×

ஆர்.கொல்லபட்டியில் உடைந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைத்து தர வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே ஆர்.கொல்லபட்டியில் தரைப்பாலம் உடைந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், மழைகாலம் தொடங்கும் முன்பு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக ஆர்.கொல்லபட்டி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் இக்கிராமத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேலைக்கு, படிக்கும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை அகற்றி, இவ்வழித்தடத்தில் புதிய பாலம் கட்டித் தர வேண்டும் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து காந்திராஜன் எம்எல்ஏ நேரில் சென்று உடைந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி அதிகாரிகளிடம் புதிய பாலம் கட்ட மதிப்பீடு அறிக்கை (எஸ்டிமேட்) தயார் செய்து பாலம் உடனடியாக கட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து பாளையம் பேரூராட்சி சார்பில், புதிய பாலம் கட்டுவதற்கு மதிப்பீடு அறிக்கை தயார் செய்து, பேரூராட்சி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதிய பாலம் கட்டும் பணி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால் தரைப்பாலம் உடைந்து கடந்த ஒரு வருடம் ஆகியும் இன்னும் பாலம் கட்டும் பணி துவங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இனி வரும் மாதங்களில் மழை காலம் துவங்க உள்ளது. மழை அதிகளவு பெய்யும் போது வறட்டாற்றில் வரும் மழைநீர் உடைந்த தரைப்பாலம் வழியே பெருக்கெடுத்து ஓடும். இதனால் இக்கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். இது மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவர்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படும். எனவே ஆர்.கொல்லபட்டி கிராம மக்கள் போக்குவரத்திற்கு, மழை காலம் தொடங்கும் முன்பாக புதிய பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை துவங்க பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆர்.கொல்லபட்டி தரைப்பாலம் வழியாக வறட்டாறு செல்கிறது. இந்த வறட்டாறு கோம்பைமலைப்பகுதியில் மழை பெய்தால் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும். தரைப்பாலம் இருந்த பொழுதே தரைப்பாலத்தின் மீது தான் வெள்ள நீரானது செல்லும். இந்நிலையில் தற்பொழுது பாலம் முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளது. கொல்லப்பட்டி கிராம மக்கள் இந்த பாலத்தை போக்குவரத்திற்காக முழுவதுமாக நம்பி உள்ளனர். இந்த பாலம் சேதமடைந்து உள்ளதால் அருகில் மண் சாலையை அமைத்து தற்காலிகமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். ஆபத்து காலங்களில் மருத்துவ உதவிக்காக கார், வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவது என்பது கடினமான ஒன்று. ஆற்றில் வெள்ளம் வராத போது தான் இந்த நிலை. இதே மழைக்காலம் தொடங்கிவிட்டால் நிலைமை இன்னும் மோசம். தரைப்பாலத்தை முழுவதும் வெள்ளம் செல்லும். கொல்லப்பட்டி கிராம மக்கள் குஜிலியாம்பாறையை தான் சுற்றி செல்ல வேண்டும். பழுதடைந்த பாலம் சீரமைக்கப்படாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே உடைந்த இந்த பாலத்தை சீரமைத்து வெள்ளம் வந்தாலும் பாதிக்காத வகையில் புதிய பாலம் அமைத்து தர வேண்டும்’’ என்றனர்….

The post ஆர்.கொல்லபட்டியில் உடைந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைத்து தர வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : R. Kollapatti ,Kujiliamparai ,Kujiliambarai ,
× RELATED குஜிலியம்பாறை ஆர்.கொல்லபட்டியில் ரூ.1.59...