×

இறந்தவரை பிழைக்க வைக்கும் இரக்கமிகு கலைவாணி!

வசந்த பஞ்சமி 16-2-2021

ஒருமுறை, (ஒட்டக்)கூத்தரின் வம்சத்தினர், ஒன்றுகூடி கூத்தரிடம் சென்றார்கள். அவர்கள் கூத்தரிடம், “ஐயா புலவரே! நீங்கள் நமது வம்சத்தை போற்றி, ஒரு பாடல் கூட பாடவில்லையே! எங்களுக்காக ஒரே ஒரு பாட்டாவது பாடக்கூடாதா?” என்று கேட்டார்கள். “நீங்கள் கேட்பது நியாயம் தான். நானும் பாடவேண்டியதுதான். ஆனாலும், என் பாட்டுக்கு யார் பரிசு தருவார்கள்.” என்று கூத்தர் பதில் உரைத்தார். கூத்தரின் இந்த பதிலால் வெகுண்ட அவரது வம்சத்தினர்கள்,  ‘‘நாங்கள் கையால் ஆகாதவர்கள் இல்லை கூத்தரே, எங்களால் அளவற்ற பொருளைத் தரமுடியும்” என்றார்கள். “உங்களால் தரமுடியும் என்பதை நான் அறிவேன். ஆனால் , எனக்கு சோழராஜன் தந்த செல்வங்களே நிறைய இருக்கும்போது, நீங்கள் தரும் பொருளுக்கு அவசியமே இல்லை. வேண்டும் என்றால் ஒன்று செய்யுங்களேன்.”

“ஆணையிடுங்கள் கூத்த பிரானே'' ஒரே குரலில் ஆர்வத்தோடு இடையிட்டார்கள் கூத்தரின் குலத்தவர்கள். “நமது குலத்தில் பிறந்த, எழுபது தலைச்சம் பிள்ளைகளின் தலையை அறுத்து கொண்டு வாருங்கள். நான் பாடுகிறேன்” என்று குறும்பாக குறுநகை பூத்தபடியே மொழிந்தார் கூத்தர். படிக்கும் நமக்கே குலை நடுங்குகிறதே, காதால் கேட்டஅவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். பயந்த அவர்கள் பின்வாங்கினர். இதைக் கவனித்த கூத்தருக்கு தான் செய்த தவறு விளங்கியது. தவறுக்குப் பிராயச்சித்தம், பரிசு இல்லாமல் பாடுவதே என்று முடிவு கட்டினார். தனது கணீர் குரலில், தனது குலத்தின் பெருமையை பாட ஆரம்பித்தார். அவர் பொழியும், அமுத கவி மழையைக் கேட்டு, அனைவரும் சொக்கிப்போய் நின்றிருந்தார்கள். கூத்தரின் மாணவர்கள், அவர் சிந்தும் அமுத கவித்துளிகளை, சேகரித்துக் கொண்டார்கள். அதாவது குறித்து வைத்துக்கொண்டார்கள்.

கவியில் ரௌத்திர ரசத்தை இழைத்துப் பாட ஆரம்பித்தார் கூத்தர். அதைக் கேட்ட அவரது குலத்தவர்களுக்கு சூரத்தனமும், ரோஷமும் பொங்கி வழிந்தது. பாட்டில் இருக்கும் உணர்ச்சி, பாட்டை கேட்பவனுக்கும் ஏற்படுவது தானே ஒரு கவிஞனின் உண்மையான வெற்றி?. அந்த வெற்றியை, கூத்தபிரான் அனாயாசமாக பெற்றுவிட்டார். வாணியின் அருள் சாதாரணமானதா என்ன? அவள் அருளால் கவி பாடும் கூத்தருக்கு இது சர்வ சாதாரணம் இல்லையா? அவர் கடமையே கண்ணாக பாடிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட அவரது குலத்தவர்களின் சூரத்தனமும் ரோஷமும் உச்சத்தை அடைந்தது. இமைப்பினில்ஈட்டியை கையில் எடுத்தார்கள். அவர்களது குலத்தவர்களின் தலைச்சன் பிள்ளைகள் எழுபது பேரின் சிரத்தை வெட்டி சாய்த்தார்கள். அதைக் கண்ட கூட்டம் ஸ்தம்பித்து நின்றிருந்த போது, கூத்தர் அறுபத்தி ஒன்பது பாடல்கள் பாடி முடித்திருந்தார். நடந்ததை அறிந்த அவர் வழக்கம் போல ஒரு மர்மப் புன்னகை பூத்தார்.

வாணியின் அருளால் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது என அனைத்தும் அறிந்தவர் இல்லையா? ஆகவே அவரிடம் இந்த பக்குவம் இருப்பது ஆச்சரியமான ஒன்று இல்லை. மெல்ல தனது மாணவர்கள் பக்கம் திரும்பிய அவர், பேச ஆரம்பித்தார். “இந்த எழுபது தலைகளையும் முண்டங்களையும் எடுத்துக்கொண்டு என் பின்னே வாருங்கள்” என்று மாணவர்களுக்கு கட்டளையிட்டார். மாணவர்கள், தலையையும், முண்டங்களையும் பொறுக்கி ஒரு கூடையில் போட்டுக் கொள்ளும் வரை காத்திருந்தவர், வேகமாக நடக்க ஆரம்பித்தார். தலைகளோடு கூடிய கூடையுடன், மாணவர்களும் மற்றவர்களும் அவரை பின்தொடர்ந்தார்கள். நேராக ராஜவீதிக்கு வந்தார் கூத்தர். அந்த எழுபது மண்டையோடுகளையும், சிம்மாசனம் போல அடுக்கச் சொன்னார். நடக்கும் அமளி துமளி மன்னன் காதுகளை எட்டியது. பதறிக் கொண்டு வந்தான் அவன். “கூத்தரே, என்ன கூத்து இது?” என்று மேல் மூச்சும் கீழ் மூச்சும் இரைக்க கேட்டான். அவனுக்கும், கூத்தரின் மர்மப் புன்னகையே பதிலாக அமைந்தது.

மெல்ல அந்த தலை சிம்மாசனத்தில் அமர்ந்தார் கூத்தர். தனது ஆராதனா தெய்வமான சரஸ்வதியை எண்ணி தியானித்தார். அவள் மீது இருந்த நம்பிக்கையால், அவரது முகம் தெளிவாக பிரகாசத்தோடு இருந்தது. அவரது முகம், கொஞ்சம் கூட அச்சத்தையோ, பயத்தையோ காட்டவில்லை. அவரது இதழ்கள் மெல்லப் பாட ஆரம்பித்தது.

“கலைவாணி நீயுலகில் இருப்பதுவுங்
கல்வியுணர் கவி வல்லோரை
நிலையாகப் புரப்பதுவு மவர் நாவில்
வாழ்வதுவும் நிசமே அன்றோ
சிலைவாண னாவிருந்தா யிரம்புயங்க
டுணிந்து முயர் சீவனுற்றான்
தலையாவி கொடுத்திடும் செங்குந்தருயிர்
பெற்றிட நீ தயை செய்வாயே”

என்று பாடி முடித்து விட்டு, தலைகளால் ஆன சிம்மாசனத்தை விட்டு எழுந்தார் கூத்தர். அவர் எழுந்ததுதான் தாமதம். சிம்மாசனத்தின் அங்கமாக இருந்த தலைகள், உடன் பறந்து சென்று, தனது உடலோடு சேர்ந்து கொண்டது. உடலை, தலை சென்றடைந்ததும் உயிரும் இமைப்பினில் வந்தது. அந்த எழுபது பேரும் உறக்கத்தில் இருந்து விழிப்பது போல எழுந்தார்கள். கூட்டமேவாய் பிளந்த படி, நடப்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தது. தலை வேறு முண்டம் வேறாக இருந்ததை வாணியை பாடி, அவள் அருளால் ஒட்டச் செய்ததால் கூத்தருக்கு, “ஒட்ட வைத்த கூத்தர்” என்ற பெயர் ஏற்பட்டு, அது “ஒட்டக் கூத்தர்” என்று மருவிப் போனது. மேலும், அவர் தலைகளால் அமைந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, “ஈட்டி எழுபது”, என்ற நூல் பாடியதால் அவருக்கு “சிர சிம்மாசனாதிபதி” ( தலையால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்தவர்) என்ற பட்டம் வழங்கப் பட்டது. இப்படி, இரந்தவர்களையும் பிழைக்கச் செய்யும், இரக்கம் மிகுந்த தெய்வமான கலைவாணியை, அவளுக்கு உகந்த வசந்த பஞ்சமி (16-2-2021) நாளில் வணங்கி வாழ்வில் வளமான சௌபாக்கியங்களைபெறுவோம்.

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்