத்தி மேலும் மெருகேற்றி, அதற்கு ‘‘கனக பிருந்தாவனம்” என்று திருப்பெயர் இட்டான். இந்த கனக பிருந்தாவனத்தில்தான் கண்ணன் விளையாடிய பிருந்தாவனத்து பூஜா மூர்த்தங்கள் வைக்கப்பட்டன. அப்படி பிருந்தாவனம் விட்டு கனக பிருந்தாவனம் வந்த மூர்த்தங்கள் அநேகம். அவற்றுள் கோவிந்ததேவன், மதன மோகனன் என்ற விக்ரகங்கள் முக்கியமானவை.

இப்படி பிருந்தாவனம் விட்டு கனக பிருந்தாவனம் வந்த மூர்த்தங்கள் நாட்டில் சமநிலை ஏற்பட்டதும், மீண்டும் பிருந்தாவனம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பல மூர்த்தங்களுக்கு, ஜெய்ப்பூரிலேயே நிலையான கோவில்கள் அமைந்துவிட்ட படியால், அவை மீண்டும் பிருந்தாவனம் எடுத்துச் செல்லப்படவில்லை. திரும்பி வராத இந்த மூர்த்தங்கள் பிருந்தாவனத்தில் இருந்த இடத்தில், வேறு ஒரு புதிய மூர்த்தங்களை நிறுவி மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள். மொத்தத்தில் பிருந்தாவனம் மட்டும் இல்லாமல், ஜெய்ப்பூரையும் தன் இருப்பிடமாக மாற்றிக் கொள்ள, கண்ணன் ஆடிய நாடகம் இது, என்றால் அது மிகையில்லை.

பிருந்தாவனத்தில் புதிதாக நிறுவப்பட்ட பிம்பங்கள், முதலில் அங்கு இருந்தவை இல்லை என்பதை காண்பவர்கள் உணரவேண்டும் இல்லையா? அதற்காக, புதிதாக பிருந்தாவனத்தில் நிறுவப்பட்ட அனைத்து பிம்பங்களும் உண்மையான பிம்பங்களை விட உருவில் சிறியதாக வடிவமைக்கப் பட்டது.

ஜெயதேவரால் பூஜிக்கப்பட்ட நமது கதாநாயகனான ராதா மாதவனும், பிருந்தாவனம் விட்டு கனக பிருந்தாவனம் வந்தவன்தான். அவ்வாறு வந்தவன் இங்கேயே தங்கிவிட்டபடியால், அவன் முதலில் இருந்த இடத்தில், அவனைப் போலவே ஒரு சிறிய பிம்பத்தை நிறுவினார்கள்.

மொத்தத்தில், நாம் ராதாமாதவனை இரண்டு இடத்தில் தரிசிக்கலாம். ஒன்று ஜெய்ப்பூரில் இருக்கும் கனக பிருந்தாவனத்தில். மற்றொன்று கண்ணன் லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தில். ஜெய்ப்பூரில் அவன் குடிகொண்ட கோவில் ராதாமாதவன் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. உண்மையான பிருந்தாவனத்தில், அவன் ராதா தாமோதரன் கோவிலில் சேவை சாதித்துக் கொண்டிருக்கிறான். ஜெயதேவர் பூஜித்த அந்த மறைபொருளை அவர் மோட்சமடைந்த நன்னாளில் (03-02-2021) நினைத்து நிம்மதி பெறுவோம்.

ஜி.மகேஷ்

Related Stories:

More
>